கங்குவா 1யே ரிசல்ட் தெரியல.. அடுத்து 2ஆம் பாகமா.. ஹீரோயின் தீபிகா படுகோனேவா.. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்ன சொல்கிறார்?
கங்குவா 1யே ரிசல்ட் தெரியல.. அடுத்து 2ஆம் பாகமா.. ஹீரோயின் தீபிகா படுகோனேவா.. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்ன சொல்கிறார்?
கங்குவா 2 திரைப்படத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார் என செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து தயாரிப்புத்தரப்பு விளக்கமளித்துள்ளது.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம், மிகப்பெரிய பீரியட் ஆக்சன் படமாக உருவாகி ரிலீஸாகியிருக்கிறது. பாலிவுட் முன்னணி நடிகை திஷா பதானி படத்தின் நாயகியாக நடித்திருந்தார். அனிமல் படத்தின் வில்லன் நடிகர் பாபி தியோல், ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் பேனர்களில் கே.இ.ஞானவேல் ராஜா, வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் கூட்டாக கங்குவா திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
கங்குவா 2 திரைப்படம் பற்றி பேசிய தயாரிப்பாளர்:
கங்குவா படம் வெளியான முதல் நாளிலிருந்தே திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இருந்தாலும் சிலர் கலவையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஆனால், கங்குவா படத்திற்கு வசூலும் குறையவில்லை. இந்தப் பின்னணியில்தான் கங்குவா 2 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது.
வித்தியாசமான கதாபாத்திரங்கள்:
கங்குவா திரைப்படத்தில் சூர்யாவின் இரண்டு வித்தியாசமான வேடங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படத்திற்காக அவர் உழைத்த உழைப்பு திரையில் வெளிவந்துள்ளது. சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
பாபி தியோலின் நடிப்பு மற்றொரு சிறப்பம்சமாக கூறப்படுகிறது. பாபி தியோல் இயக்குநர் சிவா தான் தயாரிப்புக்குழுவிற்கு முன்மொழிந்துள்ளார்.
'கங்குவா' படத்துக்கு தேவிஸ்ரீபிரசாத் இசையில், பி.ஜி.எம். அதிக சத்தத்துடன் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும், யோலோ, நெருப்புப் பாடல், நாயகன் பாடல்கள் எல்லாவற்றுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
பி.ஜி.எம் ஒலி அளவு விவகாரம்:
முன்னதாக, பி.ஜி.எம் கொஞ்சம் ஒலி அதிகமாக இருப்பதாக எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, திரையரங்குகளில் இரண்டு புள்ளிகள் ஒலி அளவை குறைத்து வைக்கவேண்டும் என தயாரிப்பாளர் தரப்புக் கேட்டுக்கொண்டது. மேலும், உரத்த ஒலி என்பது தொழில் நுட்பத் தவறு என்றும்; இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தின் தவறு எதுவும் இல்லை எனவும் படக்குழு கூறியுள்ளது.
கங்குவா 2 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோனே படத்தில் நடிகையாக நடிப்பார் என்று பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் கே.இ.ஞானவேல் ராஜா சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தீபிகா படுகோனே பற்றியும் கங்குவா திரைப்படத்தின் வசூல் மற்றும் பணி அனுபவங்கள் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார்.
கங்குவா படத்தின் தயாரிப்பாளர் அளித்த விளக்கம்:
இந்நிலையில் கங்குவா 2 படம் குறித்து கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் அளித்த விளக்கத்தில், ‘’கங்குவா 2 படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிப்பதில் உண்மை இல்லை. இப்படத்தின் வேலைகள் இன்னும் தொடங்கவில்லை.
அஜித்தை வைத்து ஒரு படம் பண்ண இயக்குநர் சிவா கமிட் ஆகியிருக்கிறார். அந்த ப்ராஜெக்ட்டுக்குப் பிறகு 'கங்குவா' 2 படத்தின் பணிகளைத் தொடங்குவோம். ஒரு மாதத்துக்கும் மேலான புரொமோஷனுக்காக, தூங்காமல் வெவ்வேறு இடங்களுக்கு பயணித்தோம். சிறிய இடைவெளிக்குப் பிறகு புதிய கதைகளைக் கேட்பேன்.
தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில், எங்கள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் 'வா வாத்தியார்' என்ற படத்தை தயாரித்து வருகிறது. இப்படம் வரக்கூடிய ஜனவரி அல்லது பிப்ரவரி மாத இறுதியில் வெளியாகும். அந்த படத்திற்குப் பிறகு எங்கள் நிறுவனத்தில் புதிய படங்களை அறிவிப்போம்’’ என கங்குவா படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா விளக்கமளித்துள்ளார்.
டாபிக்ஸ்