HBD Sundar.C: தமிழ் சினிமாவிற்கே நம்பிக்கை தந்த நட்சத்திரம்.. MGR கொடுத்த குஷியில் பர்த் டே கொண்டாடும் சுந்தர்.சி..
HBD Sundar.C:இயக்குநரும் நடிகரும் தயாரிப்பாளருமான சுந்தர் சி இன்று தனது 57வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

HBD Sundar.C: சினிமா என்பது மக்களின் பொழுதுபோக்கு அம்சம் தான் என்பதை மிகவும் தெளிவாக புரிந்து கொண்டு, தன்னை அந்த பொழுதுபோக்கை மட்டுமே மையப்படுத்தி நகர்த்திய இயக்குநர் சுந்தர். சி.
இவர், இயக்குநரும் நடிகருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா மட்டுமல்ல வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத் தெளிந்தவர். எதுவும் பிறப்பால் வந்தது அல்ல. நம் ஊக்கமும் முயற்சியுமே அத்தனைக்கும் வித்து என்பதை சுந்தர்.சியின் மனதில் வித்தாக பதியவைத்தார் மணிவண்ணன்.
எவர்கிரீன் முறைமாமன்
இதையடுத்து, சுந்தர். சி தான் கற்றுக் கொண்ட பாடங்களை வைத்து இயக்கிய முதல் படம் முறை மாமன். 1995ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம், முதல் வாரத்தில் சரியாக போகவில்லை. பின் படத்தை பார்த்தவர்கள் கொடுத்த விமர்சனத்தால் படம் பல நாட்களுக்கு ஹவுஸ் புல் தான். முதல் படத்திலேயே ஜெயராம், கவுண்டமணி, குஷ்பு, மனோரமா என்ற நடிகர்களுடன் சேர்ந்து பட்டையை கிளப்பி இருப்பார். இந்தப் படத்தை இத்தைனை ஆண்டுகளுக்கு பின் பார்த்தாலும் எவர்கிரீன் கிளாஸிக் தான். அத்தனை அத்தனை வசனங்கள், அத்தனை அத்தனை அர்த்தங்கள் என கணிக்க முடியாத பல கருத்துகளை படத்தில் ஆங்காங்கே தூவி இருப்பார்.
தொட்டதெல்லாம் ஹிட்
இதையடுத்து, சுந்தர்.சி இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி போன்ற படங்கள் எல்லாம் ஹிட்டோ ஹிட். இதனால், இவரது படம் என்றாலே 100 சதவீதம் சிரிப்பு என்பதை மக்கள் உறுதியாக நம்பி தியேட்டருக்கு செல்ல ஆரம்பித்தனர். பின்னர், சுயம்வரம், உன்னைத் தேடி போன்ற படங்களில் தன் படத்தின் சாயலை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார்.
மாஸ்டர் பீஸ் அன்பே சிவம்
பின், அன்பே சிவம் எனும் மாஸ்டர் பீஸ் படத்தை இந்த உலகுக்கு பரிசாக அளித்தார். அன்பே சிவம் படம் வெளிவந்த சமயத்தில் அது மக்களை பெரிதும் கவரவில்லை.
பல இடங்களில் எதிர்மறை விமர்சனங்கள் தான். இப்படி ஒரு மாஸ்டர் பீஸ் படத்தை தயாரித்தவரா இத்தனை காமெடி படங்களையும் காமெடி திரில்லர் படங்களையும் கொடுத்தார் என்ற சந்தேகம் தான் இன்றைய தலைமுறைக்கு எழும். அதுமட்டுமின்றி, அன்பே சிவம் படத்தால் தன் மகளுக்கு பள்ளியில் சீட் கிடைத்தது மட்டும் தான் பாசிட்டிவ்வாக நடந்த ஒன்று என மிக வருத்தமாக தனது எண்ணத்தையும் சுந்தர்.சி பதிவு செய்திருப்பார்.
மக்கள் பஸ்ல் அறிந்தவர்
இதைத் தொடர்ந்து, சுந்தர்.சி இயக்கிய கிரி, வின்னர் போன்ற படத்தின் காமெடி எல்லாம் இன்றும் மீம் டெப்ம்ளேட் தான். இதையடுத்து அவர் எடுத்த லண்டன், ரெண்டு போன்ற படங்கள் எல்லாம் சரியான வெற்றியை பெறவில்லை. இதன்பிறகு தான் அவர் படம் வருவது கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.
இந்நிலையில், சுந்தர்.சியின் கம்பேக் படமாக இருந்தது தான் கலகலப்பு படம். இந்தப் படம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அத்தனை பேரையும் கவர்ந்து மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. இதனால், கலகலப்பு படத்தின் அடுத்த பாகத்தையும் எடுத்தார். இதன் பின் தான் சுந்தர்.சி அரண்மனை படத்தை இயக்கினார். இந்த படம் மக்களின் அமோக வரவேற்பை பெற்றுத் தந்தது. பேய் படங்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள மவுசை அறிந்து கொண்ட சுந்தர்.சி ஹாரர் உடன் கிளாமரும் கலந்து தன் படங்களை ஹிட் ஆக்கினார்.
