‘நான் அப்படி சொல்லவே இல்ல..10 நிமிஷம் கூட பொறுமையா இருக்க மாட்றாங்க.. உடனே கமெண்ட் வந்துருது..’- ஷங்கர் பதிலடி
தற்போதைய தலைமுறை பொறுமையற்றவர்களாக இருக்கிறார்கள்; 10 நிமிடத்தில் செல்போனை எடுத்து படத்தை பற்றி சமூக வலைதளங்களில் கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்; 10 நிமிடத்தில் அவர்களது கவனம் சிதறிவிடுகிறது. - ஷங்கர்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸை மனதில் வைத்து கேம் சேஞ்சர் படத்தை எடுத்திருப்பதாக ஷங்கர் கூறியதாக வெளிவந்த கருத்திற்கு, பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் எதிர்வினையாற்றி இருந்த நிலையில், தற்போது ஷங்கர் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நேர்மையான இடத்திலிருந்து...
சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து பேசிய ஷங்கர், ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை; படத்தில் நாம் சொல்ல வரும் விஷயங்களை விரைவாகவும், அதே நேரம் திறம்படவும் சொல்ல வேண்டும். நாம் அவ்வாறு செய்யத் தவறும்போது, பார்வையாளர்களின் கவனம் திசை திரும்ப நாம் இடம் கொடுக்கிறோம்;
படம் முழுக்க சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். எடிட்டர் ரூபன் அதை கேம் சேஞ்சரில் கொண்டு வந்திருக்கிறார். அதைத்தான் நான் சொல்ல வந்தேன். அனுராக் இப்படி சொன்னது எனக்கு தெரியாது; இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது; ஏனென்றால் அது நேர்மையான இடத்திலிருந்து வந்திருக்கிறது’ என்றார்.