மரண படுக்கையிலும் சினிமாதான்.. மகேந்திரன் ஏன் தன் படங்களை ரீமேக் செய்ய வில்லை தெரியுமா? - மகேந்திரன் மகன் பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மரண படுக்கையிலும் சினிமாதான்.. மகேந்திரன் ஏன் தன் படங்களை ரீமேக் செய்ய வில்லை தெரியுமா? - மகேந்திரன் மகன் பேட்டி

மரண படுக்கையிலும் சினிமாதான்.. மகேந்திரன் ஏன் தன் படங்களை ரீமேக் செய்ய வில்லை தெரியுமா? - மகேந்திரன் மகன் பேட்டி

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 30, 2025 06:46 AM IST

அப்பா இறந்த 2 நாட்களில் நான் ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு நேர்காணல் கொடுத்தேன். அதில், மிகவும் எமோஷனலாக பேசியிருந்தேன். குறிப்பாக நான் நிறைய சோசியல் மீடியாவில் நேரத்தை செலவழித்து விட்டேன்.அப்பாவுடன் இன்னும் நிறைய பேசியிருக்கலாம் - ஜான் மகேந்திரன்!

மரண படுக்கையிலும் சினிமாதான்.. மகேந்திரன் ஏன் தன் படங்களை ரீமேக் செய்ய வில்லை தெரியுமா? - மகேந்திரன் மகன் பேட்டி
மரண படுக்கையிலும் சினிமாதான்.. மகேந்திரன் ஏன் தன் படங்களை ரீமேக் செய்ய வில்லை தெரியுமா? - மகேந்திரன் மகன் பேட்டி

பாடி லாங்குவேஜ்

அதில் அவர் பேசும் போது, ‘அப்பா எப்பொழுதுமே சுற்றி இருக்கக்கூடியவற்றை மிக உன்னிப்பாக கவனிப்பார். புத்தகங்கள், சினிமாக்கள் மட்டுமல்ல, ஒருவருடைய பாடி லாங்குவேஜ் கூட நமக்கு ஒரு கதையை தரும் கூறுவார்.

ஒரு நாள் தோட்டக்காரர் ஒருவர் வெளிப்படுத்திய பாடி லாங்குவேஜை பார்த்து, அதனை ஒரு டைரியில், தேதி போட்டு, அவர் என்ன பாடி லாங்குவேஜை வெளிப்படுத்தினாரோ அதை அப்படியே எழுதி வைத்துக் கொண்டார். பின்னாளில் அதிலிருந்து ஒரு கதையை அவர் உருவாக்கினார்.

மரணப்படுக்கையிலும் சினிமா

அப்பாவிற்கு உடல்நிலை மோசமாகிக் கொண்டிருப்பதை ஒரு கட்டத்தில் நாங்கள் புரிந்து கொண்டோம். ஆனால், அந்த நேரத்தில் கூட அவர் நெட் ஃப்ளிக்சில் வெளியான டர்க்கி வெப் சீரிஸ் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார். அதனுடைய ஒவ்வொரு சீசனும் 70 எபிசோடுகளை கொண்டது

மரணப்படுக்கையில் இருக்கிறோம். அங்கு சொந்தக்காரர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுடன் பேசாமல், அவர் என்னிடம் சொன்னது எப்பொழுதுமே நான் முதல் ஷாட்டிலேயே கதை ஆரம்பியுங்கள் என்று கூறுவேன் அல்லவா! அதை இந்த சீரிஸில் செய்திருக்கிறார்கள் என்றார். அதைக்கேட்ட போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவரது திரைப்படங்களை பிற மொழிகளில் ரீமேக் செய்ய சொல்லி, பல முன்னணி நடிகர்கள் வந்தார்கள். ஆனால், அப்பா எதற்குமே ஒத்துக் கொள்ளவே இல்லை. இதுகுறித்து நாங்கள் பலமுறை அப்பாவிடம் சண்டை போட்டு இருக்கிறோம். பாரதிராஜா சார் அவரது படங்களை பிற மொழிகளில் ரீமேக் செய்கிறார். அப்படி இருக்கும் பொழுது நீங்கள் ஏன் செய்ய மறுக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறோம்.

ஆனால், அப்பா கடைசி வரை ஒத்துக்கொள்ளவே இல்லை. எப்போதுமே ஒரு விஷயத்தில் எனக்கும் அப்பாவிற்கும் முரண்பாடு ஏற்படும் போது, அந்த நேரத்தில் அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார், அதன் உண்மையான நோக்கம் என்பது எனக்கு 2 நாட்கள் கழித்துதான் தெரியவரும். அப்படித்தான் இந்த விஷயத்திலும் எனக்கு நடந்தது.

வைரலான பேட்டி

அப்பா இறந்த 2 நாட்களில் நான் ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு நேர்காணல் கொடுத்தேன். அதில், மிகவும் எமோஷனலாக பேசியிருந்தேன். குறிப்பாக நான் நிறைய சோசியல் மீடியாவில் நேரத்தை செலவழித்து விட்டேன்.அப்பாவுடன் இன்னும் நிறைய பேசியிருக்கலாம்.

ஆகையால் இளைஞர்கள் செல்போனை நோண்டுவதை தவிர்த்து உறவினர்களுடன் பேசுங்கள் என்று கூறியிருந்தேன். அந்த வீடியோ வரவேற்பை பெற்ற உடன், பலரும் என்னிடம் அதே போல பேட்டி வேண்டும் என்று கேட்டார்கள். நான் அதனை தவிர்த்துக்கொண்டே இருந்தேன். ஊரில் இல்லை என்று பொய் கூறினேன். ஆனால், என்னை பேட்டிக்கேட்டவர் கையும் களவுமாக பிடித்து விட்டார். அப்போது அவரிடம், அந்த பேட்டிக்கொடுக்கும் போது நான் மிகவும் எமோஷனலாக இருந்தேன். அதனால்தான் என்னால் அதில் அப்படி பேச முடிந்தது. மீண்டும் ஒருமுறை நான் அதேபோன்று பேச வேண்டும் என்றால், அது போலியானதாக இருக்கும் என்று கூறினேன். அப்படி சொன்ன மாத்திரத்திலேயே எனக்கு ஒரு விஷயம் புரிந்தது.

ஒரு மணி நேர்காணலையே நாம் மீண்டும் அதே போல கொடுக்க முடியவில்லை. அப்படி இருக்கும் போது ஒரு படத்தை ஆத்மார்த்தமாக எடுத்த ஒருவரால், அதை எப்படி மீண்டும் ரீமேக் செய்ய முடியும் என்று எனக்கு புரிந்தது. அப்பா இறந்த பின்னர் எனக்கு அதை சொல்லிச் சென்றது போல நான் உணர்ந்தேன்’ என்று பேசினார்.