Director Mysskin: ரிலீஸுக்கு முன்னே அமுக்குவது நியாயமா? ட்ராகன் பட மேடையில் 'பேட் கேர்ள்'க்கு குரல் கொடுத்த மிஷ்கின்
Director Mysskin: சினிமாவில் இருக்கக்கூடிய அனைவரும் சேர்ந்து அரசியலில் இருப்பவர்களிடம் பேசி எதை எடிட் செய்ய வேண்டுமோ அதை செய்து பேட் கேர்ள் படத்தை ரிலீஸ் செய்ய உதவ வேண்டும் என ட்ராகன் பட மேடையில் வைத்து பேசியுள்ளார் இயக்குநர் மிஷ்கின்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் புதிய படமான ட்ராகன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். நடிகை சிநேகா, இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குநர் மிஷ்கின் சர்ச்சையாக எதுவும் பேசப்போவதில்லை என தெரிவித்தார். அத்துடன் ட்ராகன் படக்குழுவினரை பாராட்டியதோடு, வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பேட் கேர்ள் படத்துக்கு எழுந்துள்ள சர்ச்சையை போக்கி ரிலீஸ் செய்ய திரைத்துறையினர் முன் வர வேண்டும் எனவும் கூறினார்.
ஒரு வருடத்துக்கு ப்ரேக்
ட்ராகன் பட நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, "நான் கெட்ட வார்த்தை எதுவம் பேச போவதில்லை. ஏன்னா ஒரு கொம்பை அறுத்து எடுத்து விட்டனர். இன்னொரு கொம்பு மட்டும் தான் இருக்கிறது.
ஒரு வருடத்துக்கு எந்த நிகழ்ச்சிக்கும் வராமல் இடைவெளி எடுக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் மூன்று பேருக்காக நான் இந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
முதல் காரணம் தயாரிப்பாளர் அகோரம் சார். அவரது கம்பெனியில் நான் எடுத்த படம் பெரிய வெற்றி பெறாவிட்டாலும் எப்போதும் அதை புகழ்ந்துகொண்டே இருப்பார். அவருடைய அன்புக்காக இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும்.
அடுத்ததாக பிரதீப். அவர் ஒரு புரூஸ் லீ. இன்னும் சண்டை படங்கள் நடிக்கவில்லை. ஒருவேளை வருங்காலத்தில் என்னுடைய படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு இருக்கிறது. வெகு நாட்கள் கழித்து தமிழ் சினிமாவில் இளமையான ஸ்டார் நடிகரை நான் பார்க்கிறேன். யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக வளர்ந்துள்ளான்.
நடிகர்கள் - இயக்குநர்கள் இடையே முளைக்கும் ஈகோ
நான் அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆனால் நான் நல்ல வில்லன். இங்கு நிறைய நடிகர்கள் இயக்குநர்களுடன் நட்பாக இருப்பதில்லை. சில நடிகர்கள் நான்கு படங்கள் நடித்ததும் அவர்களுக்கு ஈகோ வந்துவிடும், பின்னர் ரசிகர் மன்றம் வைத்து அவர்களுக்கு பால் ஊற்றி கொண்டாடுவார்கள். அதன் பின்னர் உயரமே ஆகாமல் இரண்டடி வளர்ந்து விடுவார்கள்.
கூடவே நுனி நாக்கில் ஆங்கிலம் வந்துவிடும், அந்த நடிகர் பின் 200 பேர் வந்து விடுவார்கள் எதற்காக வருகிறார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது. ஆனால் பிரதீப் அப்படி கிடையாது.
என் தம்பி விஜய் சேதுபதி போல் எளிமையாக இருக்கிறார். நான் அடுத்த படத்துக்காக பிரதீப்பிடம் ஐஸ் வைக்கிறேன் என சொல்வார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. பிரதீப்பை பற்றி என்னுடைய உதவி இயக்குநர்களிடம் அடிக்கடி பேசுவேன். 'என்ன சார் அவன் என்ன பெரிய வெங்காயமா'னு என கேட்பார்கள். ஆமாம், பிரதீப் பெரிய வெங்காயம்தான் என சொல்வேன்.
இயக்குநர் அஷ்வத் மிகவும் உழைக்கக்கூடிய இயக்குநர். வசனங்கள் ஒவ்வொன்றிலும்கண்டிப்பாக இருப்பார். நடிப்பதில் இருக்கும் கடினங்கள் நாங்கள் இயக்குநராக இருக்கும்போது தெரிவதில்லை. ஆனால் நடிக்கும் போது அது நன்றாக தெரிகிறது. ஒரு கல்லூரியில் படிக்கக்கூடிய நபர் எப்படி இருக்க வேண்டும் என்று அவருடைய வாழ்க்கையில் இருந்து ஜாலியாக சொல்லி இருக்கிறார் அஷ்வத்.
பேட் கேர்ள் படத்தை ரிலீசுக்கு முன்னே அமுக்காதீர்கள்
'பேட் கேர்ள்' என்னும் திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அதற்குள் அதை நாம் அமுக்குகிறோம், அதற்கு பல காரணங்களை சொல்கிறோம். அந்தப் படத்தை இயக்கியது ஒரு பெண். பல காரணங்கள் சொல்லலாம். ஆனல் வெறும் டிரெய்லர் மட்டும் வந்ததற்காக அந்த படத்தை கீழே தள்ளிவிட்டு அமுக்குவது நியாயம் இல்லை. இதை இங்கே பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே இதை சொல்கிறேன்.
இங்கே ஜாலியான படத்துக்கு உட்கார்ந்து கைதட்டுகிறோம். அங்கே ஒரு பெண் கலங்கி கொண்டிருக்கிறார். சினிமாவில் இருக்கக்கூடிய அனைவரும் சேர்ந்து அரசியலில் இருப்பவர்களிடம் பேசி எதை எடிட் செய்ய வேண்டுமோ அதை செய்து அந்தப் படத்தை திரைக்கு கொண்டு வர வேண்டும். ஒரு 40 அல்லது 20 வருடத்துக்கு ஒரு முறை தான் பெண் இயக்குநர் வருகிறார்கள். அந்த படம் வெளிவதற்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு மிஷ்கின் பேசினார்.
ட்ராகன் படம்
காதல், காமெடி கலந்து இளமை துள்ளல் படமாக உருவாகியிருக்கும் ட்ராகன் படத்தின் ட்ரெய்லர் கடந்த இரு நாள்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்துக்கு இசை - லியோன் ஜேம்ஸ். ஏஜிஎஸ் சினிமாஸ் படத்தை தயாரித்துள்ளது.

தொடர்புடையை செய்திகள்