D50 First Look: தனுஷின் 50ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - பெயர் என்ன தெரியுமா?
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் 50ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிக்கும் 50ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு ராயன் எனப்பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பல துறைகளிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார், தனுஷ். நடிகர் தனுஷ், நடிகர் ராஜ்கிரண் மற்றும் ரேவதியைப் பிரதான கதையின் மைந்தர்களாக வைத்து இயக்கி நடித்த படம், பவர் பாண்டி. அதன் பிறகு தெலுங்கு ஹீரோ நாகார்ஜுனாவை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்தார். ஆனால், அப்படம் இடையில் தற்காலிகமாக நின்றது. அதன்பின், மீண்டும் தனுஷ் இயக்கம் பக்கம் வந்தார்.
நடிகர் தனுஷ் தனது கேரியரில் மதிப்புமிக்க, தனது 50ஆவது படத்தை தானே இயக்கிவந்தார். இந்தப் படத்துக்கு தற்காலிகமாக 'டி50' எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் தனுஷ் மொட்டையடித்த நிலையில் நடித்துள்ளார். அறிவிப்பு போஸ்டரில், தனுஷ் பின்னால் இருந்து, சட்டையின்றி கையில் கத்தியுடன் காட்சியளித்தார்.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பெயர் ’ராயன்’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகிறது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் வத்திக்குச்சி திலீபனும் பின்னணியில் இருக்கின்றனர். அதில் காளிதாஸ் ஜெயராமும் வத்திக்குச்சி திலீபனும் ஒரு நடமாடும் உணவகத்தில் கூரிய கத்திகளை வைத்து முறைக்கின்றனர். அந்த நடமாடும் உணவகத்தின் செஃப் போன்று நிற்கும் நடிகர் தனுஷ் கையில் ஒரு இரும்புக் கம்பியைப் பிடித்திருக்கிறார்.
இப்படத்திற்கான இசையை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் செய்கிறார். ஒளிப்பதிவினை ஓம் பிரகாஷூம், எடிட்டிங்கினை ஜி.கே.பிரசன்னாவும் மேற்கொள்கின்றனர். சண்டைக்காட்சிகளை பீட்டர் ஹெயின் மாஸ்டர் செய்துள்ளார். இப்படம் 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரவுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் 100 கோடி ரூபாயைத்தாண்டி வசூல் செய்தது. இந்நிலையில் ’ராயன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ், பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மே' என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கு இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நடிகர் நாகார்ஜூனா இணைந்து நடித்து வரும் படமும் தயாராகி வருகிறது. இந்தப் படமும் 2024ஆம் ஆண்டுக்குள் வெளியாக வாய்ப்புள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்