19 years of ஜி: கல்லூரி மாணவன் எம்.எல்.ஏவாக உருவானால் நடக்கும் குடைச்சல்கள் தான் 'ஜி’
ஜி திரைப்படம் வெளியாகி 19 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது தொடர்பான கட்டுரையினைக் காண்போம்.

லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் மற்றும் திரிஷா நடித்து பிப்ரவரி 11,2005ஆம் ஆண்டு ரிலீஸான திரைப்படம் தான், ஜி. இந்த திரைப்படத்தின் இசையை வித்யாசாகர் செய்திருக்கிறார். படத்தை நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த எஸ்.எஸ். சக்கரவர்த்தி செய்திருந்தார்.
ஜி திரைப்படத்தின் கதை என்ன?: இறுதியாண்டு கல்லூரி படிக்கும் மாணவர்,வாசு. தனது நண்பர்கள் அருண், உமாசங்கரின் தூண்டுதலால் கல்லூரி தேர்தலில் போட்டியிடுகிறார். அந்த தேர்தலில் உள்ளூர் எம்.எல்.ஏ வரதராஜனின் மகனும் போட்டியிடுகிறார். இதனால், எம்.எல்.ஏவின் கோபத்துக்கு ஆளாகிறார், வாசு. எம்.எல்.ஏவின் கும்பல் வாசுவையும் அவரது நண்பர்களையும் தாக்குகிறது. வாசுவின் அப்பா சீனுவின் பேச்சால் ஊக்கம் ஆகி, கல்லூரி மாணவர்களின் ஆதரவுடன் கும்பகோணம் சட்டமன்றத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார், வாசு.
இதனால் சிட்டிங் எம்.எல்.ஏ வரதராஜன், வாசுவை தேர்தலில் இருந்து வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டிப் பார்க்கிறார். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார், வாசு. இறுதியில் வாசு எம்.எல்.ஏவாக தேர்வாகிறார். அப்போது, எரிச்சலான வரதராஜன், பள்ளியை எரித்து பழியை எம்.எல்.ஏ வாசு மீது போடுகிறார். இதனால் 7 ஆண்டு சிறைத்தண்டனை பெறுகிறார், வாசு. அதன்பின் வெளியில் வரும் வாசு, வரதராஜனை பழிவாங்குவது தான் படத்தின் மீதிக் கதை.
வாசுவாக அஜித் குமாரும், வரதராஜனாக சரண் ராஜூம், வாசுவின் அப்பா சீனுவாக விஜயகுமாரும் வாசுவின் நண்பன் அருணாக நிதின் சத்யாவும், உமா சங்கராக வெங்கட் பிரபுவும் நடித்து இருந்தனர். பின், வாசுவின் காதலி புவனாவாக, த்ரிஷா நடித்திருந்தார். படம் வெளியாகி 19ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.
ஜி படத்துக்கு வந்த சிக்கல்கள்: ‘ரன்’ படத்தின் இயக்கத்திற்குப் பின், இப்படத்திலும் மாதவன் நடிப்பதாக அறிவித்தார்,லிங்குசாமி. ஆனால், தேதி பிரச்னைகளால் பின் வாங்கினார், மாதவன். பின், ஸ்ரீகாந்த் நடிக்க அவரை அணுகினார், லிங்குசாமி. பின்னர் அவரையும் கமிட் செய்யவில்லை. இறுதியாக தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தியின் பரிந்துரையின்பேரில், அஜித்குமாரை நடிக்க உறுதிப்படுத்தினார், லிங்குசாமி. மேலும், ஜனவரி 2004ல் படத்தின் ஸ்கிரிப்ட் தொடர்பாக அஜித்துக்கும் லிங்குசாமிக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. ஜி படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், மார்ச் 2004ல், ஏ.ஆர். முருகதாஸின் மிரட்டல் படத்தில் பணிபுரிய சென்றார், அஜித். லிங்குசாமியும் சண்டக்கோழி படத்துக்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டார். பின் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின், ஜூலையில் மீண்டும் அஜித் நடிக்கத்தொடங்கினார். அப்போது தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பணப்பிரச்னையும், அஜித்துக்கு ஏற்பட்ட காயமும் சூட்டிங்கை பாதித்தன. இதனால், படம் தாமதம் ஆனது. இறுதியாக பிப்ரவரி 11, 2005ல் இப்படம் ரிலீஸானது.
படம் 95 சதவீதம் முடியும்போது, படம் நிச்சயம் ஓடாது என்பதைத் தான் உணர்ந்ததாக இயக்குநர் லிங்குசாமி கூறியிருந்தார். அதுபோலேயே படத்திற்கு மாஸ் ஓப்பனிங் இருந்தாலும், ஹிட்டாகவில்லை.
படம் ஹிட்டாகவில்லையென்றாலும் ஜி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றும் கேட்கும் ரகம். குறிப்பாக, வித்யாசாகர் இசையில், டிங் டாங் கோயில் மணி கோயில் மணி, கிளியே கிளியே கிளியக்கா, வம்ப வேலைக்கு வாங்கும்வயசுடா போன்ற பாடல்கள் இன்றும் செம ஃபிரெஷ்ஷாக இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்