9 Years of Maari: புறா ரேஸ், செம்மர கடத்தல்..! ரசிகர்களுக்கான மாஸ் மசாலா ட்ரீட்டாக அமைந்த தனுஷ் நடித்த மாரி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  9 Years Of Maari: புறா ரேஸ், செம்மர கடத்தல்..! ரசிகர்களுக்கான மாஸ் மசாலா ட்ரீட்டாக அமைந்த தனுஷ் நடித்த மாரி

9 Years of Maari: புறா ரேஸ், செம்மர கடத்தல்..! ரசிகர்களுக்கான மாஸ் மசாலா ட்ரீட்டாக அமைந்த தனுஷ் நடித்த மாரி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jul 17, 2024 07:00 AM IST

புறா ரேஸ், செம்மர கடத்தல், லோக்கல் கேங்ஸ்டர் என ரசிகர்களுக்கான மாஸ் மசாலா ட்ரீட்டாக மாரி படத்தை கொடுத்திருப்பார் தனுஷ். பாகுபலிக்கு போட்டியாக வந்து வசூலில் கலக்கல் தந்த படமாகவும் உள்ளது.

ரசிகர்களுக்கான மாஸ் மசாலா ட்ரீட்டாக அமைந்த தனுஷ் நடித்த மாரி
ரசிகர்களுக்கான மாஸ் மசாலா ட்ரீட்டாக அமைந்த தனுஷ் நடித்த மாரி

மாரி படத்தில் தனுஷ் - காஜல் அகர்வால் முதல் முறையாக ஜோடியாக நடித்திருப்பார்கள். இந்த படத்துக்கு முன்னர் இவர்கள் இருவரும் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்திலேயே ஜோடி சேருவதாக இருந்தது. படத்துக்கான போட்டோ ஷுட் நிகழ்த்தப்பட்ட போதிலும், ஹீரோயினாக அந்த படத்தில் காஜல் அகர்வால் நடிக்கவில்லை.

வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதேபோன்று அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக மாரி படத்தை தேர்வு செய்தார் தனுஷ்.

புறா ரேஸ் பற்றிய கதை

லோக்கல் கேங்ஸ்டராக மாரி என்ற கேரக்டரில் வரும் தனுஷ், தான் வாசிக்கும் ஏரியாவில் டானாக வலம் வருகிறார். அங்கு காலம்காலமாக நடக்கும் புறா ரேஸிலும் ஈடுபாடு கொண்டவராக உள்ளார்.

தனுஷை எதிரிகளுடன் சேர்ந்து அவரை ஒரு வழக்கில் சிக்க வைத்து அந்த ஏரியாவை தனது கண்ட்ரோலில் வைக்க முயற்சிக்கிறார் இன்ஸ்பெக்டராக வரும் விஜய் யேசுதாஸ். அத்துடன் தனுஷ் பாஸ் ஆக வரும் சண்முகராஜனையும் செம்மர கடத்தல் வழக்கில் சிறைக்கு தள்ளுகிறார்.

சிறையில் இருந்து வரும் தனுஷ் மீண்டும் தனது ஏரியாவில் எப்படி தாதாவாக உருவெடுக்கிறார் என்பதை மாஸ் மசாலா காட்சிகள், பஞ்ச் வசனங்களுடன் கூடிய திரைக்கதையில் மாரி படத்தை உருவாக்கியிருப்பார்கள்.

தமிழ் சினிமாவில் புறா ரேஸ் என்கிற புதிய விஷயத்தை இந்த படத்தில் காட்டியிருப்பார்கள். அதுபற்றி அதிகமாக காட்சிகள் இடம்பெறாம்ல இருந்தாலும் புறா ரேஸ் பற்றி பல்வேறு விஷயங்களை சொல்லியிருப்பார்கள்.

தனுஷுக்கு உதவுவது போல் அவரது முதுகில் குத்துவதும், பின்னர் தனுஷ் மீது உருகி காதல் வயப்படுவதுமான வழக்கான ஹீரோயின் ரோலை தனது அழகான நடிப்பால் வெளிப்படுத்தியிருப்பார் காஜல் அகர்வால்.

காமெடியில் ரோபோ ஷங்கர், கல்லூரி வினோத் ஆகியோர் கலக்கியிருப்பார்கள். பின்னணி பாடகரான விஜய் யேசுதாஸ் நடிகனாக அறிமுகமான இந்த படத்தில் வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார்.

தனுஷின் வித்தியாச கெட்டப்

மாரி படத்துக்கு முன்னர் தனுஷ் தனது லுக்கில் அல்லது கெட்டப்பில் பெரிய அளவில் மாற்றம் செய்யாமல் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் இந்த படத்தில் முறுக்கு மீசை, பெரிய கிருதா, குறும் தாடி, கூலர்ஸ் என தனது லுக்கில் இதுவரை இல்லாத அளவில் பெரிய மாற்றம் செய்திருந்தார். அத்துடன் வேஷ்டி அணிந்து விண்டேஜ் ஸ்டைல் சட்டையுடன் இருந்த அவரது ஆடையும் படம் வெளியான காலகட்டத்தில் பேமஸ் ஆனது.

பாடல்கள் வெறித்தன ஹிட்

தனுஷ், விக்னேஷ் சிவன், ரோகேஷ் பாடல் வரிகள் எழுத படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. மாரி தர லோக்கல் பாடலில் தனுஷின் டான்ஸ் வெறித்தனமாக அமைந்திருக்கும். கூடவே அனிருத்தும் கேமியோவாக தோன்ற டான்ஸில் கலக்கியிருப்பார்.

டானு டானு டானு பாடல் மெலடியிலும், தப்பாத்தான் தெரியும் பாடலும், பகுலு உடையும் தகலு மாரி, மாரி ஸ்வாக் போன்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ரிப்பீட் மோடில் கேட்கப்பட்டன.

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கல்

பாகுபலி முதல் பாகம் வெளியான அடுத்த வாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்போடு மாரி படமும் வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த போதிலும் ரசிகர்களை கவர்ந்ததுடன், சமூக வலைத்தளங்களிலும் கொண்டாடப்பட்டது. இதனால் கணிசமான அளவில் வசூலையும் பெற்றது. தனுஷின் மாஸ் மசாலா விருந்தாக அமைந்த மாரி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: