Box Office Today: டாப் கியரில் மதகஜா ராஜா.. கடும் போட்டி போடும் வணங்கான், காதலிக்க நேரமில்லை - பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்
Box Office Collection Today: இந்த வாரம் தமிழில் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில் பொங்கல் ரிலீசாக வந்த படங்களே பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஆக்கிரமிக்க உள்ளன. பொங்கல் ரேஸில் மதகஜ ராஜா வெற்றி பெற்றிருக்கும் நிலையில், வணங்கான் மற்றும் காதலிக்க நேரமில்லை படங்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.

இந்த ஆண்டு பொங்கலுக்கு பெரிய ஸ்டார்கள் படங்கள் எதுவும் வராமல் போனது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த முறை பொங்கல் வெளியீடாக 6 நேரடி தமிழ் படங்கள் உள்பட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி பான் இந்தியா படமான கேம் சேஞ்சர் படமும் வெளியாகியுள்ளது.
இதில் ரொமாண்டிக் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் தருணம் என்ற படம் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற நிலையில், போதிய திரையரங்குகள் இல்லாத காரணத்தால் இரண்டு நாள்கள் மட்டும் ஓடிவிட்டு ரிலீஸில் இருந்து பின் வாங்கப்பட்டது. வேறொரு நாளில் படத்தை வெளியிட இருப்பதாகவும் படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலை ஜனவரி 10, 12, 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக பொங்கல் ரிலீஸ் படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில் அந்த படங்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை பற்றி பார்க்கலாம்
டாப் கியரில் மதகஜ ராஜா
12 ஆண்டுகள் பெட்டிக்குள் முடங்கிய கிடந்த மதகஜ ராஜா படம் திடீர் சர்ப்ரைஸாக பொங்கல் ரேஸில் களமிறங்கியது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் காமெடி, ஆக்ஷன் எண்டர்டெயினராக ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.
முதல் நாளில் இருந்த படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில், படம் தற்போது வரை ரூ. 28.7 கோடி வரை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளிப்படுத்தும் sacnilk.com தெரிவித்துள்ளது.
பொங்கல் ரேஸில் வெற்றி பெற்றிருக்கும் படமாக இருந்து வரும் மதகஜ ராஜா, விஷாலுக்கு தரமான கம்பேக் ஆக அமைந்துள்ளது.
போட்டிபோடும் வணங்கான், காதலிக்க நேரமில்லை
இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸாக முதலில் வெளியான படம் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான். ஜனவரி 10ஆம் தேதியே வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பாலாவின் கம்பேக்காக இருப்பதாகவும் கருத்துகள் பகிரப்பட்டது.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி கதையம்சத்தில் உருவாகியிருக்கும் வணங்கான் படம் ஆண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமாக இருப்பதாகவும் கருத்துகள் முன் வைக்கப்பட்டது. முதல் நாளில் இருந்த சராசரி வசூலை பெற்று வந்த வணங்கான் படம் வெளியாகி 8 நாள்கள் ஆகியிருக்கும் நிலையில் ரூ. 6.76 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது
இந்த படத்துக்கு போட்டியாக ரவி மோகன் - நித்யா மேனன் நடிப்பில் கிருத்திக உதயநிதி இயக்கத்தில் பொங்கல் நாளன்று வெளியான ரொமாண்டிக் படமான காதலிக்க நேரமில்லை இருந்து வருகிறது.
படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கும் நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. காதலிக்க நேரமில்லை வெளியாகி 4 நாள்கள் ஆகியிருக்கும் நிலையில் படம் தற்போது வரை ரூ. 5.6 கோடி வசூலித்துள்ளது.
இதுதவிர விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி - அதிதி ஷங்கர் நடித்திருக்கும் நேசிப்பாயா ரூ. 0.7 கோடி, புதுமுகங்கள் நடித்திருக்கும் மெட்ராஸ்காரன் ரூ. 0.27 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்களை ஈர்க்க தவறிய கேம் சேஞ்சர்
பிரமாண்ட் இயக்குநர் ஷங்கர் முதல் முறையாக தெலுங்கில் இயக்கியிருக்கும் நேரடி படமான கேம் சேஞ்சர் ஜனவரி 10ஆம் தேதி வெளியானது. ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க அரசியல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்து. இருப்பினும் அடுத்தடுத்த நாள்களில் பொங்கல் ரிலீசாக வந்த மற்ற படங்களுக்கு கிடைத்த வரவேற்பு, அத்துடன் எதிர்மறையான விமர்சனங்களால் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்பட்டது.
கேம் சேஞ்சர் வெளியாகி 8 நாள்கள் ஆகியிருக்கும் நிலையில் படம் தற்போது வரை ரூ. 170.25 கோடி வசூலித்துள்ளது. ரூ. 400 கோடி வரை பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த படம் தற்போது வரை பெற்றிருக்கும் வசூல் மிகவும் குறைவானதாகவே இருப்பதாகவும், போட்ட பட்ஜெட்டை கூட மீறுவதற்கான வாய்ப்பு குறைவு என திரையுலகினரால் பேசப்படுகிறது.
இந்த வெள்ளிக்கிழமை தமிழில் புதிதாக பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில், பொங்கலுக்கு வந்த படங்களே அடுத்த வாரம் வரை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஆக்கிரமித்திருக்கும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்