இதுதான் தனுஷின் உச்சம்.. சண்டைக்காரரோடு சேர்ந்த கமல்.. இன்றைய சினிமா டாப் 10 நியூஸ்
அதிக பட்ஜெட்டில் உருவாகும் தனுஷின் குபேரா படம் முதல், சண்டை பயிற்சியாளர்களின் படத்தில் நடிக்கும் கமல் வரை இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை இங்கு பார்க்கலாம்.

1. நடிகர் தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா நடித்து வரும் இந்தப் படத்தின் பட்ஜெட் முதலில் 90 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டதாம். ஆனால், படம் செல்ல செல்ல இது தற்போது 120 கோடி ரூபாய்க்கு வந்துள்ளதாம். இதனால், தனுஷின் சினிமா வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இது மாறியுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
2. நடிகர் கமல் ஹாசன் இயக்குநர் மணிரத்னத்தின் தக் ஃலைப் படத்தில் நடித்து முடித்த கையோடு தனது அடுத்தடுத்த படங்களுக்கான வேலைகளில் இறங்கத் தொடங்கினார். இவர், பா.ரஞ்சித் மற்றும் நெல்சனுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க உறுதி செய்த நிலையில், 237வது படமாக சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தெரிகிறது.
3. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து நல்லது செய்வார் என அவரது ரசிகர்கள் நம்புவது போல நாங்களும் நம்புகிறோம் என நடிகை சிநேகாவும் அவரது கணவர் பிரசன்னாவும் கூறியுள்ளனர். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்கள் இதை தெரிவித்தனர்.
4. எஸ்.ஜே.சூர்யா சில ஆண்டுகளாக நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது இவர் நடித்து வரும் கேம் சேஞ்சர் படம் ரிலீயான பின் படத்தின் அறிவிப்பு வரும் எனவும், இது நியூ 2 போன்று உருவாகும் படம் என்றும் கூறினார். அத்துடன் படத்திற்கு கில்லர் என பெயரிட்டிருப்பதாகவும் கூறி உள்ளார்.
5. நடிகர் ஜெயம் ரவி ஜீனி எனும் பேன்டஸி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் அர்ஜூனன் இயக்கும் இந்தப் படத்தில் கிருத்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கேபி ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே, ஜெயம் ரவியின் பிரதர் படம் தோல்வியை சந்தித்த நிலையில், இந்தப் படத்தை அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
6. குண்டூர் காரம் படத்தில் தன் அசாத்திய நடனம் மூலம் உலகப் புகழ் பெற்றவர் ஸ்ரீலீலா. இவர் தற்போது புஷ்பா படத்தில் கிஸ் கிஸ் கிஸ்க் எனும் பாடலுக்கு நடனமாடி ட்ரெண்டாகி உள்ளார். இந்நிலையில், இவர், தற்போது பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறியுள்ளார். நடிகர் ராணா டகுபதியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார்.
7. நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான சில்க் ஸ்மிதா- குயின் ஆஃப் தி சவுத் என்ற திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ஜெயராம் இயக்குகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த சந்திரிகா ரவி சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார்.
8. 12th fail திரைப்படம் மூலம் இந்திய மக்களின் ஆதரவைப் பெற்ற விதார்த் மாஸ்ஸி சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக் கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்த அவர், தற்போது குடும்பத்திற்காக நாட்களை செலவு செய்யும் நேரம் வந்துவிட்டது. இதுவரை தனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி எனக் கூறியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி சபர்மதி ரிப்போர்ட் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
9. கன்னட நடிகையான சோபிதா சிவன்னா ஹைதராபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
10. கிரிக்கெட்டை மையமாக வைத்து சத்தமே இல்லாமல் வெளிவந்து வசூல் வேட்டை செய்த படம் லப்பர் பந்து. இந்தப் படம் மட்டுமல்ல, படத்திலுள்ள பாடல்களும் மக்கள் மத்தியில் பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில், இப்படத்தில் ஷான் ரோல்டன் இசையில் வெளிவந்த சில்லாஞ்சிருக்கியே வீடியோ பாடல் 2 கோடி பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.

டாபிக்ஸ்