Dil raju on controversy speech: நல்ல படங்களை எப்போதும் ஆதரிப்பேன் - தில் ராஜு
ஒருத்தரை கிண்டல் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. வைரல் விடியோ மூலம் ஒருவர் இப்படித்தான் என தீர்மானித்துவிட வேண்டாம். எந்தவொரு நடிகரையும் தாழ்த்தியோ, உயர்த்தியோ பேசவில்லை. நல்ல படங்களை எப்போதும் ஆதரிப்பேன் என்ற சர்ச்சை விடியோ குறித்து வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் 1 ஹீரோ எனவும், அவர் நடித்துள்ள வாரிசு படத்துக்கு கூடுதல் திரையரங்கம் ஒதுக்குமாறும் உதயநிதியிடம் கேட்கப்போவதாகவும் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கூறிய விடியோ ஒன்று வெளியாகி வைரலானது.
இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் தயாரிப்பாளர் தில் ராஜு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் அஜித் - விஜய் ஆகியோர் இடையே யார் பெரிய நடிகர் என்பதை வசூல் ரீதியாகவும், படங்களின் ஹிட் லிஸ்ட் ரீதியாகவும் ரசிகர்கள் பலரும் பட்டியலிட்டு சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டு வருகிறார்கள்.
பிரபல ஊடகத்துக்கு தில் ராஜு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது அதற்கு அவரே விளக்கமும் அளித்துள்ளார்.
அதில், ஊடகங்கள் முன்னிலையில் எது பேசுவதாக இருந்தாலும் அச்சமாக உள்ளது. ஏனென்னறால் என்ன பேசினாலும் அது சர்ச்சையாகிறது. நான் ஒரு ஊடகத்துக்கு 45 நிமிடங்கள் அளித்த பேட்டியில் 20 விநாடிகளை மட்டும் எடுத்துக்கொண்டு பகிர்ந்துள்ளனர். அதில் முன்னரும், பின்னரும் என்ன பேசியிருந்தேன் என்பது கூட முழுவதுமாக தெரியாமல் அந்த விடியோவை வைரலாக்கியுள்ளனர்.
சர்ச்சைக்குள்ளாகியுள்ள பேட்டியை முழுவதுமாக பார்த்திருந்தால் நான் பேசிய விஷயம் தெளிவாக புரிந்திருக்கும். இந்த நேரத்தில் ஊடகங்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைக்க விரும்புகிறேன். ஒருத்தரை கிண்டல் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. இதுபோன்ற வைரல் விடியோ மூலம் ஒருவர் இப்படித்தான் என்பதை தீர்மானித்துவிட வேண்டாம்.
எந்தவொரு நடிகரையும் தாழ்த்தியோ, உயர்த்தியோ பேசவில்லை. நல்ல படங்களை எப்போதும் ஆதரிப்பேன். சினிமாவில் நான் சாதிக்க வேண்டிய விஷயங்iகள் ஏராளமாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, தெலுங்கு சினிமா இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் வாரிசு. தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
விஜய் நடித்துள்ள முதல் நேரடி தெலுங்கு படமாகவும் அமைந்திருக்கும் வாரிசு படத்துடன் அஜித்குமாரின் துணிவு படமும் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.
2014ஆம் ஆண்டில் அஜித்தின் வீரம் - விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடாக ஒரே நேரத்தில் வெளியாகின. இதன்பின்னர் 8 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் அஜித் - விஜய் படங்கள் ஒன்றாக ரிலீசாக இருப்பதால் இரு நடிகர்களின் ரசிகர்களும் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
இதையடுத்து தமிழகத்தில் எந்தப் படத்துக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படுகிறது என்ற போட்டி கடந்த சில நாள்களாகவே ரசிகர்களுக்கு இடையேயான கருத்து பரிமாற்றமாக இருந்து வந்த நிலையில், வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு, தனது படத்துக்கு கூடுதல் திரையரங்கம் ஒதுக்குமாறு பேசிய விடியோ சர்ச்சைக்குள்ளான நிலையில் தற்போது அவர் உரிய விளக்கமும் அளித்துள்ளார்.
டாபிக்ஸ்