‘இது ஒரு பொன்மாலை பொழுது’ நன்றி மறந்த வைரமுத்து..காபி கொடுத்து அசிங்கப்படுத்திய இயக்குநர்! - ஓப்பனாக பேசிய மகன்!
சூலம் படத்திற்கு முன்னதாகவே நிழல்கள் படம் வெளியாகிவிட்டது. அந்தப்படத்தின் மூலம் கிடைத்த வெளிச்சமானது, வைரமுத்துவின் மீது விழ, பத்திரிகைகள் அவரிடம் சென்று பேட்டி கண்டது. அந்த பேட்டியில் வைரமுத்து தன்னை பாரதிராஜா தான் அறிமுகப்படுத்தினார் என்று கூறிவிட்டார். - பாலாஜி
ஆஸ்கார் மூவீஸ் உரிமையாளரும், இயக்குநருமான எம். பாஸ்கர் அவர்களின் மகன் வைரமுத்து அப்பாவிற்கு செய்த துரோகம் குறித்து மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு பேசினார்.
இளையராஜாவின் சூலம்
இது குறித்து அவர் பேசும் போது, ‘இளையராஜாதான் வைரமுத்துவை அப்பாவிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது அவர், இவர் பெயர் வைரமுத்து, மிக நன்றாக பாட்டு எழுதுவார். இவருக்கு நாம் வாய்ப்பு கொடுக்கலாம் என்று கூற, அவரைப் பார்த்த அப்பா, சிறிது நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து, இளையராஜா சூலம் படத்திற்கு இசையமைத்திருந்த இரண்டு டியூன்களை கொடுத்து, இந்த ட்யூன்களுக்கு பாடல்களை எழுதி வாருங்கள் என்று அனுப்பி வைத்தார். அதனைக்கேட்ட வைரமுத்து, அதற்கான பாடல்களை எழுதி அப்பாவிடம் கொடுத்தார். பாடல் வரிகள் அப்பாவிற்கு மிகவும் பிடித்துப் போக, அதே வரிகள் அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டார். இதையடுத்து வைரமுத்து அப்பாவிடம் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக உங்களுக்கு நன்றி என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, அவர் பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில் கமிட் ஆகி பாடல்களை எழுதியிருந்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மடைதிறந்து’ ‘பொன்மாலைப் பொழுது’ உள்ளிட்ட பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. சூலம் படத்திற்கு முன்னதாகவே நிழல்கள் படம் வெளியாகிவிட்டது. அந்தப்படத்தின் மூலம் கிடைத்த வெளிச்சமானது, வைரமுத்துவின் மீது விழ, பத்திரிகைகள் அவரிடம் சென்று பேட்டி கண்டது. அந்த பேட்டியில் வைரமுத்து தன்னை பாரதிராஜா தான் அறிமுகப்படுத்தினார் என்று கூறிவிட்டார்.
இதைப் பார்த்து அப்பா மிகவும் டென்ஷன் ஆகிவிட்டார். ஆனால் அப்பாவிற்கு சினிமா தொழில் என்பது எப்படி ஆனது என்பது நன்றாகவே தெரியும். இங்கு யார் எப்போது சத்யராஜ் அமாவாசையாக மாறுவார் என்பது தெரியாது. இங்கு வாய்ப்பு கிடைக்கும் வரை ஐயா... அப்பா.... என்பார்கள். வாய்ப்பு கிடைத்த பின்னர் அவர்களது வேலையை காட்ட ஆரம்பிப்பார்கள். அப்படித்தான் வைரமுத்துவும் செய்தார்.
இருப்பினும், அந்த விஷயத்தை அப்பா பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதற்கிடையே, அப்பா தீர்ப்புகள் திருத்தப்படலாம் என்ற படத்தை ஆரம்பித்தார். அந்த படத்திற்கான அறிவிப்பு பத்திரிகைகளில் வந்தது. இதை பார்த்த வைரமுத்து அப்பாவை பார்க்க வந்தார். இதனையடுத்து அப்பாவின் அசிஸ்டன்ட், வைரமுத்து உங்களை பார்க்க வந்திருக்கிறார் என்று சொல்ல, இவர் ஏன் நம்மை பார்க்க வந்திருக்கிறார் என்ற சந்தேகப்பட்ட அப்பா, அவரை உள்ளே வரச்சொல் என்று கூறினார். உள்ளே வந்ததும், வைரமுத்து அவருக்கே உரித்தான தமிழ் பாணியில் நீங்கள் தீர்ப்புகள் திருத்தப்படலாம் என்ற படத்தை ஆரம்பித்து இருப்பதாக கேள்விப்பட்டேன்.
மிக மிக அருமையான தலைப்பு. எனக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தவர் நீங்கள். உங்களுடைய இந்தப் படத்திலும் எனக்கு நீங்கள் வாய்ப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று கேட்டார். இதைக் கேட்ட அப்பா, நீங்கள் அலுவலகத்திற்கு வந்தால், காபி சாப்பிடுங்கள், என்னுடன் சிறிது நேரம் உரையாடுங்கள். ஆனால் உங்களுக்கு வாய்ப்பு எல்லாம் கொடுக்க முடியாது என்றார். இதைக் கேட்ட வைரமுத்து அதிர்ச்சி அடைந்து விட்டார். தொடர்ந்து வைரமுத்து காரணத்தைக் கேட்ட போது, இந்தப்படத்திலும் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல, பதிலடி கொடுத்த அப்பா, நீங்கள் அப்படி நடந்து கொள்ளவில்லையே...
உங்களிடம் உங்களை அறிமுகப்படுத்தியவர் யார் என்று கேட்ட பொழுது, நீங்கள் பாரதிராஜா பெயரை தானே சொன்னீர்கள் என்று சொல்ல, அது வந்து என்று வைரமுத்து இழுத்தார்; உடனே இடைமறித்த அப்பா, நான் பிரச்சினையை வளர்க்க விரும்பவில்லை; இனி உங்களுக்கும் எனக்குமான உறவு என்றைக்குமே தொடராது என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்