கங்குவா ரஜினிக்கான கதையா? ஆடியோ லான்ச்சில் ரஜினியே சொன்ன தகவல்.. ஷாக்கில் ரசிகர்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கங்குவா ரஜினிக்கான கதையா? ஆடியோ லான்ச்சில் ரஜினியே சொன்ன தகவல்.. ஷாக்கில் ரசிகர்கள்

கங்குவா ரஜினிக்கான கதையா? ஆடியோ லான்ச்சில் ரஜினியே சொன்ன தகவல்.. ஷாக்கில் ரசிகர்கள்

Malavica Natarajan HT Tamil
Published Oct 27, 2024 09:00 AM IST

கங்குவா திரைப்படத்தின் கதை சிறுத்தை சிவா எனக்காக தயார் செய்த கதையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் பேசி பரபரப்பை அதிகரித்துள்ளார்.

கங்குவா ரஜினிக்கான கதையா? ஆடியோ லான்ச்சில் ரஜினியே சொன்ன தகவல்.. ஷாக்கில் ரசிகர்கள்
கங்குவா ரஜினிக்கான கதையா? ஆடியோ லான்ச்சில் ரஜினியே சொன்ன தகவல்.. ஷாக்கில் ரசிகர்கள்

இசை வெளியீட்டு விழா

கங்குவா படத்தில் திஷா பதானி கதாநாயகியாகவும், அனிமல் திரைப்படப் புகழ் நடிகர் பாபி தியோல் வில்லனாகவும் நடித்திருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள, இப்படத்திற்கு தேவிஸ்ரீபிராசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தில் இருந்து ஏற்கனே 2 பாடல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், படத்தின் நாயகன் சூர்யா, திஷா பதானி மற்றும் சக நடிகர்கள், படக்குழுவினர், நடிகர் சிவக்குமார், கார்த்தி, கருணாஸ், போஸ் வெங்கட், ஆர்.ஜே. பாலாஜி, மதன் கார்க்கி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை வாழ்த்தி பேசிய வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது.

வித்தியாசமான படங்களை தயாரிக்கும் ஞானவேல்

அதில் பேசிய ரஜினி, ஞானவேல் ராஜாவை பருத்தி வீரன் படம் எடுத்த சமயத்தில் இருந்தே எனக்கு தெரியும். வித்தியாசமான படங்களை எடுக்க வேண்டும் என்பது அவரின் ஆசை. அவரின் ஆசையை பருத்தி வீரன் படத்திலே நீங்கள் பார்த்திருக்கலாம். கங்குவா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியுமா என்று அவர் என்னிடம் கேட்டார். படப்பிடிப்பில் இருப்பதால் கலந்து கொள்ள இயலவில்லை. அதனால் தான் இந்த வீடியோ மூலம் பேசுகிறேன் என்றார்.

கங்குவா எனக்கான கதை

மேலும் பேசிய அவர், சிறுத்தை சிவாவுடன் இணைந்து நான் அண்ணாத்த படத்தில் பணியாற்றினேன். அந்த படம் எடுத்த சமயத்தில் 20– 30 படங்களில் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றியது போல ஒரு நெருக்கம் எங்களுக்குள் ஏற்பட்டது. அவரைப் போன்ற ஒரு நல்ல மனிதரை திரையுலகில் பார்க்கவே முடியாது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். அண்ணாத்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தான் எடுத்தோம். அந்த சமயத்தில் நான் சிவாவிடம், எனக்காக நீங்கள் ஒரு பீரியட் படம் பண்ணுங்கள் என்றேன். அவரும் சரி என சொன்னார். அப்படிப் பார்த்தால் கங்குவா எனக்காக தயார் செய்யப்பட்ட கதையாகக் கூட இருக்கலாம் என நினைக்கிறேன் என்றார்.

ஒழுக்கமானவர் சூர்யா

தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், இயக்குநர் சிவா எனக்காகவும் ஒரு கதையை உருவாக்குவார் என நம்புகிறேன். சூர்யாவின் ஒழுக்கம், கண்ணியம், நேர்மை, அறிவு அனைவருக்கும் தெரிந்தது. அவரைப்போன்ற ஒருவரை யாராலும் பார்க்க முடியாது. சூர்யாவை பொறுத்தவரை வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் அவரின் விருப்பம். அப்படி அவருக்கு கங்குவா படம் அமைந்துள்ளது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் எனப் பேசினார்.

தள்ளிப்போன ரிலீஸ்

முன்னதாக, நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், கங்குவா திரைப்படத்தின் ரிலீஸை தள்ளி வைப்பதாக நடிகர் சூர்யா கூறியிருந்தார்.

விளக்கமளித்த ரஜினி

இதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் படத்திற்காக எப்போது பூஜை போடப்பட்டதோ, அப்போதே படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என்பதை முடிவு செய்தோம். ஆனால் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நிறைய படங்கள் இருந்ததால் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதை நாங்கள் வேண்டுமென்றே செய்யவில்லை என கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.