'தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் பாலிவுட்டால இது முடியாது' பெட்டியை கட்டிய டைரக்டர்..
பாலிவுட்டால இதெல்லாம் எப்போவும் முடியாது அதனால் நான் இனி தென்னிந்திய படங்களில் நடிக்க உள்ளதாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.
பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் அதிர்ச்சியூட்டும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தென்னிந்தியத் திரையுலகில் நடிக்கவே முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக மும்பையை விட்டு வெளியேறுவதாகவும் கூறியுள்ளார். பாலிவுட் ஒருபோதும் சரியாகாது என்றும், 'புஷ்பா' போன்ற படத்தைக்கூட எடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய அனுராக்
பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப், 'கேங்ஸ் ஆஃப் வாசேபூர்', 'ரமன் ராகவ் 2.0', 'பாம்பே டாக்கீஸ்' போன்ற பாலிவுட் வெற்றிப் படங்களை இயக்கியவர். இவர் தற்போது பாலிவுட் திரையுலகம் குறித்து சில பயங்கரமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சமீப காலமாக தென்னிந்தியப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், மும்பையை விட்டு வெளியேறுவதாகவும், பாலிவுட் ஒருபோதும் தனக்கு சரியாகாது என்றும் கூறியுள்ளார்.
மும்பையை விட்டு கிளம்புகிறேன்
‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ இதழுக்கு அளித்த பேட்டியில் தான் பாலிவுட் குறித்த அந்த திர்ச்சியூட்டும் கருத்துகளை அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். “தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களைப் பார்க்கும்போது எனக்குப் பொறாமையாக இருக்கிறது. ஏனென்றால், இப்போது நான் சினிமாவில் புதிதாக எதையாவது முயற்சிப்பது கடினம். அதற்காக நான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
எங்கள் தயாரிப்பாளர்கள் லாபத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். இப்போது ஒரு படத்தைத் தொடங்குவதற்கு முன்பே, அதை எப்படி விற்பனை செய்வது என்பது பற்றித்தான் அவர்கள் யோசிக்கிறார்கள். இதனால், படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வமே எனக்கு போய்விடுகிறது. அதனால்தான் நான் பாலிவுட்டில் இருந்து வெளியேறுகிறேன். அடுத்த வருடமே மும்பையை விட்டு வெளியேறிவிடுவேன்” என்று அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.
பாலிவுட்டால் இது எப்போதும் முடியாது
மேலும் இந்தப் பேட்டியில், பாலிவுட்டால் ஒருபோதும் 'மஞ்சுமல் பாய்ஸ்' போன்ற படத்தை எடுக்க முடியாது என்றும், அப்படி ஒரு படம் வந்தால், அதன் ரீமேக் உரிமையைப் பெறத்தான் முயற்சிப்பார்களே தவிர அப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்ற சிந்தனையே வராது என்றும் கூறியுள்ளார். இந்தி சினிமா இதுவரை புதிதாக எதையும் செய்யவில்லை, 'புஷ்பா' போன்ற ஒரு படத்தைக் கூட பாலிவுட்டால் எடுக்க முடியவில்லை என்று கூறினார்.
படம் எடுக்கும் அறிவே இல்லை
அத்துடன் “அவர்களால் அப்படி ஒரு படத்தை எடுக்க முடியாது. ஏனென்றால், அவர்களுக்குப் படம் எடுக்கும் அறிவே இல்லை. திரைப்படத் தயாரிப்பு என்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. 'புஷ்பா'வை சுகுமார் இயக்கியுள்ளார். தென்னிந்தியாவில் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மீது முதலீடு செய்கிறார். சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான சுரேஷ் பாபு, ராணாவின் தந்தை, இயக்குநர்களுக்கு அதிகாரம் அளிக்கிறார்.
இங்கு அகங்காரம் தான் இருக்கிறது
பல இயக்குநர்களுக்கு அதிகாரம் அளித்த பெருமை அவருக்கு உண்டு. ஆனால், இந்தியில் அவர் சொல்வதை ஏன் கேட்கவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. இங்கே எல்லோரும் ஒரு ஃபார்முலாவை உருவாக்கவே முயற்சிக்கிறார்கள். ஒன்று வெற்றி பெற்றால், எல்லோரும் அதையே பின்பற்றுகிறார்கள். அவர்களுக்கு ஈகோ அதிகம். அவர்கள் தங்களைத் தெய்வங்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது அகங்காரம்” என்று அனுராக் காஷ்யப் கடுமையாக பாலிவுட் பிரபலங்களை கண்டித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் கலக்கும் அனுராக்
முன்னதாக தமிழ் சினிமாவில் உருவான விஜய் சேதுபதியுடன் இணைந்து 'மகாராஜா' என்ற படத்தில் அனுராக் காஷ்யப் நடித்தார். இந்தப் படம் தமிழ் மட்டுமின்றி இந்திய அளவிலும் பின்னர் சீனா போன்ற நாடுகளிலும் மெகா ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவர் அதர்வா, நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான இமைக்கா நொடிகள் படித்தில் நடித்தார். அந்தப் படத்திலும் இவரது நடிப்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.
இதனால், மேலும் பல தென்னிந்தியப் படங்களில் நடிக்க அனுராக் காஷ்யப் தயாராகிவிட்டார். சமீபத்தில், இவர் தென்னிந்திய திரைப்படங்களான 'ரைபிள் கிளப்', 'விடுதலை' பாகம் 2 ஆகிய படங்களிலும் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்