தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு விவாகரத்து.. மனைவியுடனான திருமண முறிவை அறிவித்தார் இயக்குநர் சீனு ராமசாமி..
இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவியுடனான திருமண பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்து மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
தமிழ் சினிமாவில் பல ஆயிரம் படங்கள் வந்து வெற்றி பெற்று மக்கள் மனதை கவர்ந்திருப்பினும், சில படங்களே அவர்களின் வாழ்வியலைப் பேசும். அப்படி, மக்களின் வாழ்வியலை மிக அழகாக திரைக்கதையாக மாற்றும் திறமை கொண்டவர் சீனு ராமசாமி.
தேசிய விருது இயக்குநர்
அதனால் தான் என்னவோ, அவரது இரண்டாம் படமான தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி, அவரது தர்மதுரை, மாமனிதன் போன்ற படங்கள் பல விருதுகளை சொந்த நாட்டிலும் சர்வதேச அளவிலும் குவித்து வருகின்றன.
இந்நிலையில், தான் அவர் பெரும் முயற்சிகளுக்கு மத்தியில் தனது கோழிப்பண்ணை செல்லதுரை படத்தை திரையிட்டார். தியேட்டர்களில் இந்தப் படத்தில் பெரிதாக வரவேற்பு இல்லாத நிலையில், ஓடிடியில் வெளியான உடன் அந்தப் படத்தினை கொண்டாடினர்.
விவாகரத்து அறிவிப்பு
இவரது திரைப்பயணம் இப்படி சென்று கொண்டிருக்க, தன் திருமண வாழ்வில் இருந்து விடைபெறுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஏற்கனவே, தமிழ் சினிமாவில் விவாகரத்துக்கு பஞ்சமில்லை எனும் அளவிற்கு தினம் தினம் அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது குடும்ப படங்களை கொடுத்து வந்த சீனு ராமசாமியும் இந்தப் பட்டியலில் இணைந்துவிட்டார்.
இவரது இந்த முடிவு குறித்து சீனு ராமசாமி எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
17 வருட பந்தம் முறிவு
அந்தப் பதிவில், "அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார்.
முடிவுக்கு மதிப்பளியுங்கள்
இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம். அன்புடன் சீனு ராமசாமி." எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் தன் 17 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொண்டது மக்களுக்கு தெரிய வருகிறது.
சந்தோஷத்தை வழங்கிய குடும்பம்
கடந்த 2022ம் ஆண்டில் சீனு ராமசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மனைவியும் மகள்களும் சேர்ந்து சீனு ராமசாமியின் கவிதைகளை நூலாக்கி வெளியிட்டு இன்ப அதிர்ச்சி அளித்தனர்.
சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை என்ற அந்த கவிதைத் தொகுப்பை சீனு ராமசாமிக்கே தெரியாமல் அவரது மனைவி, மகள்கள் தயாரித்து வழங்கியுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துமடலும், பாடலாசிரியர் வைரமுத்து அணிந்துரையும் எழுதிய அந்த நூலை திடீரென்று வீட்டிற்கே வந்து வெளியிட்டவர் நடிகர் மோகன்.
திரைத்துறையின் அடுத்த சோகம்
இப்படி, ஊர் போற்றும் அளவிற்கு குடும்ப வாழ்க்கை படங்களையும் பாசத்தையும் வெளிப்படுத்தியவர் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது திரைத்துறையின் அடுத்த சோகம் என்று தான் சொல்ல வேண்டும்.
சீனு ராமசாமி சினிமா பயணம்
பாலு மகேந்திராவின் மாணவரான சீனு ராமசாமி, 2007ம் ஆண்டு வெளியான கூடல் நகர் எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் சீனு ராமசாமி. பின் இவரின் படைப்புகள் அனைத்தும் மக்கள் மனதில் நின்று பேசக்கூடிய படைப்புகள் தான். உதாரணத்திற்கு, தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன், கோழிப்பண்ணை செல்லதுரை.
இந்தப் படங்கள் அனைத்தும் அந்தந்தப் பகுதியின் வாழ்வியலையும் எதார்த்தத்தையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தத் தவறியதில்லை.
டாபிக்ஸ்