Shankar: சிலை செதுக்குவது போல்தான் சினிமாவும்.. விமர்சனங்களை பார்க்காமல் படம் பார்ப்பது தனி அனுபவம் - இயக்குநர் ஷங்கர்
Director Shankar: யாருடைய கருத்தும் கேட்காமல் நேரடியாக படம் பார்ப்பேன். விமர்சனங்களை பார்க்காமல் படம் பார்ப்பது தனி அனுபவம் தான். எனது கனவு படமாக வேள்பாரி கதையை உருவாக்கவுள்ளேன் என்று இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

பிரமாண்ட இயக்குநர் என்ற ரசிகர்களால் அழைக்கப்படும் ஷங்கர், தனது படங்களால் இந்தியா திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்தவராக இருந்துள்ளார். வலுவான திரைக்கதை, காட்சியமைப்பு, புதிய தொழில்நுட்பங்கள் என தன் படங்களில் மூலம் பார்வையாளர்கள் பிரமிக்க வைத்த ஷங்கர் முதல் முறையாக இயக்கியிருக்கும் நேரடி தெலுங்கு படமான கேம் சேஞ்சர் பொங்கலுக்கு வெளியானது.
படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தபோதிலும், அடுத்தடுத்த நாள்களில் எதிர்மறை விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாக கூறப்படும் கேம் சேஞ்சர் படம் இதுவரை ரூ. 160 கோடிக்கு மேல் தான் வசூலித்துள்ளது.
இதற்கிடையே இயக்குநர் ஷங்கர் பல்வேறு ஊடகங்களுக்கு அளித்து வரும் பேட்டியில் தனது சினிமா அனுபவம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் பிரபல ஊடகமான நியூஸ் 18 சேனலுக்கு ஷங்கர் அளித்த பேட்டியில் சினிமா விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் ஷங்கர் கூறியதாவது,
"சினிமா விமர்சனங்களில் ஏற்புடைய விஷயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் எந்த விமர்சனங்களையும் பார்ப்பது கிடையாது. காரணம் அந்த விமர்சனங்கள் எனக்குள் ஒரு பிம்பத்தை உருவாக்கி விடுகின்றன. நன்றாக சொன்னாலும், தவறாக சொன்னாலும் சம்பந்தப்பட்ட படம் குறித்து எனக்குள் ஒரு பிம்பத்தை ஏற்பட்டு விடுகிறது. அதனால் விமர்சனங்களை படித்துவிட்டு படம் பார்ப்பதில்லை.
நேரடியாக படம் பார்ப்பது தனி அனுபவம்
படம் பார்த்துவிட்டு வேண்டுமானால் விமர்சனங்களை படிப்பேன். விமர்சனம் என்பது தனிப்பட்ட பார்வையாளர்களை சார்ந்தது. என்னுடைய நண்பர்கள் சிலர், நான் படத்தின் கதை கூறினாலும், அதை கேட்க மறுத்து தாங்களே நேரடியாக சென்று படம் பார்ப்பார்கள். நானும் அப்படித்தான் யாருடைய கருத்தும் கேட்காமல் நேரடியாக படம் பார்ப்பேன். அப்படி பார்ப்பது ஒரு தனி அனுபவம்
சிலை செதுக்குவது போல் தான் சினிமா
கேம் சேஞ்சர் படத்தை இன்னும் சிறப்பாக இயக்கியிருக்கலாம் என நினைக்கிறேன். நிறைய நல்ல காட்சிகள் ட்ரீம் செய்யும்போது விடுபட்டுவிட்டது. மொத்த படம் 5 மணிநேரம் வந்தது. படத்துக்காக எடுக்கப்பட்ட அவ்வளவு காட்சிகளையும் வைக்க முடியாது. ஆனால், அவை அனைத்துமே இந்தக் கதைக்குள் தான் வருகிறது.சிலை செதுக்குவது போல தான் சினிமாவும். எவ்வளவு செய்தாலும் ஒரு படத்தில் முழு திருப்தி கிடைக்காது" என்றார்.
எனது கனவு படம்
தொடர்ந்து, "கேம் சேஞ்சர் படத்துக்கு வரும் கலவையான விமர்சனங்களை கவனித்து வருகிறேன். சிலர் என்ன நன்றாக எடுத்தாலும் திருப்தி அடைய மாட்டார்கள். ‘கேம் சேஞ்சர்’ படத்திற்குப் பிறகு அடுத்த சில மாதங்கள் ‘இந்தியன்3’ படத்தை முடித்து கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன்.
எனது கனவு படமாக வேள்பாரி கதையை உருவாக்கவுள்ளேன். மூன்று பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன். மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் எழுதிய இந்த நாவலுக்கான திரைக்கதை முடித்து விட்டேன்" என்று கூறினார்.
ஏற்கனவே கடந்த ஆண்டில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளியான இந்தியன் 2 தோல்வியடைந்த நிலையில், தற்போது கேம் சேஞ்சர் படமும் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்க தவறியுள்ளது.
அந்த வகையில் கேம் சேஞ்சர் படம் ஷங்கருக்கு கம்பேக் படமாக அமையாமல் போயிருக்கும் நிலையில் இந்தியன் 3 மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்