Atlee Wife Priya: வணக்கம்டா மாப்ள கேன்ஸ்ல இருந்து..மனைவியுடன் கெத்து காட்டிய அட்லீ! - வைரல் புகைப்படங்கள்!
தன்னுடைய மனைவி பிரியாவுடன் விழாவில் கலந்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த மே 17 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்தத் திரைப்பட விழாவானது வருகிற மே 27 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் திரைப்படவிழாவில் கலந்து கொள்ள இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் பிரான்சிற்கு படையெடுத்து இருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா ராய், அதிதிராவ், பிரதீப், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொண்டு அது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்த வரிசையில் தற்போது இயக்குநர் அட்லீயும் இணைந்து இருக்கிறார். தன்னுடைய மனைவி பிரியாவுடன் விழாவில் கலந்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரமாண்டத்திற்கு பேர் போன இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத்தொடர்ந்து நடிகர் விஜயுடன் ‘தெறி’ திரைப்படத்தில் கமிட் ஆனார்.
இந்தத்திரைப்படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. அதனைத்தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜயுடன் ‘மெர்சல்’ ‘பிகில்’ ஆகிய படங்களில் கமிட் ஆனார். இதில் ‘மெர்சல்’ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிகில் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனிடையே தன்னுடைய நீண்ட நாள் காதலியான பிரியாவை திருமணம் செய்து கொண்டார் அட்லீ.
திருமணம் முடிந்து வருடங்கள் பல ஓடிய நிலையில், கடந்த வருடம் பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் இந்த வருடம் அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், அந்த குழந்தைக்கு ‘மீர்’ என்று பெயர் வைத்திருப்பதாக பிரியாவும், இயக்குநர் அட்லீயும் தெரிவித்தனர்.
இயக்குநர் அட்லீ தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் நிலையில், வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடிக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் முதன்முறையாக பாலிவுட்டில் கால்பதிக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். இந்தத்திரைப்படம் முன்னதாக ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்றைய தினம் இந்தத்திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.