Dhanush: இரண்டு நிபந்தனை..தயாரிப்பாளர் சங்கத்தினர் வைத்த செக் - தனுஷ் மீதான ரெட் கார்டு நீக்கம்
Dhanush: இரண்டு நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்ட நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் தனுஷுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு தடையை நீக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தினர் வைத்த நிபந்தனைக்கு தனுஷும் ஒப்புக்கொண்டுள்ளாராம்.
பிரபல தயாரிப்பு நிறுவனங்களிடம் அட்வான்ஸ் தொகை வாங்கிய அந்த படங்களில் நடிக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறி நடிகர் தனுஷுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கடந்த ஜூலை மாதத்தில் ரெட் கார்டு விதித்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இந்த பிரச்னை தற்போது பேசி தீர்க்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தனுஷுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு திரும்ப பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
தனுஷுக்கு ரெட் கார்டு
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வரும் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் தமிழ் ஹீரோவாக இருந்து வருகிறார். தனுஷின் 50வது படமாக அவரே இயக்கி, நடித்த ராயன் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானதுடன், பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் அள்ளியது.
இதையடுத்து பிரபல தயாரிப்பு நிறுவனங்களிடம் அட்வான்ஸ் தொகை பெற்று அவர்களின் படங்களில் நடிக்காமல் இழுத்தடித்ததாகவும், அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுக்காமல் தனுஷ் இருந்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக தனுஷுக்கு ரெட் கார்டு விதிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்தது. இதன் விளைவாக தனுஷை தங்களது படங்களில் கமிட் செய்வதற்கு முன்னர் தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்து ஆலோசிக்கவும் வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே ஏற்கனவே கமிட்டான படங்களிலும், தான் இயக்கி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தின் பணிகளிலும் அவர் பிஸியாக இருந்து வந்துள்ளார்.
தனுஷ் மீதான தடை நீக்கம்
தன் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்பாக தனுஷ் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது. அதன்படி பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிப்பது, பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்திடம் பெற்ற அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் திரும்ப செலுத்துவது என இரு நிபந்தனைகளுக்கு தனுஷ் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரு நிபந்தனைகளை தொடர்ந்து தனுஷ் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளனராம்.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ள சூழ்நிலையில், அவர் நடிக்கும் புதிய படங்களைத் தொடங்குவதற்கு முன் தயாரிப்பாளர்கள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என கூறப்பட்டிருந்தது.
தனுஷ் புதிய படங்கள்
தனுஷ் தற்போது தெலுங்கு சினிமா இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி வரும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இது தவிர நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார்.
தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு
கடந்த ஜூலை மாதம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. அதில் அனைத்து புதிய திரைப்படத் திட்டங்களின் தொடக்கமும் ஆகஸ்ட் 16 முதல் நிறுத்தப்படும் என்றும், திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் சிக்கித் தவிக்கும் படங்களின் நிலுவைகளை அகற்றவும், அதிகரித்து வரும் தயாரிப்புச் செலவைக் கட்டுப்படுத்தவும் நவம்பர் 1 முதல் திரைப்படம் தொடர்பான அனைத்து வேலைகளும் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. நடிகர்களின் ஊதியம் மற்றும் பிற செலவுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தனுஷுக்கு தடை விதிப்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, தனுஷ் குறித்து முடிவெடுக்கும் முன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தங்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை என்று கவலை தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த திடீர் முடிவு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். இதன்பின்னர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு நடிகர் சங்கத்துக்கு, நடிகர் மற்றும் நடிகைகளின் கால்ஷீட் விவகாரத்தில் தயாரிப்பாளர்களுக்கு அதிக தலைவலியை ஏற்படுத்தும் ஐந்து முன்னணி நட்சத்திரங்களைப் பற்றி தெரிவித்து இருந்தது என தெளிவுபடுத்தியது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/