தமிழ் சினிமா ரீவைண்ட்: இளைஞர்களை கவர்ந்த கல்லூரி Reunion கதை.. ஜூன் 3ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தமிழ் சினிமா ரீவைண்ட்: இளைஞர்களை கவர்ந்த கல்லூரி Reunion கதை.. ஜூன் 3ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்

தமிழ் சினிமா ரீவைண்ட்: இளைஞர்களை கவர்ந்த கல்லூரி Reunion கதை.. ஜூன் 3ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 03, 2025 06:00 AM IST

ஜூன் 3ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் டாப் ஹீரோக்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்களின் மனதை கவர்ந்த சில படங்கள் வெளியாகியுள்ளன. அந்த படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

தமிழ் சினிமா ரீவைண்ட்: இளைஞர்களை கவர்ந்த கல்லூரி Reunion கதை.. ஜூன் 3ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்
தமிழ் சினிமா ரீவைண்ட்: இளைஞர்களை கவர்ந்த கல்லூரி Reunion கதை.. ஜூன் 3ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்

இறைவி

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா தேவரியா உள்பட பலரும் நடித்து ட்ராமா பாணியில் உருவாகி 2016இல் ரிலீசான படம் இறைவி. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் எமோஷனலான கதையம்சத்துடன் அமைந்திருந்ததுடன் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இருப்பினும் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகளின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன. ஆண்களிடம், பெண்களின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை பிரதிபலிக்கும் விதமாகவும், பெண்களின் கதாபாத்திரத்தை மையப்படுத்தியும் அமைந்திருந்த திரைக்கதை பின்னாளில் கல்ட் கிளாசிக் அந்தஸ்தையும் பெற வைத்தது.

சந்தோஷ் நாரயணன் இசையில் படத்தின் பாடல்கள், பின்னணி இசை வரவேற்பை பெற்றன. படத்தில் சினிமா தயாரிப்பாளராக தோன்றும் கதாபாத்திரத்தின் சித்தரிப்பு குறித்து ரிலீசுக்கு பின்னர் சர்ச்சை எழுந்த நிலையில், பின்னர் திரையுலகினரால் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டது. தளபதி, அஞ்சலி போன்ற சில படங்களில் நடித்து கிரேஸி மோகன் நாடக ட்ரூப்பில் இருந்த சீனு மோகன் இந்த படத்தில் கம்பேக் கொடுத்ததுடன், மனதை கவரும் விதமாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

எஸ். எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி, ரேஷ்மா பசுபுலேட்டி, ரோபோ ஷங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரெமாண்டிக் காமெடி படமாக உருவாகி 2016இல் ரிலீசான படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன். தொடக்கம் முதல் க்ளைமாக்ஸ் வரை வயிறை புண்ணாக்கும் விதமாக காமெடி காட்சிகளுடன் அமைந்திருந்த படத்தின் திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பார்த்து பழகிய கதை, யூகிக்ககூடிய காட்சிகள் இருந்தாலும் ரசிக்கும் விதமாக படத்தை உருவாக்கியிருப்பதாக படம் குறித்து விமர்சனங்கள் வெளியாகின.

புஷ்பா புருஷன், எம்எல்ஏவாக வரும் ரோபோ ஷங்கர் காமெடிகள் போன்றவை மிகுந்த வரவேற்பை பெற்றன. விஷ்ணு விஷாலுக்கு ஹிட் படமாக அமைந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் நல்ல வசூலையும் குவித்தது.

உள்ளம் கேட்குமே

மறைந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் ஜீவா இயக்கத்தில் ஷாம், ஆர்யா, லைலா, அசின், பூஜா உள்பட பலரும் நடித்து மியூசிக்கல் கமிங் ஏஜ் பாணி திரைப்படமாக உருவாகி 2005இல் ரிலீசான படம் உள்ளம் கேட்குமே. ஐந்து கல்லூரி நண்பர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களுக்கு இடையிலான உறவை பற்றி மிகவும் எதார்த்தமான திரைக்கதையில் உருவாகியிருந்த இந்த படம் பல முறை ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டு வெளியானது. விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற இந்த படம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட்டானது.

அசின் முதல் முறையாக தமிழில் இந்த படத்தில் தான் ஹீரோயினாக நடித்தார். அதேபோல் பூஜா, ஆர்யாவுக்கும் இதுதான் அறிமுக படமாக அமைந்தது. படத்துக்கு எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதியிருப்பார். இளமை ததும்பும் விதமாகவும், வாழ்க்கையின் எதார்தத்தை பேசும் விதமாக வசனங்களும், காட்சிகளும் ரசிகர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை வெகுவாக ரசிக்கப்பட்டது.

ஹாரிஸ் ஜெயராஜின் சிறந்த ஆல்பங்களில் ஒன்றாக உள்ளம் கேட்குமே உள்ளது. தமிழில் கல்லூரியை பின்னணியாக வைத்து ஏராளமான படங்கள் வெளியானாலும், ரீயூனியன் பாணியில் உருவாகி வெளியான படமாக இருந்த உள்ளம் கேட்குமே,அப்போதைய 96 போன்ற படமாகவும், ரசிகர்கள் மனதை நீங்காத இடம்பிடித்த படமாகவும் உள்ளது.