Director Shankar: அப்பவே நான் அப்படி பாஸ்.. 90ஸ்களிலேயே ஒரு பாடலுக்கு ரூ. 2 கோடி செலவழித்த ஷங்கர்.. எந்த பாடல் தெரியுமா?
Director Shankar: கேம் சேஞ்சர் படத்தில் பாடலுக்கு மட்டும் ரூ. 75 கோடி செலவழித்திருப்பதாக கூறப்படும் நிலையில், இதற்கு பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. ஆனால் 90ஸ்களிலேயே ஒரு பாடலுக்கு ரூ. 2 கோடி செலவழித்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் முதல் முறையாக இயக்கியிருக்கும் நேரடி தெலுங்கு படமான கேம் சேஞ்சர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் முதல் நாளில் ரூ. 47 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
ரூ. 350 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் கேம் சேஞ்சர் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா உள்பட பலர் நடித்துள்ள அரசியல் த்ரில்லர் படமான கேம் சேஞ்சர் படத்தின் பாடல்கள் மட்டும் ரூ. 75 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் படத்தில் இடம்பெறும் Lyraanaa என்ற பாடல் இன்ப்ரா ரெட் கேமரா தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டது. இந்தியாவில் இந்த டெக்னாலஜி கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்ட முதல் பாடலாகவும் இது அமைந்துள்ளது. இதையடுத்து பாடலுக்கு மட்டுமே மிக பெரும் தொகை செலவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அந்த பணத்தில் ஒரு தரமான படமே உருவாக்கிடலாம் என சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.
ஆனால் இயக்குநர் ஷங்கர் தனது படங்களில் திரைக்கதை, காட்சி அமைப்புக்கு எந்த அளவில் முக்கியத்துவம் கொடுப்போரோ அதற்கு இணையாக பாடல்களை உருவாக்குவதிலும், விஷுவலாக அதில் பிரமாண்டம் காட்டுவதிலும் அதிகம் மெனக்கெடுவார்.
90ஸ்களிலேயே ரூ. 2 கோடி செலவில் பாடல்
அப்படிதான் இயக்குநர் ஷங்கர் படத்தின் ஒவ்வொரு பாடல்களும் கண்களுக்கு விருந்தாகவும், ரசிகர்களை கட்டிப்போடும் விதமாகமாக அமைந்திருக்கும். கேம் சேஞ்சர் படத்தில் பாடலுக்காக அவர் செலவு செய்திருப்பதாக கூறப்படும் பட்ஜெட் குறித்து விமர்சனங்கள் வந்தாலும், 90ஸ் காலகட்டத்திலேயே தான் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் இடம்பிடித்த பாடலுக்காக ரூ. 2 கோடி செலவழித்துள்ளார்.
அந்த படத்தில் இடம்பெறும் பூவுக்குள் ஒளிந்திருக்கும் என்ற மெலடி பாடலில், அப்போது உலக அதிசயங்களாக இருந்த 7 இடங்களில் பாடல்களை படமாக்கியிருப்பார். அப்போது உருவாகியிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அருணாச்சலம் படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ. 5 கோடி தான்.
அத்துடன் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படம் தான் அப்போது இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் உருவான இரண்டாவது படமாக இருந்தது. மேலும் அதிக பட்ஜெட் படங்களை உருவாக்குவதில் புதியதொரு அளவுகோலை அமைத்தது.
தொழில்நுட்ப பிரச்னையால் நீக்கப்பட்ட பாடல்
கேம் சேஞ்சர் படத்தில் இடம்பிடித்திருக்கும் 5 பாடல்களையும் மிக பிரமாண்டமான முறையில் காட்சியமைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர். இன்ப்ரா ரெட் கேமரா தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட Lyraanaa பாடல் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் என பட புரொமோஷனின் போது சொல்லப்பட்டது.
ஆனால் இந்த பாடல் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. "Lyraanaa பாடலை தொழில்நுட்ப காரணத்தினால் நீக்கிவிட்டோம். இன்ஃப்ரா ரெட் காட்சிகளை சேர்க்கும் போது தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டது. மீண்டும் அப்பாடலைச் சேர்க்க பணிபுரிந்து வருகிறோம். ஜனவரி 14-ம் தேதி முதல் அப்பாடல் படத்தில் இணைக்கப்படும்" என படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைனில் ரிலீஸான கேம் சேஞ்சர்
மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் ஆன ஒரு மணி நேரத்திலேயே ஆன்லைனில் ஹெச்டி பிரண்ட் வெளியானது. இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழிலும் படத்துக்கு எதிர்பார்த்த ஓபனிங் கிடைக்கவில்லை. இருப்பினும் அடுத்தடுத்து தொடர் விடுமுறை வருவதால் படம் பிக்கப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்