இருக்கு இங்க சம்பவம் இருக்கு.. ஷங்கர் படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்ட தில் ராஜு..
இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்பதை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இந்தப் படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்குநர் ஷங்கர் எடுத்துள்ளார். ராம் சரண் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.
ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தில் ராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தில் ராஜ் மற்றும் ஷிரிஷ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த தில் ராஜு
இந்தப் படத்தை மெகா பவர் ஸ்டார் ராம் சரணின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அவர்களுக்கு நல்ல செய்தியை தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளார். அதாவது அவர் கேம் சேஞ்சர் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கியுள்ள இந்த பிரம்மாண்ட பட்ஜெட் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இருப்பினும், ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து சமூக வலைதளங்கள் மூலமும் படக்குழுவினரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், ட்ரைலர் எந்த நாளில் வெளியாகும் என்பதை தில் ராஜு அறிவித்துள்ளார். விஜயவாடாவில் ராம் சரணின் 256 அடி உயர பிரம்மாண்ட கட்அவுட் திறப்பு விழாவில் இதனை அறிவித்தார்.
ட்ரைலர் தேதி இதோ
புத்தாண்டு கொண்டாட்டமாக கேம் சேஞ்சர் படத்தின் ட்ரைலரை 2025 ஜனவரி 1 ஆம் தேதி வெளியிட உள்ளதாக தில் ராஜு தெரிவித்துள்ளார். கட்அவுட் வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் ட்ரைலர்.. ட்ரைலர் என்று கோஷமிட்டதையடுத்து தில் ராஜு இதனைக் கூறினார்.
கேம் சேஞ்சர் படத்தின் ட்ரைலர் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என்ற தில் ராஜு “ட்ரைலர் என்னுடைய போனில் உள்ளது. ஆனால் அது உங்களிடம் வரும் வரை நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. இப்போதெல்லாம் ட்ரைலர்தான் படத்தின் வரவேற்பை தீர்மானிக்கிறது. அந்த அளவுக்கு ட்ரைலரை கொடுக்க தயாராகிவிட்டோம். புத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி நீங்கள் ட்ரைலரைப் பார்ப்பீர்கள்” என்று கூறினார்.
பவனை சந்திப்பேன்.. வரலாறு படைக்கும் விழா
விஜயவாடாவில் கட்அவுட் வெளியீட்டு விழாவுடன் மற்றொரு பணிக்காகவும் வந்துள்ளேன் என்று தில் ராஜு கூறினார். கேம் சேஞ்சர் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்கு ஆந்திர துணை முதல்வர், பவர் ஸ்டார் பவன் கல்யாணை அழைப்பேன் என்றார். அவரிடம் பேசுவதற்காகவும் இங்கு வந்துள்ளேன் என்றார். கேம் சேஞ்சர் படத்தின் விழா வரலாறு படைக்கும் விதமாக இருக்கும் என்றார். அமெரிக்காவில் நடந்த விழா மிகப்பெரிய வெற்றியடைந்தது என்றும் தெரிவித்தார்.
பிரம்மாண்ட கொண்டாட்டம்
பவன் கல்யாண் தேதி கொடுத்த பிறகு கேம் சேஞ்சர் விழாவை திட்டமிடுவோம் என்று தில் ராஜு தெரிவித்தார். “முதலில் ஜனவரி 1 ட்ரைலர். பவன் கல்யாண் தேதி கொடுத்தால் ஜனவரி 4 அல்லது 5 ஆம் தேதி ஆந்திராவில் ஒரு மெகா விழா. ஜனவரி 10ம் தேதி படம் ரிலீஸ். பின் இந்த பொங்கல் பண்டிகையை கேம் சேஞ்சர் படத்துடன் பிரம்மாண்டமாக கொண்டாடுவோம்” என்றார்
3 மடங்கு வெற்றி
கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்று தில் ராஜு கூறினார். மெகாஸ்டார் சிரஞ்சீவி இன்று இந்த படத்தைப் பார்த்தார் என்றும், பொங்கலுக்கு மூன்று மடங்கு வெற்றி பெறுவது உறுதி என்று ரசிகர்களிடம் சொல்லச் சொன்னார் என்றும் கூறினார். “ஜனவரி 10 ஆம் தேதி மெகா பவர் ஸ்டாரில் மெகாவையும் பவரையும் நிச்சயம் பார்ப்பீர்கள்” என்று தில் ராஜு கூறினார். இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.