போட்றா வெடிய..தடையை உடச்சாச்சு..சென்சாரும் முடிச்சாச்சு! இனி ரிலீஸ் மட்டும்தான் - கங்குவா படம் மொத்த நீளம் எவ்வளவு?
கங்குவா படத்துக்கு தடை கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், படத்தின் சென்சாரும் முடிக்கப்பட்ட நிலையில் படத்தின் மொத்தம் நீளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் ஆக்ஷன் கலந்த பேண்டஸி த்ரில்லர் படமாக கங்குவா உருவாகியுள்ளது. இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மிக பெரிய பொருள் செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இதையடுத்து இந்த படத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பிரச்னை தீர்க்கப்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸுக்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கங்குவா படத்தின் மொத்த நீளம்
இதற்கிடையே கங்குவா படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நடிகர் சூர்யா உள்பட படக்குழுவினர் இந்தியா முழுவதும் பல்வேறு ஊர்களுக்கு சென்று படத்தை பிரபலப்படுத்தி வருகிறார்கள். இந்த நேரத்தில் கங்குவா படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். அத்துடன் படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் சென்சார் விவரம் குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கங்குவா ரிலீஸுக்கு தடையில்லை
இந்த படத்தை தயாரித்திருக்கும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பல்வேறு படங்களை தயாரிக்க தங்களது நிறுவனத்திடம் கடனாக பெற்ற தொகையில் ரூ. 55 கோடி செலுத்தவில்லை எனவும், அதை திருப்பி தராமல் கங்குவா படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின் போது முதல் கட்டமாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் மோங்கோ மாஸ் மீடியா நிறுவனம் ரூ. 18 கோடி செலுத்திய நிலையில், மீத பணத்தை இன்று செலுத்துவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்படி எஞ்சிய கடன் தொகையை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் செலுத்திய நிலையில், கங்குவா படத்தை ரிலீஸ் செய்ய தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே கங்குவா படம் திட்டமிட்டபடி நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வரும்.
ஃப்ரீ புக்கிங்கில் கலக்கும் கங்குவா
கங்குவா படத்தை பார்த்த திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். இதையடுத்து படத்துக்கு ப்ரீ புக்கிங் மூலம் மட்டுமே தற்போது வரை ரூ. 2 கோடிக்கு மேல் வசூல் ஆகியிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. உலகம் முழுவதும் இந்த படம் சுமார் 10 ஆயிரம் ஸ்கிரீன்களில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் வடஇந்தியாவில் மட்டும் 3 ஆயிரம் ஸ்கிரீன்களில் படத்தை வெளியிடவுள்ளார்களாம். இதுவரை எந்தவொரு தமிழ் படத்துக்கும் வட இந்தியாவில் இவ்வளவு ஸ்கீரின் ஒதுக்கப்பட்டதில்லை என பேசப்படுகிறது. படம் தமிழ், தெலுங்கு, இந்தி தவிர உலகம் முழுவதும் 38 மொழிகளில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கங்குவா ரிலீஸுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் விரைவில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது. சூர்யா நடிப்பில் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியாக இருக்கும் படம் என்பதால் மிக பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கங்குவா கதை
கேரளா மாநிலம் கொச்சியில் நடந்த படத்தின் புரமோஷனில் நடிகர் சூர்யா, கங்குவா படத்தின் கதையை வெளிப்படுத்தினார். அப்போது பேசிய அவர், "700 வருடங்களுக்கு முன்னர் மூன்று தீவுகள் இருக்கிறது. அதில் ஒன்றான கங்குவா தீவில் தீ தான் கடவுள். அதே போல் இன்னொரு தீவில் தண்ணீர்தான் கடவுள், மற்றொன்றுக்கு ரத்தம். இந்த தீவுகளுக்குள் நடக்கும் கருத்து வேறுபாடுகள், அதை பற்றி சொல்வதுதான் படம்.
படத்தில் ஆக்ஷன் படம் மட்டும் இல்லாமல் ஏராளமான ஏராளமான எமோஷன்களும் இருக்கிறது. காதலின் உட்சபட்ச வெளிப்பாடு மன்னிப்பு. அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த மன்னிப்பு தான் இந்த படத்தின் மையக்கரு. அதை வைத்து தான் கதையை விரிவுபடுத்தியுள்ளார்கள்” என்றார்.