என் மனைவிகிட்ட இருந்து போன் வந்தாலே நடுங்கும்.. எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிப்பேன்- அமிதாப் பச்சன்
என் மனைவி எனக்கு போன் பண்ணினாலே எனக்குள் ஒரு நடுக்கம் வரும். அவர் என்ன பேசுகிறார் எனத் தெரியாவிட்டாலும் எல்லாம் தெரிந்த மாதிரி நடிப்பேன் என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
பாலிவுட் பிக் பி என அழைக்கப்படும் அமிதாப் பச்சன் தனது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுடன் வேடிக்கையான நிகழ்வுகளையும் வாழ்க்கை ஆலோசனைகளையும் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், தனது மனைவி ஜெயா பச்சன் பற்றி சில விஷயங்களை அமிதாப் பச்சன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கோன் பனேகா குரோர்பதி
கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் இந்த வாரம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த சௌரவ் சவுத்ரி பங்கேற்றார். அவர் ஒரு சிஏ நிறுவனத்தில் மூத்த கணக்கு உதவியாளர் என பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
பின் நிகழ்ச்சியின் போது, அமிதாப் பச்சன் தனது அலுவலகம் டல்ஹெளசியில் உள்ள பெங்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸுக்கு எதிரே அமைந்திருந்தது, அங்கு பெங்காலி மொழி வகுப்புகள் வழங்கப்பட்டன என்பதை நினைவு கூர்ந்தார். அங்கு தொழிலாளர்களுடன் பேச பெங்காலி மொழியைக் கற்றுக்கொள்ள ஊழியர்களுக்கு நிறுவனம் ரூ .3000 செலுத்தியது. மேலும் மூன்று மாதங்களுக்குப் பிறகு தேர்வு நடைபெறும் என்ற நிபந்தனையும் விதித்ததாக அவர் கூறினார்.
பெங்காலி தேர்வு
அந்த நேரத்தில், தனது சம்பளம் ரூ .500 மட்டுமே, செலவுகள் போக, அவரிடம் ரூ .150 தான் மீதமிருந்தது. பெங்காலி படிப்புக்கு வழங்கப்பட்ட ரூ .3000 பணமும் மூன்று நாட்களுக்குள் செலவழிக்கப்பட்டது என்ற அமிதாப் பச்சன், முறையான பெங்காலி பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அலுவலக நேரத்திற்குப் பிறகு இரண்டு நண்பர்களுடன் பெங்காலி பயிற்சி செய்வார் என்றார். பின்னர், நடந்த பெங்காலி தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றதாகவும் கூறினார்.
ஜெயா பச்சனுடன் நடந்த நகைச்சுவை சம்பவம்
மேலும் நிகழ்ச்சியில், தனது மனைவி ஜெயா பச்சனுடன் சமீபத்தில் நடந்த ஒரு நகைச்சுவையான சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார். வீட்டிற்கு விருந்தினர்கள் வந்த சமயத்தில் நான் அவருடன் தனியாக பேச விரும்பினேன். அதனால் நான் பெங்காலி மொழியில் பேச நினைத்தேன். ஆனால் என்னால் முழுவதுமாக பெங்காலி மொழியில் பேச முடியவில்லை. எனது மனைவியோ சரளமாக பேசிவிட்டார். என்னால் அவர் பேசுவதை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால், எல்லாம் புரிந்தது போல் நடித்துக் கொண்டிருந்தேன் என்றார்.
ஒரே பதற்றம் ஆகிவிட்டது
அத்துடன், தனது மனைவியுடன் எப்போதும் மெசேஜ் மூலமாகத் தான் பேசி வருவதாகவும், இருவரும் போனில் அதிகம் பேசியதில்லை என்றும் அமிதாப் பச்சன் கூறினார். அப்படி இருக்கையில் கோவாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்ற போது என் மனைவியிடமிருந்து போன் வந்துவிட்டது. அதை பார்த்ததும் எனக்கு பதற்றம் அதிகமாகி விட்டது. கைகள் எல்லாம் நடுங்கியது. என்ன நடக்கப் போகிறது எனத் தெரியாமல் போனை எடுத்து பேசினேன்.
என்னை சுற்றி ஆட்கள் இருந்ததால், நான் மனைவியுடன் பேசவே தயங்கினேன். பின் அவர் நிறைய பேசினார் எனக்கு எதுவும் புரியவில்லை. அதனால் வெறும் ம்.. ம்.. மட்டும் சொல்லிக் கொண்டிருந்தேன். இதைக் கேட்ட என் மனைவி பெங்காலியில் பேச ஆரம்பித்து விட்டார். அப்போது நான் நீ என்ன பேசுகிறாய் என்றே எனக்கு புரியவில்லை என நீண்ட நேரத்திற்கு பின் உண்மையைச் சொன்னேன் என வேடிக்கையாக கூறினார்.
எனக்கு நிச்சயம் இது தெரியும்
மேலும், என்னை யாராவது பெங்காலி மொழியில் பேசச் சொன்னால் ை வார்த்தைகளை மட்டும் சரளமாக பேசுவேன். அது, பெசி ஜானே நா, ஏக்து ஏக்து ஜானே (எனக்கு அதிகம் தெரியாது, மிகக் குறைவாகவே என்னால் புரிந்து கொள்ள முடியும்) என்பது தான் என்றார்.
அமிதாப் - ஜெயா பச்சன் தம்பதி
அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோர் 1973ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர், இப்போது இவர்கள் இருவரும் தங்களது 51 ஆண்டு கால திருமண வாழ்க்கையை நிறைவு செய்துள்ளனர். இவர்களுக்கு அபிஷேக் பச்சன் மற்றும் ஸ்வேதா பச்சன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் இருவரும் சேர்ந்து பன்சி பிர்ஜு, ஜஞ்சீர், அபிமான், மிலி, ஷோலே, சில்சிலா மற்றும் கபி குஷி கபி கம் போன்ற பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் பிறந்ததால் அவர்களை கவனிக்கும் பொருட்டு ஜெயா பச்சன் சினிமாவிலிருந்து விலகினார். பின் இவர், தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.
டாபிக்ஸ்