13 Years of Payanam: விமான கடத்தல்!வேட்டையாடப்படும் தீவிரவாதிகள் - உண்மை சம்பவ பின்னணியில் ராதா மோகனின் த்ரில் ரெய்ட்
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வந்த தமிழ் சினிமாக்களில் ராதாமோகன் இயக்கிய பயணம் படம் விறுவிறுப்பான திரைக்கதையுடன் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
தமிழ் சினிமாவில் சிறந்த த்ரில்லர் படங்களில் ஒன்றாகவும், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விறுவிறுப்பான திரைக்கதை அம்சத்துடன் அமைந்திருக்கும் படம் பயணம். அழகிய தீயே, மொழி, அபியும் நானும் போன்ற காதல், ரொமான்ஸ், பேமிலி டிராமா பாணியிலான படங்களின் இயக்கிய ராதா மோகன், இந்த படத்தை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாக்கியிருப்பார்.
த்ரில்லர் கதையாக இருந்தாலும் ராதா மோகன் படங்களில் தனித்துவமாக இருந்து வரும் கதாபாத்திரங்களின் மெல்லிய உணர்வுகளின் வெளிப்பாடு இந்த படத்திலும் இடம்பிடித்திருக்கும்.
இந்த படத்துக்கு ஜெய்பீம் பட புகழ் டி.ஜே. ஞானவேல் வசனம் எழுதியிருப்பார். தமிழில் பயணம், தெலுங்கில் ககனம் என்ற பெயரில் ஒரே நேரத்தில் தயாராகி, ஒரு சமயத்தில் இந்த படம் வெளியானது. இரு மொழிகளில் ரசிகர்களை கவர்ந்து சராசரியான வசூலையும் ஈட்டியது.
பயணம் படத்தில் இருமொழிகளிலும் ஒரே நடிகர்கள் தான் நடித்திருப்பார்கள். தெலுங்கு ஹீரோ நாகார்ஜுனா, பிரகாஷ் ராஜ் பிராதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ரவிபிரகாஷ், பூனம் கெளர், தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம், ரிஷி, சனா கான், தலைவாசல் விஜய், எம்எஸ் பாஸ்கர், சாம்ஸ், பிருத்விராஜ், மனோபாலா, குமரவேல், மோகன் ராம் என மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள்.
சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு திருப்பதியில் தரையிறக்கம் செய்யப்படுகிறது. தீவிரவாத கூட்டத்தின் தலைவனை விடுவிக்குமாறு விமான பயணிகள் பிணை கைதிகளாக ஆக்கப்படுகிறார்கள். கடத்தப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள் காப்பாற்றப்பட்டனாரா, தீவிரவாதிகள் பிடிபட்டனரா என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன், பரபர காட்சியமைப்பில் சொல்லும் படம் தான் பயணம்.
1999இல் காந்தகர் விமான கடத்தல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கற்பனையாக படத்தின் கதை, திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கும். படத்தில் நடித்த அத்துனை நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். நாகார்ஜுனா முதல் முறையாக தனக்கு ஜோடியாக கதாநாயகிகள் இல்லாமல் நடித்திருப்பதோடு, கமாண்டோ அதிகாரியாக மிடுக்காக தோன்றி நடிப்பிலும் வெரைட்டி காட்டியிருப்பார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் விமானத்தின் உள்பகுதியிலும், விமான நிலையத்திலும் நடக்குமாறு இருக்கும் நிலையில் இதற்கென பிரத்யேக செட் அமைக்கப்பட்டது. படத்தில் பாடல்கள் கிடையாது, அதற்கான சூழலும் கிடையாது.
இருப்பினும் டைட்டில் பாடலாக பயணம் என்ற பாடலை மதன் கார்க்கி எழுதியிருப்பார். பிரவீண் மணி மிரட்டலான பின்னணி இசையில் கதையின் பரபரப்பை உணரவைத்திருப்பார். என்னதான் படம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்றாலும் ஆங்காங்கே காமெடி, எமோஷன், செண்டிமென்ட், காதல் என அனைத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக காட்சிகளை வைத்து முத்திரை பதித்திருப்பார் இயக்குநர் ராதா மோகன். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பின்னணி வைத்து அதற்கென தனி காட்சிகள் வைக்காமல் அந்த கதாபாத்திரங்கள் மூலமே மனதில் பதிய வைத்திருப்பார்.
அந்த வகையில் ராதா மோகன் படங்களில் வித்தியாசமான படமாகவே இந்த படம் அமைந்திருக்கும். சிறந்த திரைக்கதைக்கான தமிழ்நாடு அரசின் விருதை வாங்கிய பயணம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்