Director Perarasu: ஒரே ஐடியா.. தலைகீழாக மாறிய சீன்.. திருப்பாச்சி அல்டிமேட் காமெடி சீன் உருவானது எப்படி?- பேரரசு
Director Perarasu: திருப்பாச்சி படத்தில் இடம் பெற்ற அந்த காமெடி சீனில், விஜய்க்கு பின்னால் பெஞ்சமின் நின்றாரே, அந்த இடத்தில்தான் முதலில் விஜய் நிற்பதாக இருந்தது. - திருப்பாச்சி அல்டிமேட் காமெடி சீன் உருவானது எப்படி?- பேரரசு

Director Perarasu: இயக்குநர் பேரரசு இயக்கத்தில், நடிகர் விஜய் த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் திருப்பாச்சி. 2005 ஆம் ஆண்டு வெளியான இப்படம் கில்லி படத்திற்கு பிறகு, விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இந்தப்படத்தில் கிராமத்தினர் சிலர் விஜயை வெட்டுவது போன்ற நகைச்சுவை காட்சி ஒன்று அமைந்திருக்கும். அந்தக்காட்சி எடுக்கப்பட்ட விதம் குறித்து அந்தப்படத்தின் இயக்குநர் பேரரசு தமிழ்நாடு நவ் சேனலுக்கு அண்மையில் பேட்டியளித்தார்.
விஜய் வைத்த கோரிக்கை:
அவர் அதில் பேசும் போது, “திருப்பாச்சி படத்தில் இடம் பெற்ற அந்த காமெடி சீனில், விஜய்க்கு பின்னால் பெஞ்சமின் நின்றாரே, அந்த இடத்தில்தான் முதலில் விஜய் நிற்பதாக இருந்தது. பெஞ்சமின்தான் மரக்கட்டையில் படுப்பது போன்று காட்சி இருந்தது. அந்த நாள் அந்த காட்சியை ஷூட் செய்வதற்கு வழக்கம் போல நானும், விஜய் சாரும் காட்சி பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது விஜய் மாலையை என் மீது போட்டு வெட்டுவது போல காட்சியை மாற்றலாமா? என்று மிகவும் பணிவாக கேட்டார்.
எனக்கும் அவர் அப்படி சொன்னவுடன் ரஜினி சார்தான் ஞாபகம் வந்தார். ஆக்க்ஷன் ஹீரோவாக வளரும் ஒரு நடிகர், திடீரென்று காமெடி செய்தால், அதை மக்கள் வெகுவாக ரசிப்பார்கள். அதை ரஜினி சார் பல படங்களில் செய்திருக்கிறார். அதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் கிடைத்திருக்கிறது. ஆகையால் இது வொர்க் அவுட் ஆகும் என்று தோன்றியது. ஆனாலும் நான் விஜய் சாரிடம், நீங்கள் பெரிய மாஸ் ஹீரோ, திடீரென்று இப்படியான ஒரு காட்சியில் நடிப்பதற்கு உடன்பாடு இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன்.
