இதயம் பட கதையில் நடிக்க மறுத்த மூன்று ஹீரோக்கள்.. சரியான கஷ்டம்.. தியாகராஜன் சார் கொடுத்த வாய்ப்பு.. இயக்குநர் கதிர்
இதயம் பட கதையில் நடிக்க மறுத்த மூன்று ஹீரோக்கள்.. சரியான கஷ்டம்.. தியாகராஜன் சார் கொடுத்த வாய்ப்பு என இயக்குநர் கதிர் பற்றிப் பார்ப்போம்.
இதயம் படத்துடைய கதை தனக்குப் பிடிக்கவில்லையென்று மூன்று ஹீரோக்கள் சொன்னார்கள் என இயக்குநர் கதிர் கூறியுள்ளார்.
இதயம் படத்தை எடுத்து பிரபலமான இயக்குநர் கதிர் டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’ கல்லூரியில் படிச்சதுக்கு அப்புறம் டார்லிங் டார்லிங் டார்லிங், வாங்க மச்சான் வாங்க போன்ற பாக்யராஜ் சார் படங்களில் நான் தான் போஸ்டர் டிசைன், டைட்டில் கார்டு எல்லாம் டிசைன் பண்ணினது. அதனால் நான் டைரக்டர் ஆகணும்னு அவர்கிட்ட சொல்லும்போது, அவர் ஒத்துக்கல. நான் நல்ல ஓவியன்னு சார் நினைச்சார். அடுத்து அவர்கிட்ட நான் உதவி இயக்குநராக முயற்சி செய்தேன். ஆனால், பார்த்திபனை முந்தானை முடிச்சு படத்தில் உதவி இயக்குநராக சேர்த்துக்கிட்டார். சினிமாவில் நிறைய பேர் வந்து இல்லாமல் போய்டுறாங்களேன்னு வருத்தத்தில் பாக்யராஜ் சாரும், பாரதிராஜா சாரும் திட்டிவிட்டுடுறாங்க.
அடுத்து அவரது உதவி இயக்குநர்கள் பாண்டியராஜனும் ஜி.எம். குமாரும் எனக்கு நல்ல நண்பர்கள். பாண்டியராஜனுடைய முதல் படம் ‘கன்னி ராசி’, ஜி.எம்.குமாருடைய ‘அறுவடை நாள்’ படங்களில் முக்கால்வாசி படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தேன். அதன்பின் நான் வெளியே வந்து திரைக்கதை எழுத ஆரம்பிச்சுட்டேன். இதயம் படத்துடைய திரைக்கதை தான் அது.
சத்யஜோதி தியாகராஜன் சார் கொடுத்த வாய்ப்பு - கதிர்:
அந்த ஏழு நாட்கள், மூன்றாம் பிறை, கிழக்கு வாசல் ஆகியப் படங்களைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் சார் நல்ல பழக்கம் என்பதால், அவர்கிட்ட போய் டைரக்ஷன் வாய்ப்பு கேட்கப்போறேன். அவர் செம பிஸியாக இருக்கிறார். ஒரு வருஷமாகப் போறேன் கதையே சொல்லமுடியல. திடீர்னு ஒருநாள் அவரது வீட்டில் நுழையும்போதே கதையை சொல்ல ஆரம்பிச்சிட்டேன். உடனே ஆஃபிஸுக்கு வரச்சொல்லிட்டார். அன்னிக்கு அவரைப் பார்க்க காத்திருக்கும்போது, ஹார்ட் பீட் அதிகரிக்குது. அவர் சொல்லுன்னு சொன்னதும் மடமடனு 2:30 மணிநேர கதையைச் சொல்லிமுடிச்சிட்டேன்.
அவங்க அப்பா கோவிந்தராஜன் சார்கிட்டேயும் கதை சொல்ல சொன்னாங்க. அவர் கண்டிப்பா, இந்தப் படம் வெளியானால் பெரிய ஹிட்டுனு சொல்லிட்டார். தயாரிப்பாளரிடம் கதையைச் சொல்லி ஓ.கே. வாங்கிட்டேன். அட்வான்ஸ் வாங்கிட்டேன். ஆனாலும் அந்தக் கதை பெரும்பாலான ஹீரோக்களுக்குப் பிடிக்கல. ராம்கி கிட்ட கதையைச் சொன்னேன். மோகன்கிட்ட கதையைச் சொன்னேன். கார்த்திக்கிட்ட சொன்னேன்.
மூன்று ஹீரோக்கள் பிடிக்கலைன்னு சொன்னாங்க: கதிர்
இந்த மூன்று ஹீரோக்களும் கதை பிடிக்கலைன்னு சொன்னதும், புரொடியூசரே அப்செட் ஆகிட்டார். இதனால் ஒன்றரை வருஷம் வீணாகி, கஷ்டமான சூழலுக்குப் போயிட்டேன். சரி, அவர்கிட்டேயே டிசைனர் வாய்ப்பு கேட்கலாம்னு போறேன். நான் கீழே வாசலுக்குப் போனதும், கேட்டில் இருந்து தியாகராஜன் சாருக்கு போன் அடிச்சுட்டாங்க. அங்கு போனதும் முரளி எப்படி இருக்கும்ன்னு தியாகராஜன் சார் கேட்கிறார். நான் எதுவுமே சொல்லல. நல்லாயிருக்கும் சார்னு சொன்னதும், போன் அடிச்சு முரளி சாருக்கு தியாகராஜன் சார் பேசிட்டார். நான் போய் கதையைச் சொன்னதும் அவருக்குப் பிடிச்சிருச்சு.
இளையராஜா சார் ஆபிஸ் கர்ப்பகிரகம் தான் சார். நாம் சொல்ற பாவத்திலேயே நமக்கு என்ன தேவைனு கண்டுபிடுச்சிடுவார். ஜி.எம்.குமார் சார்கிட்ட தான் நான் முழுமையாக இருந்தேன். அதனால், அவர்கிட்ட அட்வான்ஸ் வாங்குனதும் போய், ஆசீர்வாதம் வாங்குனேன். அடுத்து பாக்யராஜ் சார் என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானவர். அவர்கிட்ட படத்தைப்போட்டுக்காட்டினேன். படம் நல்லாயிருக்கு. சில வசனங்கள் ரிப்பீட் ஆகுது. அதைமட்டும் தூக்கிடுனு சொல்லிட்டார். பாலச்சந்தர் சார் பிரிவியூவில் எல்லாம் பார்க்கலை. படம்வெளியானவுடன் பார்த்திட்டு, இதயம் படம் காவியம் என்று சொன்னார். அடுத்து மகேந்திரன் சார், என்னோட உழவன் படத்தைப் பார்த்திட்டு கூப்பிட்டு கட்டிப்பிடிச்சு வாழ்த்துறார்''என சொல்லிமுடித்தார், இயக்குநர் கதிர்.
நன்றி: டூரிங் டாக்கீஸ்
டாபிக்ஸ்