HBD Huma Qureshi: முதல் படத்திலேயே அஜித்துடன் தவறவிட்ட வாய்ப்பு.. தமிழ் படத்தில் ரஜினியின் காதலி.. ஹூமா குரேஷியின் கதை!
HBD Huma Qureshi: முதல் படத்திலேயே அஜித்துடன் தவறவிட்ட வாய்ப்பு மற்றும் தமிழ்ப் படத்தில் ரஜினியின் காதலியாக கிடைத்த ரோல் என பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியின் கதையை அவரது பிறந்த நாளில் அறிவோம்.

HBD Huma Qureshi: தமிழில் இரண்டே இரண்டு படங்களில் நடித்து இருந்தாலும், அதுவும் டாப் ஹீரோக்களுடன் நடித்து எடுத்த எடுப்பிலேயே முன்னணி நடிகையாக கவனிக்க வைத்தவர், ஹீமா குரேஷி. சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதுபெற்ற ஹூமா குரேஷி, பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும் வலம்வருகிறார். அவரது பிறந்தநாளான இன்று அவரைப் பற்றி அறிந்துகொள்ள எண்ணற்ற விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
யார் இந்த ஹூமா குரேஷி?:
ஹூமா குரேஷி, சலீம் குரேஷி மற்றும் அமீனா குரேஷி தம்பதியினருக்கு 1986ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். தந்தை சலீம் குரேஷி டெல்லியில் 10க்கும் மேற்பட்ட உணவகங்களை நடத்தி வருகிறார். தாய் அமீனா குரேஷி, பிறப்பால் ஒரு காஷ்மீரி, இல்லத்தரசியாக இருக்கிறார்.
ஹூமா குரேஷிக்கு மூன்று சகோதரர்கள் இருக்கின்றனர். அதில் இவரது தம்பி சாஹிப் சலீம், பாலிவுட்டில் நடிகராக இருக்கிறார்.
ஆரம்பத்தில் டெல்லியில் உள்ள கார்கி கல்லூரியில் இளங்கலை வரலாறு படிப்பினை சிறப்புத்தகுதியுடன் முடித்த ஹூமா குரேஷி,சிறிது காலம் மேடை நாடகக்குழுவில் இணைந்து பணியாற்றினார். அதன்பின், சிறிது காலம், என்.ஜி.ஓக்களிலும், சிறிது காலம் ஆவணப்பட இயக்கத்திலும் உதவி இயக்குநராக இருந்தார்.
கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படம் மூலம் நடிகையான ஹூமா குரேஷி, இயக்குநரும் எழுத்தாளருமான முடாசர் அஜீஸுடன் லிவிங் டூ கெதர் உறவில் இருந்தார். மூன்று வருட டேட்டிங்கிற்குப் பின், இந்த ஜோடி 2022ஆம் ஆண்டு பிரிந்தது. அதன்பின், ஹூமா ரச்சித் சிங் என்னும் நடிகருடன் டேட்டிங்கில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஹூமா குரேஷி சினிமாவில் நுழைந்த கதை:
தனது தோழியின் அழைப்பின்பேரில் 2008ஆம் ஆண்டு, ஜங்ஷன் என்னும் திரைப்பட ஆடிசனுக்கு மும்பை சென்ற ஹூமா குரேஷி, அதன்பின், அப்படம் தயாரிக்கப்படாததால், விளம்பரப் படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தார். அதன்பின், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் விளம்பரங்களில் இரண்டு வருடங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார், ஹீமா குரேஷி. அதன்பின், அமீர் கானுடன் சாம்சங் மொபைல் விளம்பரத்திலும், ஷாருக்கானுடன் நெரோலாக் விளம்பரத்திலும் நடித்து பாலிவுட் சினிமா இண்டஸ்டிரியில் பிரபலமானார்.
ஹூமா குரேஷியின், சாம்சங் மொபைல் விளம்பரத்தினை பார்த்து இம்ப்ரஸ் ஆன அனுராக் காஷ்யப், தனது ’’கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்- பகுதி 1 மற்றும் பகுதி 2’’-ல் நவாசுதீன் சித்திக்கின் மனைவியாக ஹூமா குரேஷியை நடிக்கவைத்தார். அதில் இருந்து இவரது திரைவாழ்க்கைத்தொடங்கியது.
திருப்பு முனை தந்த தமிழ்த்திரைப்படங்கள்:
ஹூமா குரேஷி, நடிகர் அஜித் குமாரின் பில்லா 2 படத்தில் நடிக்க 700 பேர்கொண்ட ஆடிசனில் கதாநாயகியாக நடிக்க தேர்வானார். ஆனால், தனது முதல் படமான பில்லா 2 இயக்கத் தாமதம் ஆனதால், உடனடியாக அந்தப் படத்தில் இருந்து விலகி, இந்திக்குச் சென்றுவிட்டார். அதன்பின் தொடர்ச்சியாகப் பல்வேறு படங்களில் நடித்து ஹிட்டடித்த ஹூமா குரேஷி, இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்தில் நடிக்க 2018ஆம் ஆண்டு கமிட் ஆனார். இப்படத்தில் நடிகர் ரஜினியின் இளம் வயது காதலியாக கட்டுக்குழையாமல், தன் காதலை வெளிப்படுத்தியிருப்பார், ஹூமா குரேஷி. அதன்பின், ‘வலிமை’ திரைப்படத்தில், ‘சோபியா’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார்.
கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் தவிர, லவ் சவ் தே சிக்கன் குரானா, ஏக் தி தயான், தேத் இஸ்கியா, பத்லாபூர், ஜாலி எல்.எல்.பி 2, பெல் பாட்டம் ஆகிய இந்தி படங்களில் நடித்து பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகை ஹூமா குரேஷிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

டாபிக்ஸ்