மணி சார் கூப்பிட்டும் நடிக்க மறுத்த மானு? அஜித் படத்தில் மட்டும் நடித்தது ஏன்? - டைரக்டர் சரண் விளக்கம்
காதல் மன்னன் படத்தின் கதாநாயகி மானு ஏன் வேறு படங்களில் நடிக்கவில்லை என்பது குறித்து இயக்குநர் சரண் விளக்கமளித்துள்ளார்.
காதல் மன்னன் படத்தில் கதாநாயகியாக நடித்த மானு, படம் வெளியான சமயத்திலேயே திலோத்தமா, திலோத்தமா என பார்க்கும் இடமெல்லாம் பேசப்பட்டார். ஆனால், அதன்பிறகு அவர் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. அப்படி இருக்கையில், மானு காதல் மன்னன் படத்தில் நடிக்க வந்தது எப்படி? அதன் பின் அவர் ஏன் படத்தில் நடிக்கவில்லை என்பது குறித்து அப்படத்தின் இயக்குநர் சரண் பிளிமிபீட் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
என் மனதில் இருந்த உருவம்
காதல் மன்னன் படத்தின் கதையை தயார் செய்துவிட்டு ஹீரோயின் தேர்விற்காக காத்திருந்தோம். என் மனதில் திலோத்தமா கதாப்பாத்திரத்திற்கு ஒரு உருவம் இருந்தது. அந்த உருவம் இதற்கு முன் இருந்த எந்த ஹீரோயினின் முகமாகவும் அது இல்லை. இதனால், நான் பல புதுமுக நடிகைகளை தேர்வு செய்து வந்தோம்.
அதே சமயத்தில் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையோடு சினிமாவிற்குள் சுத்திக் கொண்டிருந்த விவேக் சாரை இந்த படத்தில் அசோசியேட் டைரக்டராக பணிபுரிய அழைத்தேன். அவர் மிகவும் கெட்டிக்காரர். அவரும் இந்தப் படத்தில் அசோசியேட்டாக வேலை பார்த்தார்.
விவேக் கண்டுபிடித்த நடிகை
அந்த சமயத்தில் அவர் செல்லும் இடங்களிலும், நிகழ்ச்சிகளிலும் நான் நினைத்த கதாநாயகி போல் யாராவது இருந்தால் உடனே எனக்கு போன் செய்வார். ஆனா, எனக்கு அந்தப் பொன்னுங்கள எல்லாம் பிடிக்காது. அந்த சமயத்துல படத்துக்கு லொக்கேஷன் பாக்க போன சமயத்துல விவேக் எனக்கு போன் பண்றாரு. அப்புறம் நான் அவர்கிட்ட பேசலாம்ன்னு நெனச்சப்போ அவர் வெளிய போயிருந்தாரு. அவரோட மனைவி போன் எடுத்து விவேக் ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில ஒரு பொன்ன பாத்தாரு. அந்த பொன்ன உங்களுக்கு பிடிச்சா படத்துல நடிக்க யூஸ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னாருன்னு சொன்னாங்க.
முதல்ல எனக்கு பிடிக்கல
நானும் சென்னை வந்ததுக்கு அப்புறம் அவங்கள பாக்க விவேக் சாரோட போறேன். அங்க மானு பரதநாட்டியம் காஷ்ட்டியூம் எல்லாம் போட்டுட்டு டான்ஸ் ஆடிட்டு இருக்காங்க. அதுக்கு அப்புறம் அவங்ககிட்ட பேசுனா ஒரே பயம்.
ஏன்னா அவங்க சென்னைக்கு வந்தே 6 மாசம் தான் ஆகுது. பரதநாட்டியம் கத்துக்க அவங்க சென்னை வந்துருக்காங்க. எனக்கும் அவங்கள இந்த காஸ்ட்டியூம்ல பாத்ததுனால படத்துக்கு சரிபட்டு வருவாங்களான்னும் எனக்குத் தெரியல.
மறுநாள் நாங்க அவங்க வீட்டுக்கு போனோம். அவங்க அசாம் கௌகாத்தியில இருந்து வந்த ஒரு 16 வயசு பொன்னு. தனியா வீடு எடுத்து தங்கிருக்காங்க. படத்துக்காக கேகேகும் போதே நடிக்க விருப்பம் இல்லன்னு சொல்லிட்டாங்க. இருந்தாலும் நாங்க கதை சொல்றோம். ஆனா, எனக்கோ இதுதான் நான் இத்தனை நாளா தேடிட்டு இருந்த முகம்ன்னு தெரிஞ்சிடுச்சி.
அப்பாக்கு ஒகே.. பொன்னுக்கு பிடிக்கல
நாங்க என்னென்னமோ சொல்லி பாத்தோம். அவங்க ஒத்துக்கல. அப்புறம் அவங்க அப்பாட்ட பேசுனோம். அவரு கேட்ட உடனே சந்தோஷப்பட்டாரு. மானுக்கு பிடிச்சா எங்களுக்கு ஓகே தான்னு சொல்லிட்டாரு.
அதுக்கு அப்புறம் அந்தப் பொன்னுக்கு நெருங்கமானவங்க, டீச்சர்ன்னு எல்லாராயும் சமாதானப்படுத்தி படத்துல நடிக்க சம்மதம் வாங்குனோம்.
அப்புறம் அஜித் போட்டோ எல்லாம் காமிச்சு இவர் தான் ஹீரோன்னு எல்லாம் சொன்னோம். தமிழ் கத்துக்கொடுக்க ஆள் எல்லாம் செட் பண்ணி, அப்புறம் நிறைய படத்த எல்லாம் பாக்க வச்சோம்.
ஒரே கண்டீஷன்
அவங்க படம் பண்ணும் போதே வச்ச ஒரே கண்டீஷன் நான் இந்த ஒரு படத்துல தான் நடிப்பேன். வேற எந்த படத்துலயும் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.
படத்துல நடிக்க ஆரம்பிச்சப்போ அவங்களுக்கு நிறைய ஆஃபர் வந்தது. மணி சார் படத்துல நடிக்க கூட வாய்ப்பு வந்தது. ஆனா அத்தனையும் வேணாம்னு சொல்லி அவங்க உறுதியா இருந்துட்டாங்க என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.