ரூ. 50 லட்சத்தால் வந்த விணை.. விடாமுயற்சி ரிலீஸ் தள்ளி போனதன் பின்னணி - நடந்தது என்ன? சித்ரா லட்சுமனன்
ரூ. 50 லட்சத்தால் விடாமுயற்சி ரிலீஸ் தள்ளி போனது எனவும், அதன் பின்னணியில் நடந்தது என்ன என்பது குறித்து சித்ரா லட்சுமணன் வெளிப்படுத்தியுள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனைவரும் தயாராகி வரும் சில மணி நேரங்களுக்கு முன்பாக விடாமுயற்சி பட ரிலீஸ் தள்ளி போன தகவல் அறிவிக்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு பேரிடியாய் அமைந்தது. இதை ஏற்றுக்கொள்ளாமல் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அத்துடன் விடாமுயற்சி தள்ளி வைக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு ட்ரோல்களும் உலா வந்தன.
இருப்பினும் விடாமுயற்சி தள்ளிப்போனதால் தற்போது ரிலீஸுக்கு தயாராகி இருக்கும் பல படங்கள் பொங்கல் ரேஸில் குதித்துள்ளன. இந்த ஆண்டு பொங்கல் விடுமுறை சுமார் ஒரு வார காலம் இருக்கும் நிலையில் தமிழில் சுமார் 5க்கும் மேற்பட்ட படங்கள் பொங்கல் ரிலீஸாக வரவுள்ளன.
இதற்கிடையே விடாமுயற்சி தள்ளிப்போனது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்து கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் மிக பெரிய விவாதமே நடைபெற்று கொண்டிருக்கிறது.
விடாமுயற்சி தள்ளப்போனதன் பின்னணி
விடாமுயற்சி பொங்கல் ரிலீஸில் இருந்து பின் வாங்கியதற்கான காரணம் குறத்து பிரபல தயாரிப்பாளர், நடிகர், யூடிப்பரான சித்ரா லட்சுமணன் தனது டூரிங் டாக்கிஸ் சேனலில் கூறியதாவது, "விடாமுயற்சி திரைப்படம் பிரேக்டவுன் என்ற திரைப்படத்தின் தழுவல் தான் என்பது பலருக்கும் தெரியும். இந்த சூழ்நிலையில் விடாமுயற்சி படத்தை தயாரித்த லைகா நிறுவனம் பிரேக்டவுன் படக்குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்கள் லைகாவிடம் கதையின் உரிமையை கொடுக்க ரூ. 50 லட்சம் கேட்டுள்ளார்களாம்.
இந்த சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே நடந்துள்ளது. ஆனால் அப்போதே அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்காமல் லைகா இருந்துள்ளார்கள். இப்போது பிரச்னை விடாமுயற்சி ரிலீஸை தள்ளி வைக்கும் அளவில் பெரிதாகியுள்ளது.
லைகா நிறுவனம் பணம் கொடுக்காத நிலையில், பிரேக்டவுன் குழுவினர் விடாமுயற்சி படத்தை முழுமையாக பார்த்த பிறகே எவ்வளவு தொகை என்பதை முடிவு செய்ய முடியும் என தெரிவித்தனர். அவர்களுக்காக விடாமுயற்சி திரைப்படமும் போட்டு காண்பிக்கப்பட்டது.
படத்தை பார்த்தவர்கள் அந்த ரிப்போர்ட்டை பிரேக்டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு மெயில் அனுப்பிவிட்டனர். ஆனால் அமெரிக்காவில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் விடுமுறை என்பதால் அந்த மெயிலுக்கு பிரேக்டவுன் தயாரிப்பு நிறுவனத்தால் பதிலளிக்க முடியவில்லை. இதன் காரணமாக தான் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருக்கலாம்" என்று கூறினார்.
ப்ரேக்டவுன் கதை
திருமணமான தம்பதிகள் காரில் பயணம் செய்கிறார்கள். தொலைதூரம் சென்ற பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கார் பழுதடைகிறது. அப்போது அந்த பாதையில் வரும் லாரி டிரைவர் தம்பதியரிடம் சில கிலோமீட்டர் தொலைவில் தொலைபேசி பூத் இருப்பதாகவும், அங்கு உதவி பெறலாம் என கூறுகிறார். மனைவி லாரி ட்ரைவருடன் அனுப்பி, ஹீரோ உதவிக்காக காத்திருக்க அதன் பின்னர் பரபரப்பான திருப்பங்களே ப்ரேக்டவுன் படத்தின் கதை.
இதையடுத்து விடாமுயற்சி கதை என்று இணையத்தில் உலாவி கொண்டிருக்கும் கதையும் ப்ரேக்டவுன் படத்தில் வருவது போலவே அமைந்துள்ளது. இருப்பினும் விடாமுயற்சி படக்குழு தரப்பில் இதுபற்றி எந்த கருத்துகளும் இதுவரை வெளியாகமல் உள்ளது.
விடாமுயற்சி படம்
கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட விடாமுயற்சி படம் ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாகி வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜானில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜித்குமார் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அர்ஜுன், ரெஜினா காசண்ட்ரா, பிக் பாஸ் புகழ் ஆரவ் உள்பட பலரும் நடிக்கிறார்கள். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
நீண்ட நாள் காத்திருப்புக்கு பின்னர் வெளியான படத்தின் டீஸர் வசனங்கள் ஏதும் இல்லாமல் அஜித்தின் ஆக்ஷன் காட்சிகளோடு, ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்கில் இருந்தது.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி என்ற படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்