Director Shankar: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயோபிக்.. கில்லி, தூள் போல் பரபரப்பான மாஸ் கதை! ஷங்கர் சொன்ன விஷயம்
Director Shankar: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையை பயோபிக்காக உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ள இயக்குநர் ஷங்கர், கேம் சேஞ்சர் படம் உருவானதன் பின்னணி குறித்து விரிவாக பேசியுள்ளார்.

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் முதல் முறையாக இயக்கியிருக்கும் தெலுங்கு படமான கேம் சேஞ்சர் சங்ராந்தி ஸ்பெஷலாக ஜனவரி 10ஆம் தேதி (நாளை) திரைக்கு வருகிறது. தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பான் இந்தியா படமாக கேம் சேஞ்சர் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், இயக்குநர் ஷங்கர் சினிமா விகடன் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, இயக்குநர் ஷங்கரிடம் பயோபிக் படம் இயக்கினால் யாருடைய கதையை படமாக எடுப்பீர்கள் என கேட்கப்பட்டது. அப்போது யாரும் எதிர்பார்த்திராத நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையை படமாக்க விருபுவதாக தெரிவித்தார்.
ரஜினிகாந்த் பயோபிக்
இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் கூறியதாவது, "நான் பயோபிக் எடுக்க விரும்பினால் ரஜினிகாந்த் கதையை படமாக்க விரும்புகிறேன். அவர் மிக பெரிய மனிதர். எல்லோருக்கும் நன்கு தெரிந்தவர். இதுவரைக்கும் பயோபிக் பற்றி எதுவும் எனக்கு தோன்றவில்லை, நீங்கள் கேட்டவுடன் ரஜினி தான் என் நினைவுக்கு வந்தார். நானே இப்படி சொல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை" என்றார். ஷங்கரின் இந்த கருத்து ரஜினி ரசிகர்களை குஷியடைய செய்துள்ளது.