Director Ameer: ‘என்னுடைய மார்க்கம் வேற.. ‘விசாரணைக்கு நான் தயார்! - அமீர் வீடியோ!
அனைவருக்குமே நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அடிப்படையாகவே மது, விபச்சாரம், வட்டி ஆகிய விஷயங்களுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட மார்க்கத்தை பின்பற்றக் கூடியவன் நான்.
இறைவன் மிகப்பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் போதைக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அது குறித்து இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், “இறைவன் மிகப் பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் மீதான குற்றச்சாட்டில், என்னுடைய நிலைப்பாட்டை விளக்கிய போதும், என் மீது பேரன்பு கொண்ட ஊடகவியலாளர்களும், நண்பர்களும் தொடர்ச்சியாக சமூக வலைதள பக்கங்களிலும் ஊடகங்களிலும் குற்றச்செயலில் என்னை தொடர்பு படுத்தி, செய்திகள் வெளியிடுவதை பார்க்க முடிகிறது.
அனைவருக்குமே நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அடிப்படையாகவே மது, விபச்சாரம், வட்டி ஆகிய விஷயங்களுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட மார்க்கத்தை பின்பற்றக் கூடியவன் நான்.
அப்படி இருக்கையில் இது போன்ற குற்றச்செயல்களில் என்னை நீங்கள் தொடர்புபடுத்தி பேசுவதின் மூலமாக எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர, என்னுடைய குடும்பத்திற்கு மன உளைச்சல்களை ஏற்படுத்த முடியுமே தவிர வேறு எந்த ஒரு பயனையும் நீங்கள் அடைந்து விட முடியாது
நீங்கள் சொல்கின்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இருக்கிறார்கள்.
அவர்கள் என்னை எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சோதனையான காலகட்டத்தில் என் மீது அன்பு கொண்டு என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு ஆதரவளித்த அனைத்து உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றி” என்று பதிவிட்டு இருக்கிறார்.
பின்னணி என்ன?
டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பலை போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்தது. கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் தலைவன் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக் என்பதும் தெரிய வந்தது.
அதனைத்தொடர்ந்து ஜாபர் சாதிக் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். சினிமா தயாரிப்பாளராகவும், அமீரின் நெருங்கிய நண்பராகவும் இருக்கும் இவர், இறைவன் மிகப்பெரியவன், மங்கை படங்களை தயாரித்து வந்தார். இந்த நிலையில் இந்த விவாகரம் குறித்து இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், “மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.!
கடந்த இரண்டு நாட்களாக, எனது “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த 22-ம் தேதி நான் “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை.
எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.!
நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர்.
அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.
முழுவிபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன்.
“இறைவன் மிகப் பெரியவன்”
அன்புடன்,
அமீர்” என்று பதிவிட்டு இருந்தார். அதன் பின்னரும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அமீர் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
டாபிக்ஸ்