இந்திய சினிமா பொக்கிஷம்.. சினிமாவின் பிரமாண்டத்தை கலை வடிவில் வெளிக்காட்டிய கலைஞன் தோட்டா தரணி
சினிமாவுக்கு கதை என்பது எவ்வளவு முக்கியமோ அதை காட்சியாக கலை வடிவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த கலைஞனாக திகழ்கிறார் தோட்டா தரணி. இந்திய சினிமாவின் பொக்கிஷங்களில் ஒருவராக உள்ளார்.
இந்திய சினிமாக்களில் கடந்த 5 தசாப்தங்களாக கலை இயக்குநர், புரொடக்ஷன் டிசைனராகவும், பிரபல ஓவியராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தோட்டா தரணி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாக்களிலும், பாலிவுட் சினிமாவிலும் இவரது கைவண்ணத்தில் ஜொலித்த பிரமாண்ட செட்களும், அரங்குகளும் ஏராளம்.
செட் டிசைன்களில் டீடெயிலிங் காட்டுவதிலும், காட்சி வழியாக கதை சொல்வதிலும் கொண்டாடப்பட்டவராக திகழ்ந்துள்ளார் .
கலைப் பயணம்
தனது வீட்டில் உள்ள எட்டு பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையாக பிறந்தவர் தோட்டா தரணி. 1950 காலகட்டத்தில் புகழ் பெற்ற கலை இயக்குநராக சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய தோட்டா வெங்கடேஷ்வர ராவ் மகன் தான் இவர்.
என்னதான் கலை இயக்குநரின் மகனாக இருந்தாலும், நடிப்பு மீது மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார். சிறு வயதில் ஏராளமான நாடகங்களில் பெண் வேடமிட்டு நடித்துள்ளார். ஆந்திரா மாநிலம் மசூலிபட்டினத்தில் வசித்து வந்து இவர், சென்னைக்கு வந்து அப்போது இயக்குநர்களாக இருந்த சுதான்சு ராய், ஏ.கே. சேகர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.
சினிமா பயணம்
என்னதான் இயக்குநருக்கு உதவியாளராக இருந்தாலும் கலை இயக்குநரின் வாரிசாக இருந்ததால் இயல்பிலேயே ஓவியம் வரைதல், கலை படைப்புகளை உருவாக்குவதில் ஆர்வமாக இருந்துள்ளார் தோட்டா தரணி. இதற்காக பல்வேறு படிப்புகளையும் முறையாக கற்று தேர்ந்துள்ளார்.
1970களில் தெலுங்கில் உருவான நாகமல்லி என்ற படத்தில் செட் டிசைனராக பணிபுரிந்தார். அதன் பின்னர் 1978இல் தெலுங்கில் வெளியான சொம்மோகதிதி சோகோகாதிதி படம் மூலம் கலை இயக்குநர் ஆனார். உலகநாயகன் கமல்ஹாசனின் 100வது படமான ராஜபார்வை படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அந்த காலகட்டத்தில் வெளியாகி கல்ட் கிளாசிக் சினிமா என போற்றப்படும் பல படங்களுக்கு கலை இயக்குநராக இருந்தவர் தோட்டா தரணி தான். மணிரத்னம் இயக்குநராக அறிமுகமான பல்லவி அனு பல்லவி படத்தில் பணியாற்றிய தோட்டா தரணி, தொடர்ந்து அவரது ஆஸ்தான கலை இயக்குநர் ஆனார்.
இதைப்போல் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படங்களான பேசும்படம், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் படங்கள் எல்லாம் இவரது கலை வண்ணத்தில் உருவானதுதான். மணிரத்னம் போல் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர படங்களில் தனது இயல்பான செட்களில் மூலம் வெளிப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்பட டாப் ஹீரோக்களின் சூப்பர் ஹிட் படங்களுக்கு கலை இயக்கமும், புரொடக்ஷன் டிசைனராகவும் இருந்துள்ளார்.
கவனிக்கத்தக்க படங்களும், விருதுகளும்
பத்மஸ்ரீ விருது வென்ற கலை இயக்குநராக இருந்து வரும் தோட்டா தரணி, கமல்ஹாசன் நடித்த நாயகன், இந்தியன் படத்துக்காக சிறந்த கலை இயக்குநர் தேசிய விருது வென்றுள்ளார்.
அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தளபதி, சந்திரமுகி, சிவாஜி படங்களுக்காக தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றுள்ளார். ஆந்திர மாநில அரசின் நந்தி விருது, கேரள மாநில அரசின் விருது, பிலிம்பேர் விருதுகள் வென்றவராகவும் உள்ளார்.
சினிமாவுக்கு கதை என்பது எவ்வளவு முக்கியமோ அதை காட்சியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க உதவும் கலை இயக்கத்தை புதுமையான நுட்பங்களைப் பயன்படுத்தி ரசிகர்களை ஈர்க்கு விதமாக கொடுத்த கலைஞனாக திகழ்ந்த தோட்டா தரணிக்கு இன்று பிறந்தநாள்
டாபிக்ஸ்