தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  21 Years Of Dhool: ‘மதுரை வீரன் தானே’-'தூள்' படம் வெளியான தினம் இன்று!

21 Years of Dhool: ‘மதுரை வீரன் தானே’-'தூள்' படம் வெளியான தினம் இன்று!

Manigandan K T HT Tamil
Jan 10, 2024 06:50 AM IST

பரவை முனியம்மா பாடிய சிங்கம் போல நடந்துவாரான் செல்லப் பேராண்டி பாட்டு பட்டித் தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது நினைவிருக்கலாம்.

தூள் படத்தின் போஸ்டர்
தூள் படத்தின் போஸ்டர் (hotstar)

நடிகர் விக்ரம் நடிப்பில் தரணி எழுதி இயக்கிய 2003 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தூள். இந்தப் படம் வெளியாகிய 21 வருடங்கள் ஆகிவிட்டன. இப்படத்தில் விக்ரம், ஜோதிகா மற்றும் ரீமா சென், விவேக், சாயாஜி ஷிண்டே, தெலுங்கானா சகுந்தலா மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.

A. M. ரத்தினத்தால் தயாரிக்கப்பட்டது, இப்படம் ஜனவரி 10, 2003இல் வெளியிடப்பட்டது. இது நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. வணிக ரீதியாக வெற்றி பெற்ற படம். தூள் தெலுங்கில் வீடே (2003), மற்றும் சிங்களத்தில் ரஞ்சா (2014) என ரீமேக் செய்யப்பட்டது.

பரவை முனியம்மா பாடிய சிங்கம் போல நடந்துவாரான் செல்லப் பேரான்டி பாட்டு பட்டித் தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது நினைவிருக்கலாம்.

விவேக்-மயில் சாமியின் திருப்பதி லட்டு பிரசாதம் காமெடி மிகவும் ரசிக்க வைத்தது. அதேபோல், ஜோதிகா, பசுபதி, நடிகர் விக்ரம் ஆகியோரின் நடிப்பும் பாராட்டும் வகையில் இருந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

தில் படத்தைத் தொடர்ந்து தரணி இந்தப் படத்தை அதே மாஸுடன் இயக்கியிருந்தார். பக்கா ஆக்ஷன் படமாக உருவானது தூள்.

கெமிக்கல் ஃபேக்டரியில் இருந்து வெளியேறும் டாக்சிக் கழிவால் கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த துடிப்பான இளைஞர் ஆறுமுகம், அந்தத் தொகுதி எம்எல்ஏவை சந்தித்து மனு அளிக்க சென்னை வருகிறார். அப்போது அவர் சந்திக்கும் பிரச்சனைகளும் அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார், ஊர் பிரச்சனை தீர்ந்ததா என்பது பரபர திரைக்கதை.

வித்யாசாகர் இந்தப் படத்திற்கு இசை அமைத்திருந்தார். மெலோடி கிங்கான வித்யாசாகர் ஒவ்வொரு பாடலை வெரைட்டியாக கொடுத்திருந்தார்.

'ஆசை ஆசை', 'கொடுவா மீசை' ஆகிய பாடல்கள் இப்போது கேட்டாலும் உதடுகளை முனுமுனுக்க வைக்கும்.

இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே விஜய் நடித்த வசீகரா, கமல்ஹாசன்-மாதவன் நடிப்பில் வெளியான அன்பே சிவம் ஆகிய படங்களும் திரையரங்கில் வெளியாகின.

இருப்பினும், தூள் படமும் தொடர்ச்சியாக வசூல் மழையில் நனைந்தது. நடிகர் விக்ரமை மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக ஆக்கிய முக்கியமான படம் தூள் என்றால் அது மிகையல்ல.