இவர் அட்டகத்தி அல்ல.. பிரிவினை செய்வோருக்கு எல்லாம் காலா.. ஆணித்தரமாக நிரூபிக்கும் பா.ரஞ்சித்..
சமூகத்தில் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்ட, நடத்திவரும் அநீதிகளுக்கு எதிராக தன் படைப்பின் மூலம் மட்டுமல்ல, தனது ஒவ்வொரு செயலின் மூலமும் எதிர்வினையாற்றி வரும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் பிறந்தநாள் இன்று.

சினிமாவில் ஒரு தரமான படைப்பு என்றால் அது மக்கள் மனதிற்குள் பதிய வேண்டும். அந்தக் கதையை அவர்கள் தன்னுடையதாக உணர வேண்டும். அது அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இப்படி அனைத்தையும் செய்வது தான் இயக்குநர் பா.ரஞ்சித்தின் படைப்புகள்.
தீர்க்கமான கருத்துகள்
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பா.ரஞ்சித் தான் சிறு வயது முதல் பட்ட அடக்குமறைகளையும், துயர்களையும், தலைமுறை தலைமுறையாக சுமந்து நிற்கும் வலிகளையும் மட்டுமே பேசவில்லை. அவற்றிலிருந்து விடுபட்டு சிறகடித்து பறப்பது எப்படி என்பது பற்றியும் தனது ஒவ்வொரு படைப்பிலும் மிக தீர்க்கமாக கூறி வருகிறார்.
தன்னை ஏறி மிதித்து நிற்பவர்களை அடித்து மேலே எழுந்து வருவதிலும் சிறந்தது, படித்து முன்னேறுவது. படிப்பினால் மட்டுமே சமுதாய மாற்றம் சாத்தியமாகும் என்ற கருத்தை தனது படங்களில் ஆணித்தரமாக நிரூபித்து வருகிறார்.