தெலுங்கு சினிமாவிற்கு சவால்
அதன் விளைவு அரண்மனை படம் கடந்த ஆண்டு 4வது சீசன் வெளியாகி தமிழ் சினிமாவின் முதல் வெற்றிப் படமாக அமைந்தது. அதே போல, 13 ஆண்டுகளுக்கு முன் விஷாலை வைத்து இவர் இயக்கிய மதகஜராஜா படம் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஆகாமலே போனது. இந்தப் படத்தின் போது ஏற்பட்ட நட்பின் விளைவாக இந்தக் கூட்டணி இணைந்து ஆம்பள எனும் படத்தையும் எடுத்து மாஸ் காட்டினர். பனைமரம் உயரத்திற்கு ஜீப்பை பறக்கவிட்டு அதில் அமர்ந்து எல்லாம் சண்டை செய்து கோலிவுட்டிலிருந்து தெலுங்கு சினிமாவிற்கே சவால் விட்டிருப்பார்.
நடிகர் அவதாரம்
இப்படி இயக்குநராக சம்பவம் செய்த சுந்தர்.சி, தன் உதவி இயக்குநர் சுராஜின் தலைநகரம் படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகனாகவும் சினிமாவில் சம்பவம் செய்திருப்பார். இந்தப் படம் அவருக்கு பெரிய ஹிட் கொடுத்தை அடுத்து வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், தீ, ஐந்தாம்படை, குரு சிஷ்யன் என ஆரம்பித்து தற்போது அரண்மனை படம் வரை அவர் நடிகராகவும் தனது முத்திரையை பதித்து வருகிறார்.
மை டியர் லவ்வருக்கு முன்னே சாதனை
இப்போது, 2025ம் ஆண்டில் வெளிான படங்களில் முதல் ஹிட் கொடுத்த படம் இவரது மதகஜராஜா தான். இந்தப் படத்தில் விஷால் பாடிய மை டியர் லவ்வரு பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட். இவரது வித்யாசமான குரல் பலரையும் இந்தப் பாடல் பக்கம் கவனத்தை திருப்ப வைத்தது. 12 வருடங்களுக்கு முன் பாடல் வெளியான சமயத்திலும் சரி, தற்போது படம் வெளியான சமயத்திலும் சரி படத்தை விட வைரலானது விஷாலின் குரல். இந்தக் குரலில் பாடுவது எல்லாம் சதாரண விஷயம் அல்ல என நினைத்தால் அது தான் தவறு. சுந்தர். சி தான் நடித்த படத்தில் பாடலை பாடி அந்த சாகசத்தை முன்பே பதிவு செய்துவிட்டார்.
நம்பிக்கை நட்சத்திரத்தின் வருத்தம்
அதுமட்டுமின்றி, ஒரு படத்தின் ரிலீஸ் 13 வருடங்களாக தள்ளிப் போனாலும், அந்தப் படத்தின் கதை நன்றாக இருந்தால் நிச்சயம் ஹிட் அடிக்கும் என நிரூபித்து தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் சுந்தர். சி. அதுமட்டுமின்றி, கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டின் முதல் மாபெரும் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநராகவும் உள்ளார் சுந்தர். சி.
இருந்தாலும், தமிழ் சினிமாவில் இத்தனை ஹிட் படங்கள் கொடுத்தும், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷ்களை அள்ளியும், தான் நல்ல இயக்குநர்களின் பட்டியலில் இன்றும் இல்லாமல் போனதாக அவர் வருத்தமும் அடைந்தார்.
கைவிடாத கணவர்
இப்படி, இயக்குநர், நடிகர், பாடகர், தயாரிப்பாளராக தன்னை மக்களுக்கு அறிமுகம் செய்து கொண்ட சுந்தர். சி ஒரு நல்ல காதல் கணவன் கூட. தன்னுடைய முதல் படமான முறைமாமனில் கதாநாயகியாக நடித்த குஷ்புவை காதலித்து குடும்பத்தின் சம்மதம் பெற்று கல்யாணம் செய்து கொண்டார். அவர், அப்போது, பிடித்த குஷ்புவின் கையை இத்தனை ஆண்டுகள் ஆகியும் விடாமல் இருக்கமாகவே பிடித்துள்ளார். தற்போது சினிமா நட்சத்திரங்கள் எத்தனையோ பேர் காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்தில் போய் நிற்கின்றனர்.
ஆனால், இந்த தம்பதி ஒருவர் மீது ஒருவர் மரியாதை செலுத்தி அவர்களின் தொழிலுக்கும் விருப்பங்களுக்கும் மரியாதை செலுத்தி பரஸ்பர புரிதலுடன் தங்கள் வாழ்க்கையை மிகவும் அழகாக நகர்த்தி வருகின்றனர். அப்படி பார்க்கும்போது, அவர் சினிமாவிலும் சரி குடும்ப வாழ்க்கையிலும் சரி அனைவருக்குமே நல்ல ஒரு எடுத்துக்காட்டு தான். இந்த வெற்றிக் களிப்புடனே இனிவரும் நாட்களையும் கொண்டாட ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் வாழ்த்துகள்.

தொடர்புடையை செய்திகள்