Gautham Menon: சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இருந்த தீபிகா படுகோனே! மிஸ்ஸான வாய்ப்பு - கெளதம் மேனன் சுவாரஸ்ய பகிர்வு
வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக முதலில் நடிப்பதற்கு தீபிகா படுகோனேவை அணுகியதும், பின்னர் அவர் நடிக்காமல் போன சுவாரஸ்ய கதையையும் இயக்குநர் கெளதம் மேனன் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும், ஸ்டைலிஷான மேக்கிங்கால் கவனம் ஈர்ப்பவராகவும் இருப்பவர் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். தற்போது நடிகராகவும் பல படங்களில் தோன்றுவதோடு, சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தி முத்திரை பதித்து வருகிறார.
இதையடுத்து பிரபல யூடியூப் சேனலான டூரிங் டாக்கிஸுக்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்தார் கெளதம் மேனன். அதில் பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களையும், தகவல்களையும் பகிர்ந்தார்.
இதையடுத்து அந்த பேட்டியில் கெளதம் மேனன் கூறியதாவது, " வாரணம் ஆயிரம் படத்தில் முதலில் சூர்யாவின் தந்தை வேடத்தில் மோகன் லால் அல்லது சூர்யாவை நடிக்க வைக்க வேண்டும் என விரும்பினேன். அவர்களிடம் தொடர்பும் கொண்டேன். அதேபோல் ஹீரோ இரண்டு கேர்கடர்களில் நடிப்பதை விரும்பவில்லை.
ஆனால் சூர்யா தான் தன்னை சமாதானம் செய்து, அப்பா கதாபாத்திரத்திலும் நடிப்பதாக கூறி அதையும் சிறப்பாக செய்தார்.
படத்தில் முக்கிய கதாபாத்திரமாக சமீரா ரெட்டி நடித்த மேக்னா ரோலில் தீபிகா படுகோனேவை நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஆனால் ஓம் சாந்தி ஓம் படத்தில் அவர் கமிட்டானதால் நடிக்க முடியாமல் போனது. பின்னர்தான் சமீரா ரெட்டி அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.
சிம்ரன் தான் இரண்டு சூர்யாவுக்கும் ஜோடியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த கதாபாத்திரத்துக்கும் திவ்யா ஸ்பந்தனா கமிட்டானார்." என்று கூறினார்.
சூர்யாவுக்கு முக்கிய படமாக அமைந்த வாரணம் ஆயிரம்
சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் வாரணம் ஆயிரம் முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்பா கதாபாத்திரத்துக்காக லேசாக உடல் எடை அதிகரித்து உடல் மொழியும் மாற்றி நடித்திருப்பார். அத்துடன் மகன் கதாபாத்திரத்தில் உடல் எடை குறைந்து பள்ளி படிக்கும் மாணவன் போன்றும், கல்லூரி செல்லும் இளைஞனாகவும், ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரியாகவும் என கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடல் மாற்றத்தை கொண்டு வந்து நடித்திருப்பார்.
சூர்யா தவிர சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா ஆகியோரின் கதாபாத்திரங்களும் படத்தில் அழுத்தமாக அமைந்திருந்ததோடு வெகுவாகவும் பேசப்பட்டது.
கெளதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் - பாடலாசிரியர் தாமரை காம்போவில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி எவர்க்ரீன் பாடல்களாக அமைந்தன.
இந்த படத்தில் தனது நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக படத்தை உருவாக்கியதாக இயக்குநர் கெளதம் மேனன் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். வாரணம் ஆயிரம் படம் ஹிட்டானதுடன், சூர்யாவுக்கு நல்ல பெயரையும் பெற்று தந்ததது.
2008ஆம் ஆண்டில் சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் வாரணம் ஆயிரம் படம் வென்றது.
கெளதம் மேனன் அடுத்த படம்
நடிப்பில் தற்போது அதிக கவனம் செலுத்தி வரும் கெளதம் மேனன் வெற்றிமாறன் இயக்கித்தில் விடுதலை 2 படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்தில் மம்முட்டி நடித்து வரும் பசூக்கா, தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் NBK109 ஆகிய படத்திலும் நடித்து வருகிறார்.
விக்ரமை வைத்து இவர் இயக்கி முடித்திருக்கும் துருவ நட்சத்திரம்: சேப்டர் ஒன் - யுத்த காண்டம் ரலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிபோயிருக்கும் நிலையில், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.