ஆக்ஷன் நாயகியை தேடிச் சென்ற ராஜமௌலி.. 8 ஆண்டுக்கு பின் இந்திய சினிமாவிற்கு திரும்பும் நடிகை..
இயக்குநர் ராஜமௌலி தான் எடுக்க இருக்கும் எஸ். எஸ்.எம்.பி 29 படத்தின் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ராவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய சினிமாவின் பெருமையை உலகம் முழுக்க கொண்டு சென்ற இயக்குநராக மாறியுள்ளார் எஸ். எஸ். ராஜமௌலி. இவரது பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்கள் தெலுங்கு சினிமாவை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
ராஜமௌலி அறிவிப்பு
இந்நிலையில், அவர் தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபுவை வைத்து தன் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக அறிவித்திருந்தார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் எஸ்.எஸ். எம். பி. 29 என அழைக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தின் கதை இறுதிக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், படம் அடுத்தாண்டிற்குள் திரைக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்தப் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிரியங்கா சோப்ராவிற்கு வாய்ப்பு
ராஜமௌலி- மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜமௌலி இந்தப் படத்திற்கு ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் கதாநாயகிகளை தேடி வந்ததாகவம், அதனால் சில மாதங்களாக இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ராவை நடிக்க வைப்பது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
8 ஆண்டுக்குப் பின் இந்திய படம்
இந்த செய்தி உண்மையாக இருந்தால், பிரியங்கா சோப்ரா 8 ஆண்டுகளுக்குப் பின் இந்திய சினிமாவில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய்யின் தமிழன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா, அடுத்த படத்திலேயே பாலிவுட்டிற்குச் சென்றார். இதையடுத்து அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கினார்,
இந்நிலையில், அவருக்கு ஹாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அவர் அங்கு சென்று படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து மிகவும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார். அத்துடன் தன் திருமண வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார்.
பிஸியான நடிகை
முன்னதாக, பிரியங்கா சோப்ரா ஃபர்ஹான் அக்தரின் 'ஜீ லே ஜாரா' படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அந்தப் படம் குறித்து வேறு எந்தத் தகவலும் இன்னும் முழுமையாக முடிவு செய்யப்படாத நிலையில், தற்போது ராஜமௌலி படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார் எனும் செய்திகள் உலா வரத் தொடங்கி உள்ளன.
முன்னதாக பிரியங்கா சோப்ரா, தி ஸ்கை இஸ் பிங்க் (2019) படத்தில் நடித்தார். இது அவரின் கடைசி இந்தியப் படமாக இருந்தது. இதையடுத்து அவர், பிரபல ஓடிடி வெப் சீரிஸ் சிட்டாடல் மற்றும் தி மேட்ரிக்ஸ் ரெசெக்சர் போன்ற படங்களில் தன் நடிப்புத் திறனை ஹாலிவுட்டில் நிரூபித்துக் காட்டி இருப்பார்.
ராஜமௌலியின் திட்டம்
ராஜமௌலி கடந்த ஒரு வருடமாக டிஸ்னி மற்றும் சோனி நிறுவனங்களுடன் உலகளாவிய ஸ்டுடியோவுடன் இணைந்து பணியாற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மகேஷ் பாபுவின் படத்தின் படப்பிடிப்பு இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது.
காத்திருக்கும் திரைப்படங்கள்
இதற்கிடையில், ரூசோ சகோதரர்களின் சிட்டாடல் இரண்டாவது சீசனில் பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார். மேலும், ஜான் செனா மற்றும் இட்ரிஸ் எல்பா ஆகியோருடன் அதிரடி த்ரில்லர் 'ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்' படத்திலும் பீரியட் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான தி பிளஃப் படத்திலும் நடித்துள்ளார். இதுவும் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்