Brinda Review: ‘மரணக் காடு.. சடலக் குவியல்.. புயலாய் மாறும் பூ’ த்ரிஷாவின் பிருந்தா திரைவிமர்சனம்!
Brinda Review: சுற்றி வளைத்து கடைசியில் சஸ்பென்ஸ் வைக்காமல், எல்லா முடிச்சுகளையும் முதல் எபிசோடிலிருந்தே பார்வையாளர்களுக்குத் தெரிவித்து, கதையை நகர்த்தியிருக்கிறார்கள். அதற்காக கதையில் விறுவிறுப்பு குறையவில்லை.

டிவி முன் உட்கார்ந்தால் அதை ஆப் செய்ய மனமில்லாமல் செய்யும் வெப்சீரிஸ் தான், வெற்றி பெற்ற ரகம். அந்த வரிசையில் வெள்ளிக்கிழமை வெளியாகி, சனி, ஞாயிறு மக்களின் மனதில் ஊஞ்சலாடப் போகும் வெப்சீரிஸ் தான் பிருந்தா. த்ரிஷா, இந்திரஜித் சுகுமாறன், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட தென்னிந்திய பிரபலங்கள் பலரும் நடித்திருக்கும் 8 எபிசோட் கொண்ட வெப்சீரிஸ் தான் பிருந்தா.
மலையில் தொடங்கும் கதை
மலை கிராமம் ஒன்றில், மூடநம்பிக்கையாக பெண் குழந்தை ஒன்றை கடவுளுக்கு பலியிட அந்த ஊர் சாமியார் கூறுகிறார். அதற்கு தாய் மறுக்க, அந்த சிறுமியை அங்கிருந்து லாரி ஒன்றில் தப்ப வைக்கிறார் தாய். இதை அறிந்த கிராம மக்கள் கொதித்துப் போய், அந்த தாயை கழுத்தறுத்து கொலை செய்கிறார்கள். அதை தடுக்க வரும் மகனுக்கு, தாயும் இல்லாமல், தங்கையும் இறந்துவிட்டால் என்று ஊரார் மீது கோபம். மூடநம்பிகை தான் இதற்கு காரணம் என, அன்று இரவே அந்த கிராமத்தை தீயிட்டு, அனைவரையும் கொல்கிறான்.
தப்பிச் செல்லும் அந்த சிறுமி தான் த்ரிஷா. போலீஸ்காரர் ஜெயப்பிரகாஷ் வீட்டில் மூத்த மகளாக வளர்கிறாள். தந்தை இறந்து போக, போலீஸ் வேலை பார்க்கும் அவர், தாயை தவிர வேறு யாருடனும் அதிகம் பேசுவதில்லை. தன் குடும்பத்தை சேராதவர் என்பதால், த்ரிஷாவை அவரது தங்கை வெறுக்கிறர். போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., வேலை பார்த்தாலும், வங்கி பணியாளர் போல முகத்தை எந்நேரமும் வைத்திருக்கிறார் த்ரிஷா.