Cool Suresh:ஏன் மேடை ஏத்தல;நான் என்ன கருவேப்பிலையா?- சிம்புவை சாடிய கூல் சுரேஷ்!
தன்னை அனைவரும் கருவேப்பிலை போல பயன்படுத்துவதாக நடிகர் கூல் சுரேஷ் பேசி இருக்கிறார்
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவராஜ்சிவகுமார் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மஃப்டி. இந்த படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ ‘நெடுஞ்சாலை’ படங்களை இயக்கிய கிருஷ்ணா சிலம்பரசனை வைத்து ரீமேக் செய்து இருக்கிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து மிகவும் பிரமாண்டமாக நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பாடல்களுடன் படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் படக்குழுவினர் பலர் மேடை ஏறி பேசிய நிலையில் சிலம்பரசனின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் பேச அனுமதிக்க வில்லை. இது கூல் சுரேஷிற்கு வருத்தத்தை உண்டாக்கி உள்ளது. அதனை அவர் நிகழ்ச்சி முடிந்தவுடன் கொடுத்த பேட்டியில் சொல்லி ஆதங்கப்பட்டார்.
இது குறித்து கூல் சுரேஷ் பேசும் போது, “ நாலு வார்த்தை அங்க பேசிருக்கணும். இங்க வந்து என்னை பேசு என்று சொல்கிறீர்கள். உயிரை கொடுத்து ஒருத்தன் கத்திட்டு இருக்கான். என்ன கருவேப்பிலை மாதிரி பயன்படுத்துறாங்க. ஆனா நான் அதைப்பற்றி கவலைப்படவே இல்லை.
என்னை நீங்கள் கருவேப்பிலை போல பயன்படுத்தினாலும் சரி, இல்லை நோய் தீர்க்கும் வேப்பிலை போல பயன்படுத்தினாலும் சரி, சினிமாவுக்காக, என் தலைவன் சிலம்பரசனுக்காக நான் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருப்பேன். இது எல்லாமே எனக்கு சிலம்பரசன்தான் கொடுத்தது.
நான் பத்து தல ரிலீஸ் அன்று நான் ஹெலிகாப்டரில் வருவேன் என்று சொல்லி இருந்தேன். என் வீட்டை வித்தாவது நான் அன்றைய தினம் ஹெலிகாப்டரில் வருவேன்” என்று பேசினார்.
முன்னதாக படம் குறித்து பேசிய இயக்குநர் கிருஷ்ணா "இந்த படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேல் நடந்து கொண்டு இருக்கிறது. அத்தனை காலங்களிலும் அது குறித்து பேசி உயிர்ப்புடன் வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. படம் நன்றாகவே வந்திருக்கிறது. படம் வெளியானாலும் அது எப்படியான வெற்றியாக அமையும்.. என்ற கம்பேரிசனை நினைத்து பயமாக உள்ளது.
இது ரீமேக் கிடையாது. தழுவல்தான். 90% வேறாக கொடுத்திருக்கிறேன். இரண்டு மூன்று காட்சிகள் மட்டும்தான் ஒன்றாக இருக்கும். சிலம்பரசன் சிறப்பாக நடித்துள்ளார். கெளதம் மேனன், கெளதம் கார்த்திக், ரெடின் கிங்ஸ்லி, கலையரசன், டிஜே அனைவருமே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் நிறைய சர்ப்ரைஸ் எலிமெண்ட்ஸ் இருக்கும். ஏ.ஆர். ரஹ்மான் சார் சிறந்த இசையை கொடுத்துள்ளார்.” என்று பேசினார்.