நடிகர் கார்த்திக்கை சுற்றி வட்டமடிக்கும் சர்ச்சைகள்.. எது உண்மை.. சொல்கிறார் சித்ரா லட்சுமணன்
நடிகர் கார்த்திக்கை சுற்றி வட்டமடிக்கும் சர்ச்சைகள் அவற்றில் எது உண்மை என்று சொல்கிறார் சித்ரா லட்சுமணன். அதைப் பார்ப்போம்.
வேட்டையன் திரைப்படம் முதல் நடிகர் கார்த்திக் வருவது வரை நேயர்களின் கேள்விக்கு தனது யூட்யூப் பக்கமான டூரிங் டாக்ஸில் பதிலளித்திருக்கிறார், இயக்குநரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன்.
இயக்குநரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், தனது யூட்யூப் சேனலான டூரிங் டாக்கிஸில் லென்ஸ் என்னும் நிகழ்ச்சியில் பல்வேறு நேயர்களின் கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில் தொகுக்கப்பட்டிருக்கிறது. அவையாவன:
வேட்டையன் படத்தின் தியேட்டர் படம் மூலம் வராத மறைமுக வருவாய், தியேட்டரில் இருந்து வரும் வருவாயைவிட அதிகமாக இருக்கிறதே. இது ஆரோக்கியமற்ற விஷயம் தானே? இதைப்பற்றிய கருத்து என்ன?
பதில் - திரைப்படம் தியேட்டருக்கு உண்டானது மட்டும் இல்லை. இன்றைக்கு படங்கள் எல்லாம் எத்தனை கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுகின்றன என்று உங்களுக்குத் தெரியும். இவ்வளவு செலவு செய்து படத்தைத் தயாரித்துவிட்டு, அதனை தியேட்டரில் மட்டுமே எடுப்பது என்பது சாத்தியமா என்பதை யோசிக்க வேண்டும்.
ஐஸ்வர்யா ராஜேஷின் படங்கள் முன்பு எல்லாம் அதிகமாக வெளியாகியிருக்கும். இப்போது எந்தப் படங்களும் வருவதில்லையே?
பதில் - ஐஸ்வர்யா ராஜேஷுக்கு படவாய்ப்புகள் குறைந்திருக்கிறது உண்மை தான். அவருக்கு படவாய்ப்புகள் இல்லாமல் இல்லை. ஒரு பக்கம் தெலுங்கிலும் மறுபக்கம் மலையாளப் படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.
பிளாக் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு? இருந்தாலும் புயல் காரணமாக அதன் வசூல் பாதிக்கப்படுமா, எவ்வளவு வசூல் ஆகியிருக்கிறது?
பதில் - புயலால் ஏற்படும் பாதிப்பு மற்றப் படங்களுக்கு எப்படி இருந்ததோ, அதே பாதிப்பு பிளாக் திரைப்படங்களுக்கும் இருக்கும். ஆனால், அதையெல்லாம், மீறி ஓரளவு வசூல் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன். அந்தப் படத்துக்கும் நல்ல படம் என்று மக்களிடம் டாக் வரத்தொடங்கியிருக்கிறது.
நடிகைகளைப் பொறுத்தவரை பத்மினி, சாவித்திரி தேவிகா ஆகியோர் போலீஸ் கதாபாத்திரங்களில் நடிக்கவே இல்லையே. இதற்குக் காரணம் என்ன?
பதில் - சாவித்திரி, பத்மினி, தேவிகா நடித்துக்கொண்டிருந்த காலத்தில் பெரும்பாலும் குடும்பப்பாங்கான படங்கள் தான், வந்து கொண்டு இருந்தது. இப்போதுபோல், அப்போதும் போலீஸ் கதைகளும் திருடன் கதைகளும் பெருமளவில் தயாரிக்கப்படவில்லை. அதனால், தான் அவர்கள் அந்த கதாபாத்திரத்திலும் நடிக்கவில்லை.
லைகா பட நிறுவனம் வேட்டையன் படத்துக்கு பெரியளவில் புரொமோஷன் செய்யவில்லை. இந்நிலையில் அஜித்துக்கு தமிழ்நாட்டைத் தாண்டி ரசிகர்கள் இல்லாத நிலையில் விடாமுயற்சி படம் தோல்வி ஆகிவிடும் என எடுத்துக்கலாமா?
பதில் - படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்கும் லைகா நிறுவனம், அதே நேரம், புரோமோஷன் அவ்வளவாக செய்வதில்லை என்று எனக்கும் தோன்றுகிறது. பொன்னியின் செல்வன் படத்தைப் பொறுத்தவரைக்கும் மிக அழகான விளம்பரங்கள் அமைந்ததற்குக் காரணம், மணிரத்னமாக இருக்கும் என நினைக்கிறேன்.
கே.பி.சுந்தராம்பாள் - கிட்டப்பா பற்றி தெரிந்ததைக் கூறவும்?
பதில் - கே.பி.சுந்தராம்பாள் - கிட்டப்பா ஜோடி ஒரு வித்தியாசமான ஜோடி என்று தான் சொல்ல வேண்டும். கே.பி. சுந்தராம்பாள் எப்படி உச்சஸ்தாயிலில் பாடக்கூடியவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் உச்சஸ்தாயிலில் பாடும் வல்லமை கொண்டவர் தான், கிட்டப்பா. இவங்க இரண்டு பேரும் சேர்ந்து ஒரு கச்சேரியை இலங்கையிலே நடத்தினார்கள். அந்தக் கச்சேரிக்குக் கிடைத்த வரவேற்பு ஏகோபித்ததாக இருந்தது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டார்கள். அந்த உறவு மிக நீண்டநாட்கள் நீடிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் அந்த திருமணப் பந்தம் நீடித்திருந்தால்,சுந்தராம்பாள் இதைவிட பெரிய வெற்றியைப் பெற்றிருப்பார்.
நடிகர் கார்த்திக் எவ்வளவு லேட்டாக சூட்டிங் வந்தாலும் மிகச்சீக்கிரமாக நடித்துக் கொடுத்துவிடுவாராமே. அதுபற்றி?
பதில் - தாமதமாக வந்தாலும், இயக்குநர் அந்தக் காட்சியை சொல்லிக்கொடுத்ததும் அதை உள்வாங்கி ஒரே டேக்கில் நடிக்கும் ஆற்றல் உள்ளவர் தான், நடிகர் கார்த்திக். இதை நம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல இயக்குநர்கள் கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, கார்த்திக்கை இயக்கியவன் என்ற முறையில் எனக்கும் அந்த அனுபவம் உண்டு.
நன்றி: டூரிங் டாக்கிஸ்
டாபிக்ஸ்