HBD Vijayakanth: ‘மனுஷன்னா அது விஜயகாந்த் தான்..’ கங்கை அமரன் பகிர்ந்த உருகும் சம்பவம்!
‘ஆனால் விஜயகாந்த் ஜென்டில்மேன். என் கஷ்டம் உணர்ந்து, ‘அண்ணன் போய் ரெஸ்ட் எடுங்க, நான் பார்த்துக்கிறேன்’ என்று என்னை அனுப்பிவிடுவார்’
கேப்டன் விஜயகாந்த பிறந்தநாளான இன்று, அவரைப் பற்றி பிரபலங்கள் பலரும் கூறியவற்றை தொகுத்து வெளியிடுகிறோம். பாடலாசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர், கதாசிரியர் என்கிற பன்முகம் கொண்டவர் கங்கை அமரன். யூடியூப் ஒன்றுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பேட்டி இதோ:
‘‘காம்போசிங்கில் புதிய முறையை கொண்டு வந்த இளையராஜாவுடன் நான் இருந்திருக்கிறேன் என்பதே எனக்கு பெருமை தான். சொல்லக் கூடாது தான், இருந்தாலும் சொல்கிறேன், இளையராஜாவின் பல படங்களுக்கு நான் ரீரெக்கார்டிங் செய்திருக்கிறேன்.
நல்லவனுக்கு நல்லவன் படம் உள்ளிட்ட நிறைய படங்களுக்கு நான் தான் ரீரெக்கார்டிங் பண்ணேன். நான் நிறைய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன். அதில் எம்.எஸ்.விஸ்நாதன் அவர்களின் இசையை தழுவிய பாடல்கள் அதிகம்.
‘பொன்மானத் தேடி…’ பாடல் நான் போட்டது தான். ‘பாட்டுக்கு பாட்டெடுத்து நான் பாடுவதை கேட்டாயோ’ பாடல் போல வேண்டும் என்று இயக்குனர் சொன்னார். அந்த பாடலையே போடலாம் என்று தான், பொன்மானத் தேடி பாடல் ட்யூன் போட்டேன். எம்.எஸ்.விஸ்வநாதன் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
பாடல் எழுத வேண்டும் என்று தான் நான் நினைத்தேன். கம்போஸ் செய்ய வேண்டும் என்கிற ஆசை எனக்கில்லை. மலேசியா வாசுதேவன் தான் என்னை இசையமைப்பாளர் ஆக்கினார். இசையில் இளையராஜாவை மிஞ்சும் ஒரு சூழல் வந்தது. திடீர்னு பஞ்சு அருணாச்சலம், இளையராஜா இரண்டு பெரும் அழைத்து கோழிகூவுது படத்தை இயக்கும் வாய்ப்பை தந்தார்கள். அப்படி தான் இயக்குனர் ஆனேன்.
நாங்க சென்னைக்கு வந்து சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருந்த நேரத்தில் எங்களுக்கு முதலில் உதவியவர் சங்கிலி முருகன் தான். அதன் பிறகு உதவியவர் தான் பஞ்சு அருணாச்சலம். சங்கிலி முருகன் நாடகத்தில் சேர்த்துவிட்டதால் தான் எங்களுக்கு சாப்பாடு கிடைத்தது. அப்போதே எங்களுக்கும் கவுண்டமணிக்கும் நல்ல பழக்கம். நாடகத்திலேயே அவர் காமெடி பயங்கரமா இருக்கும்.
பணம் விசயத்தில் கவுண்டமணி கரெக்ட்டா இருப்பார். கோயில்காளை என்று ஒரு படம் எடுத்தோம். அது என்னுடைய சொந்த படம். ஒருத்தரின் சொந்த படம் என்றால், அவருக்கு வேண்டப்பட்டவர்கள், குறைந்த சம்பளம் தான் வாங்குவார்கள். ஆனால், என்னுடைய சொந்த படத்தில் கவுண்டமணி உள்ளிட்ட எல்லாருமே நிறைய சம்பளம் பெற்றார்கள்.
விஜயகாந்த் மட்டும் சம்பளம் பேசவே இல்லை. அந்த நேரத்தில் ராஜாதி ராஜா -கோயில் காளை இரண்டு படம் பண்றேன். பயங்கர செலவு. அந்த நேரத்தில் ஏற்பட்ட மனக்குழப்பம் தான் எனக்கு பயங்கர பலவீனத்தை தந்தது. எத்தனையோ படங்களில் நம்மால் தான் கவுண்டமணி வந்திருந்தார். ஆனால், அந்த கோயில்காளை படத்தில் பாக்கியை செட்டில் பண்ணால் தான் டப்பிங் வருவேன் என்று கறாராக கூறிவிட்டார்.
நேரடியா என்னிடம் சொல்லவில்லை. மேனேஜர் வந்து என்னிடம் சொன்னதும் எனக்கு ஒரே ஷாக். ‘என்னய்யா எவ்வளவு உதவி பண்ணிருக்கோம், இப்படி சொல்றாரே, படத்தை வித்து தானே காசு கொடுக்கணும்’ என்று வேதனைப்பட்டேன். அப்புறம் பணம் ரெடி பண்ணி கொடுத்துவிட்டு, கவுண்டமணி டப்பிங் வரும் போது, நான் போகவில்லை. அவர் முகத்தை பார்க்க பிடிக்கவில்லை. அதனால் போகவில்லை. அந்த அளவிற்கு கஷ்டமாக இருந்தது.
ஆனால் விஜயகாந்த் ஜென்டில்மேன். என் கஷ்டம் உணர்ந்து, ‘அண்ணன் போய் ரெஸ்ட் எடுங்க, நான் பார்த்துக்கிறேன்’ என்று என்னை அனுப்பிவிடுவார் விஜயகாந்த். அவருக்கு என் சிரமங்கள் அனைத்தும் புரிந்திருந்தது. கோயில் காளை தான் எனக்கு பெரிய உளைச்சலை ஏற்படுத்திய படம்,’’
என்று அந்த பேட்டியில் கங்கை அமரன் கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்