Chutney Sambar review: ‘தொட்டுக்க டைட்டில்.. விட்டுக்க கதை.. கட்டிக்க காமெடி..’ சட்னி சாம்பர் எப்படி இருக்கு?
Chutney Sambar review: ‘பைட் இருக்கி.. சாங் இருக்கி.. டான்ஸ் இருக்கி..’ என்று தில் ராஜூ டெம்ளேட்டில் கூற வேண்டும் என்றால், ‘காமெடி இருக்கி.. ரொமான்ஸ் இருக்கி.. சென்டிமெண்ட் இருக்கி.. சஸ்பென்ஸ் இருக்கி..’ என அடுக்கலாம்.
Chutney Sambar review: பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் யோகி பாபு, கயல் சந்திரன், நிதின் சத்யா, வாணி போஜன், மைனா நந்தின் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் வெப் சீரிஸ் தான், சட்னி சாம்பார்! டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கும் இந்த தொடர், முழுக்க முழுக்க நகைச்சுவை தொடர் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.
இது எந்த மாதிரியான வெப் சீரிஸ்?
யோகி பாபு இருப்பதால், இது நகைச்சுவை படம் என்றும், கயல் சந்திரன் இருப்பதால் இது சீரியஸான படம் என்றும் புரிந்து கொள்ள வேண்டாம். இரண்டுமே கலந்த முழுநீள தொடர் தான், இந்த சட்னி சாம்பார். சரி வாங்க கதைக்குள் போகலாம்.
ஊட்டியில் பிரபல அமுதா கஃபே ஓட்டலின் உரிமையாளரான நிழல்கள் ரவியின் சாம்பாருக்கு அந்த ஊரே அடிமை. இன்னும் சிலர், அந்த சாம்பார் சாப்பிடுவதற்காகவே ஊட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட அந்த புகழ் பெற்ற ஓட்டலின் உரிமையாளரான நிழல்கள் ரவி, திடீரென படுத்த படுக்கையாகிறார். தனது மகன் கயல் சந்திரனை அழைத்து ஒரு ரகசியம் கூறுகிறார்.
சென்னையில் தனக்கு அமுதா என்கிற பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், தங்களுக்கு ஒரு மகன் இருப்பதாகவும், சாவதற்குள் அவனை அழைத்து வருமாறு கூறுகிறார். உடனே தன் தங்கை கணவர் நிதின் சத்யா உடன் சென்னை புறப்பட்டு, தன் தந்தையின் மூத்த மகனான ரோட்டுக் கடை யோகி பாபுவை கண்டுபிடிக்கிறார். தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வரும் யோகிபாபுவின் சட்னிக்கு அங்கு ஒரு கூட்டமே அடிமையாக இருக்கிறது.
தன் தாய் இறந்து போன நிலையில், தங்களை புறக்கணித்த தந்தை மீது கடும் கோபத்தில் இருக்கும் யோகி பாபுவை கட்டாயப்படுத்தி ஊட்டிக்கு அழைத்து வந்து தந்தையின் ஆசையை நிறைவேற்றுகிறார் சந்திரன். அந்த நொடியே தந்தை இறந்து போக, அவருக்கு காரியம் செய்துவிட்டு 16 நாட்களுக்குப் பின் செல்லுமாறு யோகிபாபுவை கட்டாயம் செய்கிறார் சந்திரன்.
தந்தையின் இரண்டாவது மனைவி மற்றும் மகள் குடும்பத்தினர் அவரை ஏற்றார்களா, பிடிப்பு இல்லாமல் தங்கும் யோகி பாபு, தன் தந்தையை மன்னித்து அவரது குடும்பத்தை ஏற்றாரா என்பது தான் கதை. வெள்ளத்திரையில் வருவதும் போவதுமாக இருந்த யோகிபாபுவை, முழு நீளத்தொடரில், அதுவும் ஹீரோவாக பார்ப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது.
ஸ்கோர் செய்த யோகி பாபு
தனக்கு என்ன வருமோ, எதை செய்தால் நன்றாக இருக்குமோ அதை செய்திருக்கிறார் யோகிபாபு. அதனால் எதார்த்தமான கதாபாத்திரமாக அவரை ஏற்க முடிகிறது. தம்பியாக வரும் கயல் சந்திரனும், தங்கையாக வரும் மைனா நந்தினும், மைத்துனராக வரும் நிதின் சத்யாவும் சரியான தேர்வு.
சந்திரன் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கும் சார்லி மகளாக வரும் வாணி போஜனின் நடிப்பும், அவரது தந்தை சார்லின் கதாபாத்திரமும் எதார்த்தமான படைப்பு. ஊட்டியின் ரம்யமான காட்சிகளுடன் கதைக்களத்தை இனிமையாக காட்டிய வகையில் பாதி வெற்றியை பெற்றுவிட்டார்கள். மீதியை, தேர்ந்த நடிகர்களை வைத்து நகர்த்தி தொடர் முழுவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் ராதா மோகன்.
வழக்கம் போல, ராதா மோகனின் கம்பெனி ஆர்டிஸ்ட் இருப்பும் இல்லாமல் இல்லை. அவர்களின் தேர்வும் நியாயமானதே. செயற்கை இல்லாமல் வசனங்கள் நியாயம் செய்திருக்கின்றன. அதுவே ரசிக்கும்படியாகவும் அமைந்துவிட்டது. ‘பைட் இருக்கி.. சாங் இருக்கி.. டான்ஸ் இருக்கி..’ என்று தில் ராஜூ டெம்ளேட்டில் கூற வேண்டும் என்றால், ‘காமெடி இருக்கி.. ரொமான்ஸ் இருக்கி.. சென்டிமெண்ட் இருக்கி.. சஸ்பென்ஸ் இருக்கி..’ என அடுக்கலாம்.
ஜெயித்தாரா ராதா மோகன்!
என்னதான் டைட்டில் சட்னி சாம்பார் என்று இருந்தாலும், கதைக்கு அது தொட்டுக்கத் தான் பயன்பட்டிருக்கிறது. இருந்தாலும், அதை வைத்து இரண்டாம் பாகத்திற்கான லீடு கொடுத்திருக்கிறார்கள். மொக்கை காமெடிகள் இல்லாமல், இருட்டில் கேமராவை விரட்டாமல், படபட பின்னணி இசை இல்லாமல், எதார்த்தமான கதைக்களத்தையும், அதற்கு ஏற்ற அனைத்து மசாலாக்களையும் தூவிய வகையில் தான் ஒரு அனுபவசாலி என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ராதா மோகன். அவருடைய படங்களைப் போலவே, இந்த வெப்சீரிஸூம் ரசிக்கும்படியாக இருக்கிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்