2024-ல் நம்மை விட்டு மறைந்த சினிமா பிரபலங்கள்.. டெல்லி கணேஷ் முதல் சிஐடி சகுந்தலா வரை!
2024-ல் நம்மை விட்டு மறைந்த சினிமா பிரபலங்கள் குறித்து இதில் பார்க்கலாம். டெல்லி கணேஷ் முதல் சிஐடி சகுந்தலா வரை பிரபலங்கள் விவரம் இதோ.
2024 ஆம் ஆண்டில் பல சினிமா நடிகர்களை நாம் இழந்து இருக்கிறோம். அப்படி நாம் இந்த 2024 ஆம் ஆண்டில் மறைந்த பிரபலங்கள் யார் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!
வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80) நவம்பர் 10ஆம் தேதி காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. நாடக நடிகராக இருந்து தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ் கோலோச்சியுள்ளார். டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கி வந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் காலமானார்!
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, பொன்னி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருப்பவர் யுவன்ராஜ் நேத்ரன். அவரது மனைவி தீபா முருகனும் பிரபல சீரியல் நடிகை தான். கடந்த சில மாதங்களுக்கு முன் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதியானதும் அதற்காக அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தினர் தெரிவித்து இருந்த நிலையில் டிசம்பர் நான்காம் தேதி காலமானார்.
பழம்பெரும் குணச்சித்திர நடிகர் தனபால் காலமானார்!
தமிழ்ப் படவுலகின் பழம்பெரும் குணச்சித்திர நடிகர் தனபால் (95), உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ரஜினிகாந்த் நடித்த நான் மகான் அல்ல, விஜயகாந்த் நடித்த சொக்கத்தங்கம் உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நவம்பர் 24 ஆம் தேதி காலமானார்.
நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்!
யூடியூப் சேனல் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்று சினிமாவில் நடித்து வந்த சென்னையை சேர்ந்த நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலமானார்.
நடிகர் அருள்மணி காலமானார்!
நடிகரும், அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளருமான அருள்மணி மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 12 ஆம் தேதி சென்னையில் காலமானார். நடிகர் அருள்மணி தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர நடிகர் எனப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை அருள்மணி, அழகி, தென்றல், பொன்னுமணி, தர்மசீலன், கருப்பு ரோஜா, வேல், மருதமலை, கற்றது தமிழ், வன யுத்தம், சிங்கம் 2, தாண்டவகோனே, லிங்கா உள்ளிட்ட 90 படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்!
பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் விஸ்வேஷ்வர ராவ். திடீர் உடல் நலக்குறைவால் ஏப்ரல் 2 ஆம் தேதி காலமானார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்ர நடிகராகவும் நடித்துள்ளார். சுமார் 350 படங்களிலும் நடிகராகவும் மற்றும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
நடிகர் மோகன் நடராஜன் காலமானார்!
வேல், தெய்வத்திருமகள் உள்ளிட்டப் பல படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் நடிகர் மோகன் நடராஜன் செப்டம்பர் 4 ஆம் தேதி காலமானார். கோட்டை வாசல்,புதல்வன், மகாநதி உள்ளிட்டப் படங்களில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தவர் மோகன் நடராஜன் .
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்!
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து புகழ்பெற்ற பழம் பெரும் நடிகை சிஐடி சகுந்தலா செப்டம்பர் 18 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 84.
பிரபல காமெடி நடிகர் சேஷூ காலமானார்!
லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சேஷூ. `பாரிஸ் ஜெயராஜ்', `டிக்கிலோனா', `குலு குலு' எனத் தொடர்ந்து சந்தானம் படங்களில் கவனம் ஈர்த்தவர், கடைசியாக `வடக்குப்பட்டி ராமசாமி' படத்திலும் நடித்திருந்தார். உடல்நிலை குறைவு காரணமாக மார்ச் 26 ஆம் தேதி காலமானார்.
நடிகர் செவ்வாழை ராசு காலமானார்!
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'பருத்திவீரன்' படத்தில் 'பிணம் தின்னி' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் செவ்வாழை ராசு. பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். 'கிழக்குச் சீமையிலே, மைனா, கந்தசாமி' உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த செவ்வாழை ராசு, ஏப்ரல் 16 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 70.
திரைப்பட நடிகர், அடடே மனோகர் காலமானார்!
பழம்பெரும் சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர், அடடே மனோகர் பிப்ரவரி 19 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 82. சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, கையளவு மனசு, நிம்மதி உங்கள் சாய்ஸ், ரமணி வெர்சஸ் ரமணி, ரயில் சிநேகம் உட்பட பல டி.வி.தொடர்களிலும் நடித்துள்ளார். தூர்தர்ஷனில் வெளியான அடடே மனோகர் தொடரை எழுதி இயக்கி நடித்தார்.
நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்
வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பைரவா, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி. இவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மார்ச் 30 ஆம் தேதி காலமானார்.
நடிகர் பிரதீப் கே. விஜயன் காலமானார்!
தெகிடி, வட்டம், டெடி, லிஃப்ட் உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் நடிகர் பிரதீப் கே விஜயன். வில்லன், நகைச்சுவை நடிகர் என தனது நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் ஜூன் 13 ஆம் தேதி காலமானார்.
பிரபல மலையாள நடிகர் மேகநாதன் காலமானார்!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல மலையாள நடிகர் மேகநாதன் நவம்பர் 21ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 60.