Director k Bhagyaraj: முட்டுக்கட்டை போட்ட குடும்பம்; விடாத சினிமா கனவு; கைகொடுத்த அம்மாவின் ஆசீர்வாதம் - பாக்யராஜ் கதை!
வீட்டின் நடுவே நானும், ஜோசியரும் உட்கார்ந்து இருக்க மொத்த குடும்பமும் எங்களை சுற்றி அமர்ந்திருந்தது. . பல விதங்களில் என்னுடைய வாழ்க்கையை கணித்த அந்த ஜோசியர், நான் இருட்டில் நடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.
தமிழ் சினிமாவில் ‘திரைக்கதை மன்னன்’ என்று பார்க்கப்படுவர் இயக்குநர் கே பாக்யராஜ். இவர் தன்னுடைய ஆரம்பகாலங்களில் பட்ட கஷ்டங்களை லைஃப் அகைய்ன் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.
அந்த பேட்டியில், “என்னுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள் அடிக்கடி சினிமா பார்ப்பது வழக்கம். அவர்கள் சினிமா படங்களைப் பார்த்து பூரிப்பது, எனக்கு நடிப்பின் மீது ஒரு வித ஆர்வத்தை உண்டாக்கியது. அது பள்ளியிலும் தொடர்ந்தது. அங்கு பல்வேறு நாடகங்களில் நடித்தேன்.
ஆனால் படிப்பில் தோல்வியை சந்தித்தேன். அந்த தோல்விக்கு பிறகு என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்த போது தான், சினிமா தான் நமக்கான பாதை என்பதை கண்டுபிடித்தேன்.
இந்த ஒரு பாதையில் மட்டும்தான் நம்மால் ஏதாவது ஒன்றை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உறுதியாக இருந்தது.
இனி, சினிமாவில்தான் பணியாற்ற வேண்டும் என்று கூறி, அடிக்கடி நான் வீட்டை விட்டு ஓடி வந்து விடுவேன். ஒரு கட்டத்தில் என்னுடைய குடும்பம் ஒரு ஜோசியரை அழைத்து வந்து, எனக்கு ஜோசியம் பார்த்தார்கள்.
வீட்டின் நடுவே நானும், ஜோசியரும் உட்கார்ந்து இருக்க மொத்த குடும்பமும் எங்களை சுற்றி அமர்ந்திருந்தது. . பல விதங்களில் என்னுடைய வாழ்க்கையை கணித்த அந்த ஜோசியர், நான் இருட்டில் நடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. தொடர்ந்து ஜோசியர் நீங்கள் இருட்டில் இருக்கிறீர்கள். அங்கு நடித்தால் யாரும் உங்களை பார்க்க மாட்டார்கள் என்று சொல்லி, சினிமாத்துறையானது எனக்கு ஒத்து வராது என்று கூறியதோடு, எனக்கு இரும்பு சம்பந்தமான தொழில்தான் வாழ்வில் ஜெயிப்பதற்கு உகந்த தொழில் என்றும் பரிந்துரைத்தார்.
இதனையடுத்து என்னுடைய அம்மா என்னை வந்து சமாதானம் செய்தார். இரவு முழுவதும் கண் விழித்து திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டே இருந்தேன். காலையில் ஒரு பெட்டியில் எனக்கான துணிகளை எடுத்து வைத்துக்கொண்டு, வீட்டின் பின்னால் அமர்ந்திருந்தேன்.
வழக்கம் போல அதிகாலை பின் கதவை திறக்க, நான் நின்று கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். நான் அம்மாவிடம், ஜோசியர் எனக்கு சினிமா வேண்டாம் என்றார்.
ஆனால் எனக்கு சினிமா துறையில் நான் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை ஆழமாக இருக்கிறது. யார் என்னை நம்பவில்லை என்றாலும் பரவாயில்லை.
நீ என்னை நம்ப வேண்டும். ஒரு அம்மாவாக நீ என்னை ஆசீர்வாதம் செய்து அனுப்பி வை என்று சொன்னேன். மேலும் வாழ்க்கை என்பது ஒரு முறை தான்; அந்த வாழ்க்கையை நான் நினைப்பது போல வாழ எனக்கு ஒரு வாய்ப்பு கொடு என்று கூறினேன்.
இதைச் சொன்னவுடன் என்னுடைய அம்மா அப்படியே கண்கலங்கி விட்டார்; இருப்பினும், என்னுடைய அம்மாவுக்கும் நான் பெரிய ஆளாக வந்து விடுவேன் என்று நம்பிக்கை இருந்தது. அதனை தொடர்ந்து அவர் கையில் காசு கொடுத்து என்னை அனுப்பி வைத்தார்” இவ்வாறு பேசினார்.
டாபிக்ஸ்