HBD TM Krishna: இசையின் வழி சமத்துவத்தை வலியுறுத்துபவர்! இசைக் கலைஞர் டிஎம் கிருஷ்ணா பிறந்தநாள்!
HBD TM Krishna: கர்நாடக இசைக் கலைஞரான டி. எம்.கிருஷ்ணா அவரது இசைத் துறையில் சமத்துவத்தை நிலைநாட்ட பலவிதமான வழிகளில் முயற்சி செய்து வருகிறார். அவர் இன்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

உலகத்தில் காற்று, நீர், நிலம் என இயற்கை வளங்களாக இருக்கும் அனைத்தும் வாழும் உயிரினங்களுக்கும், மக்கள் அனைவருக்கும் சமமாகும். அதேபோல் தான் இசை காற்றின் வழியாகவே பிறந்தது என்பார்கள். அந்த இசையும் அனைத்து மக்களுக்கும் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இசையிலும் வேறுபாடு உண்டாக்கி அதனை ஒரு சாராருக்கு மட்டும் என சொந்தம் என கொண்டாடி வந்தனர். ஆனால் இசை அனைவருக்கும் பொதுவானது எளிய மக்களுக்கு அவசியமானது என இசையின் மகத்துவத்தை அறிய வைத்தவர்கள் பலர் உள்ளனர். அதில் தற்காலத்தில் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருபவர் டிஎம் கிருஷ்ணா ஆவார். கர்நாடக இசைக் கலைஞரான டி. எம்.கிருஷ்ணா அவரது இசைத் துறையில் சமத்துவத்தை நிலைநாட்ட பலவிதமான வழிகளில் முயற்சி செய்து வருகிறார். அவர் இன்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இசைக் கலைஞராக
சென்னையில் பிறந்த டி.ம்.கிருஷ்ணாவின் குடும்பத்தினர் அனைவரும் இசையில் இயல்பாகவே ஆர்வம் உடையவர்களாக இருந்தனர். கிருஷ்ணாவின் பெற்றோர்கள் அவருக்கு இளம் வயதிலேயே இசைக்கலையை கற்றுக் கொடுக்க பல இசை கலைஞர்களின் உதவியை நாடினார். அவர்களும் கிருஷ்ணாவிற்கு சிறப்பான இசையை கற்றுக் கொடுத்தனர். டி எம் கிருஷ்ணாவின் முதல் இசை நிகழ்ச்சி அவரது 12 வது வயதில் நடந்தது என்றால் நம்ப முடிகிறதா? அந்த அளவிற்கு இசை மீது பற்றுக் கொண்டவராக இருந்தார். கர்நாடக இசைத்துறையில் ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே பங்கு பெற முடியும் என்ற நிலையில் அங்கேயே பல வீரியம் மிக்க காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இசையைத் தாண்டி
கிருஷ்ணா கலாச்சாரத் துறையுடன் மட்டும் நின்றுவிடாமல், பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசுகிறார், எழுதுகிறார். சுற்றுச்சூழல், சாதி அமைப்பு, சமூக சீர்திருத்தம், மத சீர்திருத்தம், வகுப்புவாதத்தை எதிர்த்துப் போராடுதல், பாரம்பரிய இசையில் புதுமை போன்ற இடதுசாரி செயல்பாடுகளில் அவரது ஆர்வங்கள் விரிவடைகின்றன. இசை மற்றும் கலாச்சாரத்தின் ஸ்பெக்ட்ரம் முழுவதும் பரந்து விரிந்துள்ள பல அமைப்புகளை அவர் தொடங்கியுள்ளார், அவற்றில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில், ஆர்டிகல் 370 ரத்து செய்யப்பட்டதற்கும், லெனின், அம்பேத்கர், காந்தி மற்றும் பெரியார் சிலைகள் அழிக்கப்பட்டதற்கும் எதிராக அவர் குரல் கொடுத்துள்ளார்.