தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Unnikrishnan: மக்களை மயக்கிய மெல்லிய குரல்.. முதல் பாடலில் உச்சம் தொட்ட உன்னி கிருஷ்ணன்..!

HBD Unnikrishnan: மக்களை மயக்கிய மெல்லிய குரல்.. முதல் பாடலில் உச்சம் தொட்ட உன்னி கிருஷ்ணன்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 09, 2024 05:51 AM IST

HBD Unnikrishnan: மென் காந்த குரலால் தமிழ் இசை ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் உன்னிகிருஷ்ணன் வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் பெற்ற வாழவேண்டும் என்று ஹெச்.டி.தமிழ் வாழ்த்துகிறது.

மக்களை மயக்கிய மெல்லிய குரல்.. முதல் பாடலில் உச்சம் தொட்ட உன்னி கிருஷ்ணன்..
மக்களை மயக்கிய மெல்லிய குரல்.. முதல் பாடலில் உச்சம் தொட்ட உன்னி கிருஷ்ணன்..

HBD Unnikrishnan: ‘நிலவைக்கொண்டு பிடித்தேன் கட்டிலில் கட்டினேன், மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்’ அதிரடி அனுராதா ஸ்ரீராமின் குரலுக்கு, அமைதியாக பதிலுக்குப் பாடுவார் உன்னிகிருஷ்ணன். ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான குரல் ஆனால் அனைவரையும் ஈர்க்கும் குரல்.

உன்னிகிருஷ்ணன் கேரளாவின் பாலக்காட்டில் பிறந்தவர். இவரது பெற்றோர் ராதாகிருஷ்ணன், ஹரிணி ராதாகிருஷ்ணன் ஆவர். இவரது கொள்ளு தாத்தா ஆயுர்வேத மருத்துவர்.

கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் உன்னிகிருஷ்ணன் சென்னையில்தான் வளர்ந்தார். அசன் நினைவுப் பள்ளி, சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். ராதகிருஷ்ண மிஷன் கல்லூரியின் பி.காம் பட்டதாரி. சட்டமும், முதுகலை பட்டயப்படிப்பும் படித்தவர். இவர் பேரி நிறுவனத்தில் வேலை செய்தார். தொழில்முறை பாடகர் ஆவதற்காக வேலையை விட்டுவிட்டார்.

இவர் 12 வயது முதலே முறையான கர்நாடக சங்கீதம் கற்றவர். இவர் தனது முதல் பாடலுக்கே சிறந்த பின்னணி பாடலுக்கான தேசிய விருது வாங்கியவர். இவர் காதலன் படத்தில் வரும் ‘என்னவளே… அடி என்னவளே…’ எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன் என்ற பாடல் அது. தமிழ் பாடலுக்கு சிறந்த பாடகர் விருது வாங்கிய முதல் பாடகர் உன்னிகிருஷ்ணன் ஆவார். ஏ.ஆர். ரகுமானும் இவரும் தமிழ் இசை ரசிகர்களுக்கு மிகச்சிறந்த பாடல்களை கொடுத்துள்ளார்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் தேசிய விருது வாங்கிய பாடலும் ஏ.ஆர்.ரகுமானின் இசையில்தான். இவர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கரிலும் ஜட்ஜாக உள்ளார். இவர் கர்நாடக இசையில் பாடுவதை அதிகம் விரும்புகிறார்.

இவர் தேசிய விருது மட்டுமின்றி, கலைமாமணி, நடா பூஷணம், இசை பேரொளி, யுவ கலா பாரதி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ள இவர், பல பக்தி பாடல்களையும் பாடி மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இவரது மனைவி பிரியா. பரத நாட்டியம் மற்றும் மோகினியாட்ட நடன கலைஞர். இவருக்கு வாசுதேவ கிருஷ்ணக் என்ற மகனும், உத்தரா என்ற மகளும் உள்ளனர். உத்ராவும் சினிமா பின்னணி பாடகி. இவர் சைவம் படத்தில் உள்ள அழகே, அழகே… என்ற பாடலைப்பாடி அதற்கு தேசிய விரும் பெற்றுள்ளார். மகன் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்.

உன்னிகிருஷ்ணன் குடும்ப வாழ்க்கை

குருவாயூரப்பராக விளங்கக்கூடிய தெய்வத்தை இஷ்ட தெய்வமாக இவர் வழிபாடு செய்து வருகிறார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை தான். குருவாயூரில் இருக்கக்கூடிய கிருஷ்ண பரமாத்மாவை தனது ஆஸ்தான கடவுளாக வணங்கி வருகிறார்.

அடிக்கடி குருவாயூர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதை இவர் வழக்கமாக வைத்துள்ளார். இன்று வரை இவர் இந்த அளவிற்கு பெரிய உயரத்திற்கு வந்ததற்கு காரணம் குருவாயூர் கிருஷ்ணன் தான் என அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

காதலன் திரைப்படத்தில் நான் பாடிய என்னவளே என்னவளே என்ற பாடல் தான் எனக்கு மிகப்பெரிய அடையாளமாக மாறியது அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகராக நான் மாற ஆரம்பித்தேன். தொடர்ந்து என்னை தேடி வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன.

நான் பாடிய முதல் பாடல் சினிமா பாடல் தான் மேலும் அதனை சிறப்புப்படுத்தும் விதமாக முதல் பாடலுக்கே எனக்கு தேசிய விருது கிடைத்தது என உன்னிகிருஷ்ணன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

உன்னிகிருஷ்ணன் மகள்

உன்னிகிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் 10 வயதிலேயே சினிமாவில் பாடல் பாடி தேசிய விருதை பெற்றார். சைவம் திரைப்படத்தில் அழகே என்ற பாடலை பாடி அறியாத வயதிலேயே தேசிய விருதை பெற்றவர் உன்னிகிருஷ்ணனின் மகள். தந்தையைப் போலவே முதல் பாடலிலேயே தேசிய விருது பெற்ற மகளாக இவர் திகழ்ந்து வருகிறார்.

பிசாசு திரைப்படத்தில் இவர் பாடிய போகும் பாதை என்ற பாடல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதேபோல ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல மிகப்பெரிய இசை ஜாம்பவான்களுக்கு ஆல்பங்களிலும் இவர் பாடியுள்ளார்.

தனது மென் காந்த குரலால் தமிழ் இசை ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் உன்னிகிருஷ்ணன் வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் பெற்ற வாழவேண்டும் என்று ஹெச்.டி.தமிழ் வாழ்த்துகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9