அல்லு அர்ஜூனுக்கு போலீஸ் திடீர் நோட்டீஸ்.. ‘வருகை ரகசியம் காக்குமாறு’ வலியுறுத்தல்!
அல்லு அர்ஜுனிடம், காயமடைந்து சிகிச்சையில் இருக்கும் எட்டு வயது சிறுவனை சந்திக்கும் விஷயத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜூன் சமீபத்தில் நடித்து வெளியான புஷ்யா 2 ரிலீஸ் அன்று, ஏற்பட்ட நெரிசல் விபத்து தொடர்பான வழக்கில் சமீபத்தில் ஜாமீன் பெற்றார். இந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், அவரது எட்டு வயது மகன் KIMS மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹைதராபாத்தில் உள்ள ராம்கோபால்பேட் காவல் நிலையம், அல்லு அர்ஜுனிடம் புதிய நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. பொது அமைதியைப் பேணுவதற்காக எட்டு வயது சிறுவனை சந்திக்கும் விஷயத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு அந்த நோட்டீஸில் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
காவல்துறை அல்லு அர்ஜுன் வழங்கிய நோட்டீஸ்
முன்னதாக, நம்பள்ளி நீதிமன்றம் தனது ஜாமீன் உத்தரவில் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக அல்லு அர்ஜுன் சிக்காட்பள்ளி காவல் நிலையத்திற்கு வந்தபோது, KIMS மருத்துவமனையில் எட்டு வயது சிறுவனை சந்திக்க திட்டமிட்டிருந்தார். இருப்பினும், அவரது சட்டக் குழுவினர் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினர். தற்போது, எட்டு வயது சிறுவனை சந்திப்பது குறித்து நடிகருக்கு காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, வருகைப் பற்றி விளம்பரப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த நோட்டிஸில், “05/01/2025 அன்று காலை 10:30 மணிக்கு செகந்தராபாத்தில் உள்ள KIMS மருத்துவமனைக்கு நீங்கள் வருகை தருவீர்கள் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து, வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பொது அமைதியைப் பேணுவதற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவீர்கள் என்பதைத் தொடர்ந்து, ராம்கோபால்பேட் மற்றும் வடக்கு மண்டல காவல்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. கடைசி நேரத்தில், KIMS-ல் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை அவரது தந்தையுடன் சந்திப்பதை நீங்கள் ரத்து செய்வதாக உங்கள் மேலாளரிடமிருந்து தகவல் கிடைத்தது," என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், "செகந்தராபாத்தில் உள்ள KIMS-ல் பாதிக்கப்பட்ட சிறுவனைப் பார்க்க உங்கள் வருகைக்கு தேவையான ஏற்பாடுகளை ஒரு மணி நேரத்திற்குள் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். மருத்துவமனைக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் பொது அமைதியைப் பேணுவதற்காக, இந்த வருகையை ரகசியமாக வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ராம்கோபால்பேட் காவல்துறை உங்களை முழு பயணத்திலும் பாதுகாக்கும் மற்றும் அமைதி நிலவுவதை உறுதி செய்யும்," என்று அந்த நோட்டீஸில் மேலும் கூறப்பட்டுள்ளது.
செய்திகளின் அடிப்படையில், அல்லு அர்ஜூன் இன்னும் அந்த சிறுவனை சந்திக்கவில்லை என்று தெரிகிறது; இருப்பினும், அவர் விரைவில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகை ரகசியமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், காவல்துறை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்.
டிசம்பர் 4 ஆம் தேதி, திரைப்படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் ரேவதி என்ற 35 வயது பெண் உயிரிழந்ததும், அவரது எட்டு வயது மகன் காயமடைந்ததும் அல்லு அர்ஜுன் சர்ச்சையில் சிக்கினார்.
சர்சைக்கு மத்தியில் புஷ்யா 2 பெற்ற வெற்றி
அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் வெளியானதிலிருந்து, பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. ரஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோரும் நடித்துள்ள இந்தப் படம், ரூ.1438 கோடி வசூல் செய்து, S.S. ராஜமௌலியின் பாகுபலி 2 படத்தின் வசூலை முறியடித்து, இந்தியாவில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது. உலகளவில் ரூ.1831 கோடி வசூல் செய்துள்ள இந்தப் படம், தற்போது ஆமிர் கானின் தங்கல் (உலகளவில் ரூ.2000 கோடி) சாதனையை முறியடிக்க இலக்கு வைத்துள்ளது.
டாபிக்ஸ்