சனியின் சூழ்ச்சியை முறியடிப்பாரா சிவன்? இந்த வாரம் சிவசக்தி திருவிளையாடல் எபிசோடில் திருப்பம் நிறைந்த காட்சிகள்
அபஸ்மரனை அழிக்க நடராஜர் உருவம் எடுக்கிறார் சிவன். இதன் பின்னர் சனியின் பிடியில் சிக்கும் சிவ - பார்வதி குடும்பம் அவரது பிடியில் இருந்து விடுபட்டு, சூழ்ச்சியை முறியடிப்பாரா? போன்ற பரபரப்பு மிக்க காட்சிகளுடன் இந்த வாரம் சிவசக்தி புராணம் எபிசோட் காட்சிகள் ஒளிபரப்பாகவுள்ளன
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் சிவசக்தி திருவிளையாடல் ஆன்மிகப் புராண தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. ரசிகர்களின் அமோக ஆதரவுடன் வெற்றித் தொடராக ஜூன் மாதம் முதல் ஒளிப்பரப்பாகி தொடரின் இந்த வாரம் எபிசோடு அப்டேட்களை பார்க்கலாம்
நடராஜர் அவதாரம் எடுக்கும் சிவன்
அபஸ்மரன் பார்வதிதேவியின் நினைவுகளை அழிக்கிறான். அதன் பிறகு, மக்களின் நினைவுகளை குழப்பி பிரபஞ்சத்தில் பெரும் குழப்பத்தை உருவாக்குகிறான். அபஸ்மரனை அழிக்க நினைக்கும் கார்த்திகேயனும் அவன் பிடியில் சிக்குகிறார். கார்த்திகேயன் உள்பட தேவர்கள் அனைவரும் அசுர அரசன் சும்பனுக்கு துதிபாடத் தொடங்குகிறார்கள். மொத்த அசுர குலமும் குதுகலிக்கிறது. அபஸ்மரனை அடக்க, சிவன் நடராஜர் அவதாரம் எடுக்கிறார். அபஸ்மரனை அழித்தால், பிரபஞ்சம் சமநிலை இழக்கும் அபாயம் இருக்கிறது. அதனால் அபஸ்மரனை அழிக்காமல் தான் காலுக்கு அடியில் அழுத்தி வைக்கிறார் நடராஜர்.
அபஸ்மரனை நடராஜரிடம் இருந்து விடுதலை செய்ய, அசுர குரு சுக்ராச்சாரியார் யோசனை அளிக்கிறார். அதன் படி அறுபதாயிரம் சூர்யா புத்திரர்களின் அஸ்தியைக் கொண்டு ஆயுதம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்று சொல்கிறார் சுக்ராச்சாரியார். எப்படி இது சாத்தியம் என்று சும்பன் கேட்க, சுக்ராச்சாரியார் ஏற்கனவே அறுபதாயிரம் அஸ்தி தயாராக உள்ளது. அதை எடுத்து வந்தால் போதும் என்று அது பற்றி விளக்குகிறார்.
முன்னொரு காலத்தில் சூர்ய குலத்தைச் சேர்ந்த மன்னன் சாகரன் அஸ்வமேத யாகம் செய்தான். அவன் குதிரை சொர்க்கத்தையும் கடக்கும் என இந்திரன் அஞ்சினான். அதனால் சூழ்ச்சி செய்து அந்த குதிரையை கபில முனியின் ஆஸ்ரமத்தில் கட்டிவைத்தான். குதிரையைத் தேடிச் சென்ற, சாகரனின் அறுபதாயிரம் புத்திரர்கள் தவத்தில் இருக்கும் கபில முனிதான் இந்த வேலையைச் செய்தது என்று தவறாக நினைத்தார்கள். அவரின் தவத்தினைக் கலைத்தார்கள். கடும் கோபம் கொண்ட முனி அறுபதாயிரம் புத்திரர்களையும் சாபத்தினால் எரித்துவிட்டார்.
இந்திரனின் சுழ்ச்சியால் கபில முனியின் கோபத்தில் சாம்பலானார்கள் அறுபதாயிரம் சூர்ய புத்திரர்கள். அந்த அஸ்தி இன்னும் உள்ளது. அதன் மூலம் தான் ஆயுதம் தயாரிக்க திட்டமிட வேண்டும் என்கிறார்.
பகீரதனுக்கு வரம் கொடுக்கும் பிரம்ம தேவர்
மறுபுறம் சூர்ய குலத்தைச் சேர்ந்த பகீரதன் தன் முன்னோர்கள் அறுபதாயிரம் பேருக்கும் மோட்சம் கிடைக்க பிரம்மதேவரை நோக்கி தவம் இருக்கிறார். மும்மூர்த்திகள் அசுரர்களின் சூழ்ச்சியை முறியடிக்க திட்டமிடுகிறார்கள். பிரம்ம தேவர் பகீரதனுக்கு வரம் கொடுக்க முடிவு செய்கிறார். அதன்படி, பிரம்மனின் கமண்டலத்தில் இருந்து கங்கையை பூமிக்கு அனுப்பி அறுபதாயிரம் சூர்ய புத்திரர்களின் அஸ்திக்கும் பாவ விமோசனம் அளிக்கும்படி பகீரதன் கேட்கிறார். பிரம்மா தயங்குகிறார்.
சனியின் பிடியில் சிக்கும் சிவ - பார்வதி குடும்பம்
சிவன் பார்வதியை அழிக்க இருந்த அனைத்து மார்க்கமும் அடைக்கப்படுகிறது. அதனால் அசுர மாதா திதி, சூர்யா புத்திரனான சனி தேவனை நாடுகிறார். அசுர மாத திதியின் சூழ்ச்சியால் சனிபகவான் சிவன் பார்வதியின் குடுபத்துக்கு எதிராக திரும்புகிறார். கார்த்திகேயனை சனியின் பிடியில் சிக்கவைத்து, கார்த்திகேயனை சிவனுக்கு எதிராக திருப்புகிறார். இதனால் கைலாயத்தில் பிரச்னை உருவாகிறது.
சிவன் சனியின் சூழ்ச்சியை முறியடிப்பாரா? கார்த்திகேயன் சனியின் பிடியிலிருந்து விடுபடுவாரா? அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்புடன் இந்த வாரக் கதை நகர்கிறது.