‘நிலத்தை ஆக்கிரமிச்சுட்டாங்க’; சூரியின் அம்மன் ஹோட்டலை சீல் வைக்கக்கூறி ஆட்சியரிடம் புகார்! - நடந்தது என்ன?
சூரியின் அம்மன் ஹோட்டலை சீல் வைக்கக்கூறி ஆட்சியரிடம் புகார்! - நடந்தது என்ன?
நடிகர் சூரி அம்மன் என்ற பெயரில் ஹோட்டல்களை நடத்தி வருகிறார். அந்த வகையில், மதுரை ராஜாஜி மருத்துவமனை வளாகத்திலும் இவருக்கு சொந்தமான ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த ஹோட்டலை சீல் வைக்கவேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
காரணம் என்ன?
மேற்கண்ட புகாரை முத்துக்குமார் என்பவர் கொடுத்து இருக்கிறார். அவர் கொடுத்த புகாரில், 360 சதுர அடி திறந்தவெளியை, உணவக நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாக அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் அந்த புகாரில்,' சூரி ஹோட்டலில் சுகாதார சீர்கேடு நடக்கிறது. மருத்துவமனை வளாகத்தில் அம்மன் ஹோட்டலுக்கு 434 சதுர அடி பரப்பளவில் மட்டுமே ஹோட்டல் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அம்மன் உணவக நிர்வாகத்தினர் செவிலியர்களின் கழிவு நீர் தொட்டி இருக்கும் பகுதியில், கூடுதலாக 350 சதுர அடி பரப்பளவை ஆக்கிரமித்து, அதில் நிரந்தர செட் போட்டு வேலைகளை கவனித்து வருகின்றனர்.
செப்டிக் டேங்க்
அத்துடன் செப்டிக் டேங்க் அருகிலேயே காய்கறி நறுக்குதல், சமைத்தல், உணவுப் பொட்டலங்களை தயார் செய்தல் உள்ளிட்ட வேலைகளை சுகாதாரத்தை மனதில் வைக்காமல் செய்து வருகிறார்கள். ஆகையால் இதனை உடனடியாக கவனித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது
உணவு நிர்வாகம் தரப்பு விளக்கம்
காழ்ப்புணர்ச்சி காரணமாக தனி நபர் தூண்டுதலின் பேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக உணவக நிர்வாக விளக்கம் கொடுத்து இருக்கிறது.
சினிமாவில் நீண்ட காலம் போராடி, சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த சூரிக்கு, வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி அவரை மிகப் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தது.
அந்தப் படத்தில் கிடைத்த வெளிச்சம், அதன் பின்னர் சூரிக்கு அடுத்தடுத்த காமெடி கதாபாத்திரங்களுக்கான வாய்ப்புகளை கொண்டு வந்தது. அந்த வாய்ப்புகளைக் கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட அவர், முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார். இந்த நிலையில், சினிமாவில் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்த சூரிக்கு, இயக்குனர் வெற்றிமாறன் தனியே விடுதலை திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். இந்த படத்தின் முதல் பாகத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சூரிக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுகள் குவிந்தன. அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான கருடன் திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதன் பின்னர் வெளியான கொட்டுக்காளி திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அண்மையில் விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. அதில் விஜய் சேதுபதியின் சுற்றி கதைக்களம் அமைந்திருந்ததால் சூரிக்கு பெரிதான கதாபாத்திர அழுத்தம் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் முடிந்த அளவு அவர் தன்னுடைய நடிப்பால் மக்களிடம் கவனம் ஈர்த்து இருந்தார். தற்போது அவர் மாமன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார்.
டாபிக்ஸ்