Kadhal Sukumar: தனி குடித்தனம்.. நகைகளை வாங்கி திருமணம் செய்வதாக ஏமாற்றிவிட்டார்.. காதல் சுகுமார் மீது துணை நடிகை புகார்
Complaint Against Kadhal Sukumar: திருமணம் செய்வதாக கூறி தனி குடித்தனம் நடத்திவிட்டு பணம், நகைகளை வாங்கி ஏமாற்றிவிட்டதாக காதல் சுகுமார் மீது துணை நடிகை புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களை தனது அற்புதமான காமெடியால் வயிறு குலுங்கு சிரிக்க வைத்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவரை போன்ற தோற்றத்திலும், இவரது பாடிலாங்குவேஜ், டயலாக் டெலிவரியை அப்படியே வெளிப்படுத்தும் விதமாகவும் பல்வேறு காமெடியன்கள் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்கள். ஆனால் அவர்களில் யாரும் வடிவேலுவுக்கு இணையாக ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை.
அந்த வகையில் பார்ப்பதற்கு வடிவேலு போன்ற சாயல், பேச்சு என இருந்து வருவதுடன், தமிழ் சினிமா தனக்கென ஒரு இடத்தையும் பிடித்திருப்பவர் காதல் சுகுமார். ஆரம்பத்தில் இவர் வடிவேலு போலவே காமெடிகள் செய்து வந்தாலும், காதல் படத்தில் சோலவாக இவர் வெளிப்படுத்திய காமெடி பெர்பார்மென்ஸால் காதல் சுகுமார் என்று அழைக்கப்பட்டார். நடிகனாக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் தமிழில் சில படங்களை இயக்கியுள்ளார் காதல் சுகுமார்.
ஏமாற்றிவிட்டதாக புகார்
காதல் சுகுமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சில ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு, நகை மற்றும் பணத்தை பெற்று மோசடி செய்துவிட்டதாக துணை நடிகை ஒருவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காதல் சுகுமாரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், "காதல் சுகுமாருக்கும் தனக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், திருமணம் செய்து கொள்வதாக கடந்த மூன்று ஆண்டுகள் தன்னிடம் நகை, பணம் வாங்கியுள்ளார். இப்போது தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாக கூறி, என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்ற பார்க்கிறார். தனக்கு திருமணம் ஆனதை மறைத்து பொய்யாக பழகியதோடு, பணமோசடியிலும் ஈடுபட்டுள்ளார்." என்று குறிப்பிட்டுள்ளார்.
சினிமாவில் காமெடியனாக வலம் வரும் காதல் சுகுமார் மீதான இந்த புகார் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் சுகுமார் படங்கள்
1997இல் வெளியான சக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான காதல் சுகுமார் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் விருமாண்டி, வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய படங்களில் காமெடியன்களின் ஒருவராக நடித்தார்.
கமலிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், திருட்டு விசிடி, சும்மாவே ஆடுவோம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
வடிவேலு தாக்கிய சம்பவம் குறித்து காதல் சுகுமார்
தன்னை இமிடேட் செய்வது பிடிக்காத நிலையில், காதல் சுகுமாரை வடிவேலு தாக்கியுள்ளாராம். இதுதொடர்பாக காதல் சுகுமார் குமுதம் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "அப்போது கலகலப்பு என்ற ஒரு திரைப்படத்தில் நடிக்க நான் கமிட் ஆகி இருந்தேன். அந்த திரைப்படத்தில் என்னை வடிவேலு போல அவர்கள் நடிக்கச் சொன்னார்கள். அதற்கு எதற்கு சார் நான் அவரை போல நடிக்க வேண்டும்.. அதற்குதான் அவர் இருக்கிறாரே.. என்றேன்.
அதன் பின்னர் சரி நடிக்கலாம் என்று சொல்லி நானும் பொன்னம்பலம் அவர்களும் இணைந்து அந்த காட்சியில் நடித்தோம். கிட்டத்தட்ட அப்படியே வடிவேலு மாதிரியே நடித்தேன். இந்த நிலையில்தான் வடிவேலுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி முத்துக்காளையும் போண்டாமணியும் நான் அவரைச் சென்று பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.
உடனே நான் குருவே பார்க்கப்போகிறோம் என்று பூரிப்பில் பூங்கொத்து எல்லாம் வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன். அவரை மருத்துவமனையில் பார்த்துவிட்டு பூங்கொத்து கொடுத்து வணக்கம் என்று சொல்லி பேசினேன். குருவே இல்லாமல் வித்தை கற்றுக் கொண்டேன் என்று நான அவரிடம் சொல்ல அவரும் என்னுடைய ஆத்தாவும் என் வயிற்றில் பிறந்தது போல நீ இருக்கிறாய் என்று சொல்வதாகச் சொன்னார்.
இந்த நிலையிதான் போண்டா மணியையும், முத்துக் காளையும் அங்கிருந்து வெளியேறினார்கள். உடனே சரி நம்மளும் சென்று விடுவோம் என்று நான் செல்லும் பொழுது.. இருப்பா.. நான் பேச வேண்டும் என்று சொல்லி என்னை நிற்கவைத்தார் வடிவேலு.
வடிவேலு ஏண்டா தம்பி ஒவ்வொரு கம்பெனியாக சென்று நான் வடிவேலு போல நடிப்பேன் என்று சொல்கிறாயா என்று கேட்டார். அதற்கு நான் உங்களைப் போன்ற நடிப்பேன் என்று உலகத்திற்கே தெரியும்.. சினிமாவில் நான் அப்படி பண்ண மாட்டேன் என்று சொன்னேன். உடனே அவர் இல்லையே என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட படத்தில் என்னை போலவே நடித்து இருக்கிறாயாமே என்று கேட்டார். உடனே நான், அப்போது வாய்ப்பு வந்தது பண்ண வேண்டிய சூழ்நிலையாகிவிட்டது. செய்து விட்டேன். இனி பண்ண மாட்டேன் என்று சொன்னேன். இந்த நிலையில் தான் பின்னால் இருந்த ஒருவர் என்னடா எதிர்த்து எதிர்த்து பேசுகிறாய் என்று சொல்லி என்னை தலையில் அடித்து கீழே தள்ளினார்.
தாறுமாறாக அடிகள் விழுந்தன. பயந்து போய் நம்மை எதுவும் செய்து விடுவார்கள் என்று சொல்லி, இனிமேல் நான் இப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டேன்..நடிக்க மாட்டேன் என்று சொல்லியும் ஊரை விட்டு ஓடி விடுவேன் என்று சொல்லியும் அங்கிருந்து தப்பி ஓடி வந்தேன். இதனையடுத்து நான் வீட்டுக்கு வந்தேன் காயங்களை பார்த்த என்னுடைய மனைவி மீனா ஏன் இப்படி அடிபட்டு இருக்கிறது என்று கேட்க, நான் வண்டியில் இருந்து கீழே விழுந்து விட்டேன் என்று பொய் சொன்னேன்.
அவளுக்கு வண்டிக்கு எதுவும் ஆகவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. ஒரு கட்டத்தில் தூக்கமே வர முடியாமல் தவித்து, ஒரு மூன்று நான்கு மணிக்கு எழுந்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன்; அதற்கு என் மனைவி உங்களை பார்த்து ஒருவர் அச்சப்படுகிறார் என்றால் நீங்கள் அவருக்கு சமமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம் என்று தேத்தினாள்” என்று பேசினார்.
டாபிக்ஸ்