‘அந்த வானத்த போல மனம் படைச்ச’ ருத்ராட்ச மாலை, காவி வேஷ்டி.. 48 நாள் விரதம்.. விஜயகாந்த் பொண்ணு பார்க்க வந்த கதை!
ருத்ராட்ச மாலை, காவி வேஷ்டி.. 48 நாள் விரதம்.. விஜயகாந்த் பொண்ணு பார்க்க வந்த சுவாரசியமான கதையை இங்கே பார்க்கலாம்
கேப்டன் இறந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கேப்டனின் காதல் கதை மற்றும் அவர் கேப்டனாக மாறியது எப்படி என்பதை நினைவு கூறலாம்.
இது குறித்து பிரேமலதா கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பதற்கு சான்றாக அமைந்தது எங்களுடைய திருமணம். நான் இப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. கேப்டனுடைய குடும்பம் மதுரையில் இருக்கிறது. என்னுடைய குடும்பம் வேலூரில் இருக்கிறது. எங்கள் இருவருக்கும் எந்த ஒரு தொடர்புமே கிடையாது. கேப்டன் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் சபரிமலைக்கு மாலை போடுவார். நாற்பத்து எட்டு நாட்கள் விரதம் இருந்து ருத்ராட்ச மாலை, காவி வேஷ்டி அணிந்து கொண்டு சபரிமலைக்கு செல்வார்.
சபரி மலைக்கு செல்வது போல
அவர் என்னை பெண் பார்க்க வந்த போதும் அப்படித்தான் வந்தார். அப்போது அவர் காவி வேஷ்டி உடுத்தி வந்தார். காலில் செருப்பு இல்லை. அவர் அவர் அவ்வளவு சிம்பிளாக நடந்து வருவதை பார்த்த என்னுடைய அப்பா, அவரை ஒரு ஹீரோவாகவோ அல்லது மாப்பிள்ளை ஆகவோ பார்ப்பதற்கு மாற்றாக கேப்டனை தன்னுடைய சகோதரராக பார்த்தார்.
அங்கேயே அவர் நான் பெண் கொடுத்தால் இவருக்குத்தான் கொடுப்பேன் என்று முடிவு எடுத்தார். பத்திரிக்கை கொடுக்கச் செல்லும் பொழுது பலர், சினிமாக்காரனாக இருக்கிறார் எப்படி இருப்பார் என்று தெரியவில்லையே என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், என்னுடைய தாயும் தந்தையும் விஜயகாந்த் தான் தங்களுடைய மருமகன் என்று தீர்க்கமாக முடிவெடுத்தார்கள்.’ என்று பேசினார்.
விஜயகாந்த் கேப்டனாக மாறியது எப்படி?
1980 களில் ஒரு பக்கம் ரஜினியும், இன்னொரு பக்கம் கமலும் போட்டிப்போட்டுக்கொண்டு சினிமாவில் தங்களது கிராஃபை உயர்த்தி சென்று கொண்டிருந்த நிலையில், அவர்களை மீறி தனக்கென தனிபாதையை போட்டு சென்றவர் விஜயகாந்த். கருப்பு தேகம், சிவந்த கண்கள், நடு உச்சி எடுத்து வாரிய முடி, கோபத்தில் துடிக்கும் கன்னங்கள், ஆக்ஷனில் அதகளம் என ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்திற்கு, 100 வது படமாக அமைந்த திரைப்படம்தான் ‘கேப்டன் பிரபாகரன்’.
ஆர்.கே செல்வமணி கொடுத்த பரிசு
ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்துடன் சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், எம்.என்.நம்பியார், மன்சூர் அலிகான், காந்திமதி, பொன்னம்பலம்,உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வன அதிகாரியாக விஜயகாந்த் நடித்து அசத்தியிருந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையைப் படைத்தது.
இந்தப் படத்துக்காக விஜயகாந்த் சமரசம் இல்லாத உழைப்பைக் கொடுத்திருந்தார். ஆர்.கே செல்வமணியும் கொஞ்சம் மாறுதலாக விஜயகாந்திற்கு உரித்தான ஓப்பனிங் சாங் இல்லாமல், கிட்டத்தட்ட படம் தொடங்கி அரைமணி நேரத்திற்கு பிறகே அவரை திரையில் காண்பித்தார். இருப்பினும், சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத பக்கா ஆக்ஷனை கொடுத்து படத்தை அடுத்தக்கட்டத்தை நோக்கி கொண்டு சென்றிருந்தார் ஆர்.கே.செல்வமணி.
கேப்டன் பிரபாகரன் படத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக ரம்யா கிருஷ்ணனின் நடனமும், கதாபாத்திரமும் அமைந்திருந்தது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஆக்ஷன் கதையில ‘பாசமுள்ள பாண்டியரே, 'ஆட்டமா தேரோட்டமா’ என்று இரண்டு பாடல்களை வைத்து தெறிக்க விட்டிருப்பார் இளையராஜா. இன்று வரை பட்டி தொட்டி எங்கும் இப்பாடல்கள் ஒலிக்குது என்றால் அதற்கு இளையராஜாவின் நேர்த்தியான இசை தான் காரணம்.
முதலில் கிடையாது
முதலில் 'ஆட்டமா தேரோட்டமா' பாடல் இந்த படத்தில் கிடையாது. இதற்கு பதிலாக இன்னொரு பாட்டை கொடுத்திருந்தார் இளையராஜா. ஆர்.கே. செல்வமணி தனக்கு இந்த பாடல் வேண்டாம். வேற பாடல் வேணும்னு இளையராஜாகிட்ட கேட்க, போனை வைனு சொல்லி, இளையராஜா கட் பண்ணிட்டு இரவோடு இரவாக, ஆட்டமா தேரோட்டமா பாட்டை தயார் பண்ணி, மறுநாளே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்பியிருக்கிறார். அதைக் கேட்ட ஆர்.கே செல்வமணிக்கும் பாட்டு பிடித்துப்போக, அதை வெரைட்டியா படமாக்கியிருந்தார்.
தமிழ் சினிமாவில் பொதுவாக 100வது படம் வெற்றிப்படமாக அமைவது என்பது அரிதான ஒன்றாக பார்க்கப்பட்ட காலத்தில் இதற்கு ஒரே விதி விலக்கு விஜயகாந்த் மட்டுமே. ஆம், இந்தப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக 275 நாட்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடியது. படத்தின் தலைப்பில் இடம் பெற்ற 'கேப்டன்' என்பது பின்னாளில் விஜயகாந்தின் அடையாளமாகவே மாறிப்போனது.
டாபிக்ஸ்